சந்தியா ஷங்கர்/உணர்வுகள் உணரப்படுவதில்லை

WriterSCafe எழுத்தாளர் சங்கமம் சார்பாக வெளியிடப்பட்ட “கோட்ட வூடு” என்ற இரண்டாவது சிறுகதை தொகுப்பில் இருந்து திருமதி சந்தியா ஷங்கர் எழுதிய ” உணர்வுகள் உணரப்படுவதில்லை ” என்ற சிறுகதை உங்கள் வாசிப்பிற்கு:


ராத்திரி மணி பன்னிரெண்டு. மாதவி அந்த மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடலின் ரிசப்ஷனில் அமர்ந்திருந்தாள். நேற்றைய முன்தினம், சாயங்காலம், அவளின் மாமனாருக்கு உடல்நலம் மோசமாகி, அவளும், அவள் கணவர் ராக்கேஷும் இந்த ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் அவரை சேர்த்தார்கள்.
மாமனார் கல்யாண மூர்த்திக்கு வயது எழுபத்தைந்து. வயதிற்க்கே உரிய உபாதைகள் அவருக்கும் இருந்தது. பிபி, சக்கரை வியாதி மற்றும் இருதயமும் சிறிது பலவீனமாக இருந்தன. என்ன தான் டாக்டர்கள் சொல்படி, மருந்துகள் உட்கொண்டு ஆரோக்கியமான சாப்பாட்டை சாப்பிட்டாலும் சில சமயங்களில் உடம்பு நம்மை மீறி உபாதைகளுக்கு ஆளாகிறது.
அந்த மாதிரி தான் கல்யாண மூர்த்திக்கு திடீரென மார்பில் வலி வந்து மூச்சு விட சிரமம் பட்டபோது, அவர் மகன் ராக்கேஷும், மருமகள் மாதவியும் ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தார்கள். டாக்டர்கள் பரிசோதித்து விட்டு மைல்ட் அட்டாக் தான். நாங்கள் ட்ரீட்மெண்ட் குடுக்கிறோம். இருபத்திநாலு மணிநேரம் தாண்டினால் தான் சொல்ல முடியும் என்று கூறி விட்டார்கள்.
மற்றும் ஐசியுவில் அடெண்டர் தங்க அனுமதி இல்லை. யாராவது ஒருத்தர் இங்கிருந்தால் போதும். என்று சொல்ல, மாதவி தான் ஆஸ்பத்திரியில் தங்குவதற்கு முன் வந்தாள். அவள் கணவன் வீட்டிற்கு சென்று விட்டான்.
ராகேஷ் ஒரு மல்டி நேஷனல் கம்பெனியில் டைரக்டர் போஸ்டில் இருந்தான். சிறுவயதிலேயே அவன் அம்மா இறந்து விட, அப்பா கல்யாண மூர்த்தி தான் அம்மாவாகவும், அப்பாவாகவும் வளர்த்தார். தாயில்லா குழந்தை என்று சிறிது செல்லமாய் வளர்க்கப்போய் அவன் முன் கோவக்காரனாகவும் பிடிவாதக்காரனாகவும் ஆனான்.
கல்யாண மூர்த்தி ஒரு காலேஜில் லெக்சரராக பணி புரிந்து ரிடையர் ஆனவர். அதனாலோ என்னவோ மகனை நிறைய படிக்க வைத்தார். அவரின் அளவு கடந்த பாசத்தினால், மகனின் கோபமும், பிடிவாதமும் அவருக்கு பெரிசாக தெரியவில்லை.
எல்லாம் கல்யாணம் ஆகி பொறுப்பு வந்தால் சரியாகும் என்று நினைத்து, அவனுக்கு ஒரு நல்ல பொண்ணாக பார்த்து கட்டி வைத்தார்.
மருமகள் மாதவி மூர்த்தியின் நண்பரின் மகள். மாதவி அழகான பெண். கூடவே நல்ல குணவதி. மாமனாரை தன் அப்பா மாதிரி பார்த்துக்கொண்டு, வீட்டில் பொறுப்பாகவும் இருந்தாள். அவள் கணவனின் போக்கு, அவளுக்கு வேதனையை தந்தாலும், அதை வெளிக்காட்டாமல் புன்சிரிப்புடன் வளைய வந்தாள்.
