WriterSCafe எழுத்தாளர் சங்கமம் சார்பாக வெளியிடப்பட்ட “கோட்ட வூடு” என்ற இரண்டாவது சிறுகதை தொகுப்பில் இருந்து திரு எம். சங்கர் எழுதிய ” கூடி வாழ்ந்தால்! ” என்ற சிறுகதை உங்கள் வாசிப்பிற்கு:

நவம்பர் மாதத்திலேயே ஆரம்பித்து விட்ட கடுங்குளிரில் கிளீவ்லண்ட் நகரமே வெள்ளைப் போர்வை போர்த்திக் கொண்டிருந்தது. “புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது,” என்று எழுதினால் அந்தப் பாட்டை எழுதிய கவிஞர் கேஸ் போடலாம் என்ற பயமிருந்தாலும், அதை எழுதாமல் இருக்க முடியவில்லை. ஏனென்றால் வெள்ளை மழை பொழிவதென்னமோ உண்மைதான். வெளியில் அவ்வளவு குளிர் இருந்தாலும், வீட்டுக்குள் 75 டிகிரி ஃபாரன் ஹீட்டில் ஹீட்டரை செட் பண்ணியதால் லதா மற்றும் சுரேஷ் சகஜமாக வீட்டுக்குள் காலை நேரத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள். இருவருமே வேலை பார்ப்பதால், வீட்டு வேலைகளை இருவருமே ஷேர் செய்து கொண்டு சமாளிக்க வேண்டும். காலையில் அவர்களுடைய இரண்டு வயது மகன் ஸ்லோக்கை குளிப்பாட்டி, டிரஸ் போட்டு, ஸ்கூலுக்கு அனுப்பத் தயார் செய்வது சுரேஷ் வேலை; அதே சமயம் அவர்கள் எல்லோருக்கும் காலை உணவு தயார் செய்து ஸ்லோக்கின் ஸ்கூல் பேக்கை சரி செய்து கொடுப்பது லதாவின் வேலை. பொதுவாக இந்த சமயத்தில் அவர்கள் பேசிக்கொள்ளக்கூட நேரமில்லாமல் மிகவும் பரபரப்பாக இருப்பார்கள். மூன்று பேரும் ஒரே சமயத்தில் காரில் கிளம்பி ஸ்லோக்கை ஸ்கூலில் விட்டு விட்டு இருவரும் அவரவர் ஆபீசுக்கு போய்ச்சேர வேண்டும்.
அந்த சமயத்தில் தான் சுரேஷின் மொபைல் ஒலித்தது. வெறுப்புடன் ஃபோனை எட்டிப் பார்த்த சுரேஷ் அதில் “ அம்மா” என்று ஒளிர்ந்ததைப் பார்த்ததும் பதட்டத்துடன் எடுத்து, “ என்னாச்சு அம்மா? இந்த சமயத்தில கூப்பிடற? உடம்பு சரியில்லையா?” என்றான் படபடப்புடன்.
கிச்சனில் சான்ட்விச் பண்ணிக்கொண்டிருந்த லதா, இந்த சப்தம் கேட்டு அவசரமாக சுரேஷ் அருகில் வந்து அவனைக் கவலையுடன் நோக்கினாள். அவன் முகத்தில் தெரிந்த அமைதியும், அவன் கண்களால் கவலைக்கு ஒன்றும் இல்லை என்ற சமிக்கைகளையும் பார்த்து, அவள் மீண்டும் கிச்சனுக்குச் சென்றாள். அதன் பிறகு அவர்கள் வேலை மும்முரத்தில் ஈடுபட்டதால் வீட்டை விட்டு காரில் ஏறி கிளம்பும் வரை பேசிக் கொள்ளவில்லை.
“ அம்மா என்ன சொன்னா?” கார் சீராக போனவுடன் லதா கேட்டாள்.
“என்னை ஒரு நடை கோயம்பத்தூருக்கு ஷார்ட் விசிட் பண்ணச் சொல்றா. ஹேமாவையும் வரச் சொல்லியிருக்காளாம். ரெண்டு பேர்ட்டையும் பேசனும்மா”
“ என்னாச்சு சடன்னா? உடம்பு கிடம்பு சரியா இல்லையா?”
“உடம்பெல்லாம் சரியாத்தான் இருக்காம். பக்கத்துல உள்ள லாயரோட பேசினாளாம். உங்களோட கொஞ்சம் டிஸ்கஸ் பண்ணனும்னு சொல்றா- ‘எனக்கு என்ன தோன்றதுனா கொஞ்ச நாளாவே என் பேர்ல உள்ள சொத்தையெல்லாம் உனக்கும், ஹேமாக்கும் பிரிச்சு கொடுத்துட்டேன்னா நிம்மதியா இருப்பேன்,’ அப்படிங்கற மாதிரி சொல்லிட்டு இருந்தா. அதப் பத்தியாத்தான் இருக்கும்.”