மாமனார் மூர்த்தி இதை கவனிக்காமல் இல்லை. தான் தப்பு கணக்கு போட்டு விட்டோமோ! ஒரு சாதுவான பெண்ணின் வாழ்க்கையை கெடுத்து விட்டோமோ! என்று பல தடவை வருத்தப்பட்டிருக்கிறார். மகனிடம் இதைக்குறித்து பேசினால், “அப்பா! மாதவிக்கு இங்க என்ன குறை? அவள் நினைத்தபடி தானே இருக்கா? இங்கே மாமியார் கொடுமையா; இல்லை நாத்தனார்கள் இருக்கார்களா? இல்ல நானும், நீங்களும் சமையல பத்தி ஏதாவது கொறை சொல்லறோமா? ஏதோ போட்டதை தின்னுட்டுத்தானே இருக்கோம்.
“நீங்க சொல்லறபடி என்னால இவ கூட டைம் ஸ்பெண்ட் பண்ண முடியாது. எனக்கு ஆபிஸ் வேலை நிறைய இருக்கு. தினமும் ஒரு மீட்டிங்; இல்ல க்ளைண்ட்டை பாக்க போகனும். இப்படி நிறைய பொறுப்பு இருக்கு. மாதவி தான் எங்க வேணா போய் வரலாமே, நான் என்ன செலவழிச்ச ஏதுன்னு கணக்கா கேக்கறேன்?” என்று மூஞ்சியில் அடித்தா மாதிரி பேசிவிட்டு போய் விடுவான்.
மாதவி, ‘கல்யாணம் என்றால் கணவனுடன் உல்லாசமாக வெளியில் போகலாம், நிறைய கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளலாம். நாம் வித விதமான சமையல் பண்ணி அவனை அசத்தலாம் என்றெல்லாம்,’ கனவு கண்டாள். எல்லாம் வீண் என்று கல்யாணமான ஒரு வருடத்தில் புரிந்தது அவளுக்கு. மௌனமாக தன் அறையில் உட்கார்ந்து அழுவாள்.
மாமனார் அவளை சமாதானப்படுத்த முயன்று தோத்துப்போவார். மாதவி தன் உணர்ச்சிகளை வெளிக்காட்ட மாட்டாள். என்ன பிரயோஜனம்? நெருங்கிய சினேதி என்று யாரும் கிடையாது; தன் பெற்றோர்களிடம் சொல்ல தயக்கம்.
கணவன் மனைவிக்குள் இருக்கும் கூடல், ஊடல் எல்லாம் புத்தகத்தில் எழுதத்தான் என்று நினைத்து கிட்டத்தட்ட ஒரு விரக்தி நிலையில் இருந்தாள்.
சரி அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தாலாவது நிலமை மாறும் என்று நினைத்தால், கடவுள் அங்கயும் அவளை சோதித்தார். கல்யாணம் ஆகி அவர்களுக்கு ஆறு வருடம் ஆயாச்சு. மாதவி வேண்டாத தெய்வமில்லை, பண்ணாத பூஜை இல்லை. பிள்ளை வரம் இன்னும் கிடைக்கவில்லை. டாக்டர்களும் ‘உடம்பில் ஒரு ப்ராப்ளம் இல்லை. இருவரும் மனசார விருப்பப்பட்டு இணைந்தால் தான் குழந்தை உண்டாகும். அது இவர்களின் கையில் தான் இருக்கிறது,’ என்று சொல்லி விட்டனர்.
கணவன், மனைவி என்பது வெறும் தாலி பந்தம் மட்டுமே இல்லை. அவர்கள் இருவரின் உணர்வுகள், புரிதல், மனம் விட்டு விருப்பையும், வெறுப்பையும் பகிர்வது தானே தாம்பத்யம். ஏனோ தானோ என்று ஸ்ட்ரெஸ் பஸ்டர் மாதிரி நினைத்து உறவு கொண்டால் எப்படி கருதங்கும்?