“ உங்க அம்மாவுக்கு என்ன ஒரு ரெண்டு, மூணு கோடி இருக்குமா? “
“நீ வேற; பத்து கோடிக்கு மேல இருக்கும். எங்க அப்பா அந்த காலத்துல எக்கச்சக்கமாக ஷேர், மியூச்சுவல் ஃபண்ட் எல்லாம் வாங்கி போட்டு வச்சிருந்தா. எல்லாத்தையும் அம்மா பேர்ல தானே எழுதி வச்சார். அதெல்லாம் இப்ப ஏகத்துக்கும் ஏறிப் போயிருக்கு. லாஸ்ட் என் எஸ் டி எல் ஸ்டேட்மெண்ட் பார்த்தபோது 10 கோடிக்கு மேல இருந்தது.”
“ஓ அவ்வளவு இருக்குமா? அது சரி; ஹேமாக்கு எதுக்கு குடுக்கணும்? அவ என்ன பண்றா? பக்கத்திலயே இருக்கா; ஒரு நடை கூட வந்து பாத்துக்கிறது இல்ல; உங்க அம்மாக்கு ஏதாவது ஒன்னுன்னா நீங்க தானே அடிக்கடி ஓடிப்போய் பாத்துன்டு இருக்கேள். போன தடவை கீழே விழுந்து இடுப்ப உடச்சுன்டப்ப, நீங்கதான் ஒரு மாசம் அவளோட போய் இருந்து எல்லாம் பண்ணிட்டு வந்தேள். அதுக்கும் முன்னாடி ஹார்ட் அட்டாக் வந்த போதும், நீங்கதான் பாத்துன்டேள். ஹேமா ஒன்னும் பண்ணல. அவளுக்கு என்னத்துக்கு கொடுக்கணும்? ஏற்கனவே தான் 3-4 கோடி பெருமான வீட்ட தார வாத்து கொடுத்தாச்சே? நீங்க இப்பவே தாங்க்ஸ் கிவ்விங் லீவுல கிளம்புங்கோ. இல்லேன்னா அந்த ஹேமா போய் அம்மா, அம்மான்னு தடவிக் கொடுத்து எல்லாத்தையும் அடிச்சுன்டு போயுடுவா..”
……..
ஹேமா – சுரேஷின் தங்கை கல்யாணமாகி இரண்டு குழந்தைகளுடன் சென்னையில் வசதியாகத்தான் இருக்கிறாள். லதாவுக்கு ஹேமாவை எப்பொழுதுமே பிடிக்காது. அவளுக்கு அதிகமா செல்லம் கொடுக்கிறாள் என்பதால் தன் மாமியாரையும் லதாவுக்கு பிடிக்காமல் போயிற்று. கல்யாணமான புதிதில் லதா கூட்டுக் குடும்பத்தில் தான் இருந்தாள். ஹேமாவிற்கு கல்யாணம் ஆகியிருக்கவில்லை. அப்பொழுது இந்த மூன்று பெண்களுக்குள் நிகழ்ந்த நிழல் யுத்தத்தை சமாளிக்க முடியாமல் தான் சுரேஷ் கூடிய சீக்கிரம் அமெரிக்காவிற்கு மாற்றல் வாங்கிக் கொண்டு போனான். ஹேமாவிற்கு கல்யாணம் ஆனபோது, சுரேஷின் அப்பா ரிட்டயர் ஆகிவிட்டார் அதனால் கோயம்புத்தூரில் ஒரு நல்ல ரிட்டயர்மென்ட் ஹோமில் தன் மனைவியுடன் குடி பெயர்ந்தார். தன் சென்னை வீட்டை ஹேமாவுக்கே கொடுத்து விட்டார். இதுவுமே லதாவுக்கு அவர்கள் மேல் உள்ள வெறுப்பிற்கு ஒரு காரணம்.
“இது என்ன ஓரவஞ்சனை; மூத்த பையன் நீங்க இருக்கும் போது உங்களை சட்டை செய்யாமல் கிழங்கு மாதிரி ஒரு வீட்டை அவளுக்கு கொடுத்துட்டா, நீங்களும் அசடாட்டம் பேசாம உட்கார்ந்திருக்கேள்,” என்று பொருமித் தள்ளி விட்டாள்.
ரிட்டயர்மென்ட் ஹோம்க்கு போன இரண்டு வருஷத்திலேயே, சுரேஷின் அப்பா காலமாகி விட்டார். அதற்குப் பிறகு சுரேஷின் அம்மா அங்கேயே இருப்பதாக முடிவு செய்தாள். யாரிடமும் போய் இருப்பதில் அவளுக்கு விருப்பமும் இல்லை. கணவர் எழுதி வைத்த சொத்தில் இருந்து, கணிசமான வருமானம் வருவதால் அவளுக்குப் பண விஷயத்தில் யாரையும் எதிர்பார்க்க வேண்டிய நிர்பந்தம் இல்லை.
சுரேஷ்க்கு போன் பண்ணி முடித்தவுடன், தன் பெண் ஹேமாவுக்கும் ஃபோன் பண்ணி விஷயத்தைச் சொன்னாள்.
“என்ன உங்க அம்மா இவ்வளவு லேட்டா ஃபோன் பண்றா? ஏதாவது உடம்பு சரியில்லையா? ” என்று வினவிய கணவரிடம், “அதெல்லாம் ஒன்னும் இல்ல. ஏதோ டிஸ்கஸ் பண்ணனுமாம்; வரமுடியுமான்