தினமும், காலையில் இயந்திர ஓட்டம் ராக்கேஷுக்கு. மாதவி அவனுக்கு காபி போட்டு கையில் குடுத்து, தானும் குடித்து, குளித்து அடுப்படியில் டிபன், மத்திய சாப்பாடு, பின் மாமனாருக்கு பத்திய சாப்பாடு என்று பம்பரமாக செய்து முடிப்பாள். இதற்கிடையில் ராக்கேஷுக்கு ஆபிஸ் போகும் போது எதையும் மறக்காமல் இருக்க எள்ளு என்றால் எண்ணெயாக இருப்பாள்.
சிலமுறை, மாதவி நினைத்துப்பார்ப்பதுண்டு. ‘நான் இல்லாமல் இந்த மனுஷன் கஷ்டப்படனும். அப்பத்தான், இவருக்கு என் அருமை புரியும்,’ என்று. ஆனால் அடுத்த நாள் அதே ரூட்டீன் தொடரும். மாமனார் அவளிடம் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். “அம்மா மாதவி அவனுக்கு கொஞ்சம் பொறுப்பு வரட்டும் மா! அவனை தனியாக எல்லாம் பண்ணவிடு.” “அப்பா! எங்களுக்கு குழந்தை இல்லை. அவர் தான் இப்ப எனக்கு குழந்தை. நீங்க இரண்டாவது குழந்தை. வேறு என்ன வேணும் எனக்கு”? சொல்லும் போதே அவள் கண்கள் கலங்கும்.

மூர்த்திக்கு இதையெல்லாம் பார்த்து விட்டு தன் இயலாமையை நினைத்து வருத்தப்படுவார். அப்படி வருத்தப்பட்டு அவருக்கு பிபி ஏறி, இதோ மைல்ட் அட்டாக் என்று ஆஸ்பத்திரியில் வந்தாச்சு.
திடீரென ஏதோ சத்தம் கேட்டு ரிசப்ஷன் சேரிலேயே உறங்கிய மாதவி, யாரோ அவளை கூப்பிடரமாதிரி இருக்கவே, கண் முழித்து சுற்றிப்பார்த்தாள். இரண்டு சேர் தள்ளி, ஒரு முதியவர் உக்கார்ந்து இருந்தார். அவர் கையில் ஒரு பேக், ஒரு ஃபைல் மற்றும் ஒரு குடை. அவரும் உக்காந்த படியே தூங்கி ஆடினார்.
மாதவிக்கு தன் மாமனாருக்குத்தான் ஏதோ ஆபத்தோ என்று லிப்டை நோக்கி ஓடினாள். லிப்ட் வர லேட்டானதும், கிடுகிடுவென படியேறி ஐந்தாவது மாடியில் ஐசியுவை நோக்கி ஓடினாள். ஒண்ணு இரண்டு கதவுகளைக்கடந்து தன் மாமனாரின் பெட் அருகே போய் கர்டனை நீக்கி பார்த்தாள்.
அவர் நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தார். நைட் டுட்டி நர்ஸ் வந்து, ‘என்னாச்சு’ என்று கேட்டதும் “ஏதோ சத்தம் கேட்டு ஓடி வந்தேன். இவரின் ஆக்சிஜன் மாஸ்க் ஏன் எடுத்திருக்கு”? என்று கேட்க, ‘மேடம், ராத்திரி ரவுண்ட்ஸ் டாக்டர் வந்து செக்கப் பண்ணிட்டு இப்ப இவர் கண்டிஷன் ஸ்டேபலாக இருக்கு. நாளை வார்டுக்கு ஷிப்ட் பண்ணிடுவாங்க. மார்னிங் டூட்டி டாக்டர் பாத்துட்டு மத்த விவரம் சொல்லுவார். நீங்க போய் ரெஸ்ட் எடுங்க”! என்று சொல்லி அவளை அனுப்பினாள்.
மாதவி திரும்பி வெளியேறும் போது அவள் மாமனாரின் பெட்டுக்கு இரண்டு பெட் தள்ளி டாக்டர்களும், நர்ஸ்களும் கூட்டமாக ஒரு பேஷண்ட்டை கவனித்துக் கொண்டிருந்தார்கள். பக்கத்தில இருந்த நர்ஸிடம், ‘யாரு, என்னாச்சு,’ என்று கேட்டாள். நர்ஸ அதுக்கு, “பாவம் இது ஒரு லேடி பேஷண்ட். நுரையீரலில் கேன்சர்; மூணாவது ஸ்டேஜ். கவனிக்காமல் இருந்து விட்டார்கள். இப்ப நிலமை சீரியஸ். நாளை வரை கூட தாண்டுமோ என்று தெரியவில்லை. இவங்க கணவர் பாவம். வயதான காலத்தில் அவருக்கு இப்படி ஒரு நிலைமையா?” என்று நர்ஸ் சொன்னதும் மாதவிக்கு பேச்சு வரவில்லை.
மாதவி எப்பவும் கோபத்தில் நினைப்பாள்! நான் போனபின் தான் ராகேஷுக்கு என் அருமை புரியும் என்று. அது எவ்வளவு தப்பு என்று உணர்ந்தாள். இந்த லேடியோட கணவர் பாவம் என்ன கஷ்டபடுகிறாறோ? நாம ஏன் இப்படியெல்லாம் நினைக்கிறோம்? நல்லதே நினைப்போம் என்று லிப்டில் இறங்கி மறுபடியும் ரிசப்ஷனில் வந்து அமர்ந்தாள்.
அதற்குள் இரண்டு சேர் தள்ளி உட்கார்ந்திருந்த முதியவர் “ஏம்மா இப்படி ஓடின? என்னாச்சு? எல்லாம் சரி தானே”? என்று கேட்டார். மாதவி நினைவுகளிருந்து வெளியே வந்து, “ஆமாம் அங்கிள். என்னோட மாமனார் இரண்டு நாள் முன் ஹார்ட் அட்டாக் வந்து அட்மிட் ஆயிருக்கார். ஏதோ சத்தம் கேட்டு அவருக்கு என்னமோன்னு பயந்து ஓடினேன். அவருக்கு ஒண்ணுமில்லை எல்லாம் என் மன பிராந்தி தான் என்று தெரிந்து பார்த்து விட்டு திரும்பி வந்தேன். நீங்க இங்க எப்படி? உங்கள்ளுக்கு வேண்டப்பட்டவா யாராவது இங்க இருக்காங்களா? நீங்க தனியா வேற இருக்கீங்க?” என்று கேட்டதும்..
அந்த முதியவர் பேச ஆரம்பித்தார்.
“ஆமாம்மா! என் மனைவி. அவளுக்கு நுரையீரல் கேன்சர். தெரியாமலே போய்ட்டுது. பாவம் கொஞ்ச நாளா இருமிட்டே இருந்தா. நானும் என்னலாமோ மருந்து வாங்கிக்குடுத்தேன். சரியாகல. ஆஸ்பத்திரிக்கு போலாம்னா வரவே மாட்டா. டாக்டர் ஏதாவது சொல்லிட்டா, என் மனசு கஷ்டபடுமேன்னு அவளுக்கு கவலை.”
“அங்கிள்! உங்க குழந்தைகள் எங்க இருக்காங்க? அவங்க சொன்னா கேப்பாங்களே ஆண்டீ?” என்று மாதவி கேட்டாள். “எனக்கு இரண்டு குழந்தைகள். ஒரு பையன் இன்ஜினியர். கல்யாணம் ஆகி குழந்தை இருக்கு அவனுக்கு. இன்னொரு மகள். அவளுக்கும் கல்யாணம் ஆகி விட்டது. இனிமேல் தான் குழந்தை பிறக்கனும். இருவரும் வெளி நாட்டில் இருக்கிறார்கள்.”
“நான் ஒரு கம்பெனியின் மேனேஜர் போஸ்டில் வேலை பார்த்தேன். என் மனைவி துர்கா ஒரு அன்பான பண்பான பெண்மணி. தனது வாழ்நாள் முழுவதும், குடும்பம், குழந்தைகள் என்று அர்ப்பணித்து விட்டாள். நானும் என் ஆபிஸ் வேலை மற்றும் குடும்பத்தினருக்காக காசு சம்பாதிப்பதிலேயே நேரம் பூராவும் செலவழித்தேன்.”
“என் துர்காவுடன் பேச கூட எனக்கு டைம் இருக்காது. அவளாக பேச வந்தால் கூட வேலையை காரணம் காட்டி கவனிக்க மாட்டேன். அவளுக்கு ஆசை என்று ஒண்ணுமே இல்லை. அவள் உலகமே நானும் குழந்தைகளும் தான். அவள் இல்லைனா நான் என்ன ஆயிருப்பேனோ தெரியாது.”
“எங்களுக்கு மனஸ்தாபம் வந்தால் துர்கா ஆதங்கத்துடன் சொல்லுவாள். “ஒரு நாள் நான் இல்லாமல் போனா தான் உங்க எல்லாருக்கும் அருமை தெரியும்,” என்று. நானும் வீம்புக்கு “உன்னை யாரும் வச்சுக மாட்டாங்க; என் கூட தான் நீ குப்பை கொட்டனும்,” என்று.
“இப்ப நான் ரிடையர் ஆயாச்சு. குழந்தைகள் கல்யாணமாகி அவங்க, அவங்க குடும்பத்தில் பிசி. இப்ப நானும், என் துர்காவும் தான். இனி அவளை நல்லா பாத்துப்பேன். அவளுக்கு நல்லா உதவி பண்ணுவேன் எங்க சின்ன வயதில் அனுபவிக்காததை இனிமே அனுபவிக்கனும் என்று இருந்தேன். அதற்குள் இப்படி ஆயிட்டுதே!” என்று கண்ணீர் விட்டு அழுதார், கணேஷ்.
“எல்லா கடவுளையும் வேண்டிக்கிறேன். துர்கா சீக்கிரம் குணமாகணும் என்று. கடவுள் அவளுக்கு இரக்கம் காட்டுவார். அவள் இல்லாமல் நான் எப்படி இருப்பேன் தெரியலையே? நீயும் ப்ரார்தனை பண்ணுமா. என் துர்காக்காக,” என்று கை கூப்பி யாசித்தார்.”
இப்படி பேசி பேசியே மணி மூன்று ஆனது. அந்த பெரியவர் மாதவியை பார்த்து, “அட மணி மூணா? டைம் போனதே தெரியவில்லை. சாரி மா! நானும் உன்கிட்ட ஏதேதோ பேசி கிட்டே இருந்து விட்டேன். நீ என் பொண்ணு மாதிரி மா. நீயும் டயர்டா இருப்பேன்னு நினைச்சே பாக்கல. சரி கண்ணை மூடி கொஞ்சம் தூங்கலாம்.” என்று சொல்லவும் இருவரும் அப்படியே சேரில் சாய்ந்து தூங்கினார்கள்.
திடீரென மாதவி கண் முழித்தாள். தனது வாட்சில் டைம் பார்த்தாள். மணி எட்டு. ‘அய்யோ! இவ்வளவு நேரம் தூங்கிடோமே,’ என்று நினைத்து எழுந்து அங்கிளை பார்த்தாள். அவரும் தூக்கத்தில் இருந்தார். இதற்கிடையே நர்ஸ் வந்து ஒரு ப்ரிஸ்க்ரிப்ஷன் குடுத்து மருந்துகளை வாங்கிட்டு வரச் சொன்னாள். மாதவி எழுந்து வாஷ்ரூம் போய் பல்லு தேச்சு ஃப்ரெஷ் ஆனாள். முகம் துடைத்து, தலைவாரி ஒரு க்ளிப் போட்டு ஆஸ்பத்திரிக்கு வெளியே வந்தாள்.
பக்கத்தில் இருந்த மெடிக்கல் கடையில் அந்த மருந்துகளை வாங்கிட்டு, அப்படியே சிறிது தூரம் நடந்தாள்.
அங்கு ஒரு டீ, காபி கடை இருந்தது. ந்யூஸ் பேப்பர்களும் வித்துக்கொண்டிருந்தார்கள். ஒரு டீ வாங்கி குடித்து விட்டு மாமனாருக்கு ந்யூஸ் பேப்பர் படிக்க ரொம்பப்பிடிக்கும் என்று வாங்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு நடந்து வந்தாள். இரண்டு நாட்கள் கழித்து வெளியே வந்தது அவளுக்கு இனிமையாக இருந்தது. ப்ரஷ் காத்து ச்வாசிக்க நன்றாக இருந்தது. எனினும் கடமையை மறக்க முடியாதே.
மறுபடியும் ஆஸ்பத்திரியில் நுழைந்தவுடன் மைக்கில் அவள் பெயர் சொல்லி அழைப்பு வந்தது. ஒரு வித பதற்றத்துடன் ரிசப்ஷன் நர்ஸிடம் என்னாச்சு என்று கேட்டாள். “டாக்டர் ரவுண்ட்ஸ் வந்திருக்கார். உங்க கணவரும் மேல தான் உங்க மாமனாரிடம் இருக்கார். யாரு பேஷண்ட் கூட இருக்கிற அடெண்டர் என்று கேட்டார். உங்களை காணவில்லை. அதனால் மைக்கில் அனவுன்ஸ்மெண்ட் பண்ணாங்க. ஒண்ணும் பயப்பட வேண்டாம். போங்க,” என்று நர்ஸ் சொன்னதும் அந்த மருந்து கவரையும் எடுத்துக்கொண்டு லிஃப்ட் நோக்கி ஓடினாள்.
மேலே ஐந்தாவது மாடியில் மாமனார் ருமில் டாக்டர் மற்றும் அவள் புருஷன் ராக்கேஷும் இருந்தார்கள். பயந்து போய் மாமனாரை பார்த்தாள். அவர் பெட்டில் உட்கார்ந்திருந்தார். மாதவியை பார்த்ததும் புன் சிரிப்புடன் கூப்பிட்டார். “அப்பா! எப்படி இருக்கீங்க? நான் பயந்து போய்ட்டேன். இந்தாங்க ந்யூஸ் பேப்பர். உங்களுக்காக வாங்கி வந்தேன்,” என்றதும் ராக்கேஷ் அவளிடம் கோவத்தில் டாக்டர் இருப்பதைக்கூட மறந்து கத்தினான்.
“மாதவி! எங்க போன? உன்ன மருந்து வாங்கத்தானே நர்ஸ் அனுப்புனாங்க? நீயானா, வெளியே சுத்திட்டு ந்யூஸ் பேப்பர் வாங்கிட்டு வர. உனக்கு பொறுப்பு வேண்டாமா? நான் எவ்வளவு நேரமா காத்திருக்கிறேன்.” உடனே அப்பாவிடம் திரும்பி “நீங்க தான் பேப்பர் வாங்க சொன்னீங்களா? மாதவிக்கு ரொம்ப இடம் குடுக்கறீங்க, “என்று பொரிந்தான்.
பக்கத்தில் இருந்த டாக்டர் இதையெல்லாம் பார்த்து விட்டு,”ரிலாக்ஸ் மிஸ்டர் ராகேஷ்! உங்கப்பா அவுட் ஆஃப் டேஞ்சர் நவ். இன்னிக்கே வார்டுக்கு ஷிப்ட் பண்ணரோம். இன்னும் இரண்டு நாட்களில் அவரை டிஸ்சார்ஜ் பண்ணரோம். பட் டயட் கண்ட்ரோல் அண்ட் மெடிசின்ஸ் ஸ்ட்ரிக்ட்லி ஃபாலோ பண்ணனும்,” என்று சொல்லி விட்டு போய் விட்டார்.
ராக்கேஷும் டாக்டருக்கு நன்றி சொல்லிட்டு அப்பாவிடம் சொல்லிக்கொண்டே, மாதவியிடமும் அப்பாவை ஜாக்கிரதையாக பாத்துக்கச்சொல்லி விட்டு ஆபிஸுக்கு போக வெளியேறினான். அதுவரை அடக்கியிருந்த கண்ணீர் மாதவியின் கண்களில் வழிந்தது. மாமனார் மூர்த்தி, “விடும்மா! அவனைத்தான் தெரியுமே! நீ சங்கடப்படாதே. ஏதாவது சாப்பிட்டியா?”
” இல்லைப்பா என்றதும்!”
“போம்மா! போய் ஏதாவது சாப்புடு. என்னால உனக்கு எவ்வளவு கஷ்டம்!”! என்று மனம் வருந்த பேசினார். மாதவி உடனே அவர் அருகில் வந்து கையை பிடித்துக்கொண்டு “அப்பா அப்படியெல்லாம் சொல்லாதீங்க! எனக்கும் உங்களையும் ராகேஷையும் விட்டா யார் இருக்கா? ராகேஷ் மேல கோவம் தான். ஆனா என்ன பண்ண? வேணும் என்று செய்யலை அவர். சுபாவம் அப்படி! ஐ ஆம் ஆல்ரைட்ப்பா,” என்று சொல்லி விட்டு திரும்பி போகும் போது இரண்டு பெட் தள்ளி அந்த அங்கிளின் மனைவிக்கு எப்படி இருக்கு என்று எட்டிப்பார்த்தாள்.
டாக்டர்கள் அவள் உடலில் இருந்து லைஃப் சேவிங் உபகரணங்களை எடுத்து விட்டு முகத்தை வெள்ளை போர்வையில் மூடினார்கள். மாதவிக்கு ஒரே அதிர்ச்சி. அங்கிள் பாவம். என்னலாம் கனவு கண்டார். இந்த வயசு காலத்தில அவருக்கு இப்படி ஒரு நிலைமையா? அவர் சொன்ன மாதிரி ஆண்டியின் ஆதங்கம் பலித்து விடுமோ? “நான் இல்லாமல் தனியாக இருந்தாத்தான் உங்களுக்கு என் அருமை தெரியும்,” என்ற ஆதங்கம்.
‘நானும் சில சமயம் ராகேஷிடம் கோவப்பட்டு மனசுக்குள் அந்த மாதிரி புலம்பியிருக்கேன். கடவுளே என்னை மன்னித்து விடு. உறவுகளின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிவதில்லை. வீம்பு, பிடிவாதம் உணர விடுவதில்லை.’
கிடு, கிடு என்று லிப்டில் இறங்கி வந்தாள். அதற்குள அங்கிளுக்கு விஷயம் தெரிந்து விட்டிருந்தது. துர்கா ஆண்டியின் சடலத்தை ஸ்ட்ரெச்சரில் கொண்டு வந்து அவருக்கு காட்டி விட்டு மார்ச்சுவரி கொண்டு போக எத்தனித்தார்கள்.
அங்கிளுக்கு துக்கத்தை அடக்க முடியாமல் சத்தமாக அழுதார். மாதவி ஓடி வந்து அவரை தாங்கிப்பிடித்தாள். அவரை சமாதானப்படுத்த முயன்றாள்.
உணர்வுகளை உணருவதற்குள் கால தாமதம் ஆகி விடுகிறது.

சந்தியா ஷங்கர்
திருமதி சந்தியா ஷங்கர் பிறந்தது, வளர்ந்தது டில்லியில். தற்போது சென்னையில் வசிக்கிறார். இவருக்கு பள்ளி பருவத்திலிருந்தே கவிதைகள், கட்டுரைகள் மற்றும் கதைகள் ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் எழுதும் ஆர்வம் உண்டு. எழுதி பரிசுகளும் வாங்கியுள்ளார்.
தற்போது எழுத்தின் மீது உள்ள அதீத ஆர்வத்தினால், முகநுலில் சில குழுமங்களில் போட்டிக்கான கதைகளையும், கவிதைகளையும் எழுதி சிலவற்றிற்கு பரிசுகளும் பெற்றுள்ளார்.
கல்கி ஆன்லைன் நடத்திய ‘55 வார்த்தைகளில் மினி கதை’ எழுதும் போட்டியில் இவரின் ‘தாயன்பு’ என்ற கதை வெற்றி பெற்றிருக்கிறது.
இவர் எழுதிய சிறுகதைகள் “பிள்ளை கனியமுதே” என்கிற தொகுப்பாக வெளிவந்துள்ளது. அசோகமித்ரன் நினைவாக அழகிய சிங்கர் நடத்திய போட்டியில் “டெமன்ஷியா” என்கிற சிறுகதை மற்ற சிறுகதைகளுடன் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது.
இவர் எழுதிய நிறைய தமிழ் மற்றும் ஹிந்தி கவிதைகள் பரிசு பெற்றுள்ளன. இவர் சில நாவல்கள் மற்றும் நகைச்சுவை உணர்வு உள்ள கதைகளும் எழுதியுள்ளார்.
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, மகிழ்ச்சி FM, 2025 ம் வருடம் சமூக அக்கறையோடு பணியாற்றியமைக்காக ‘தங்கத்தாரகை’விருது, எனும் விருதை இவருக்கு அளித்து, கவுரவப்படுத்தினார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன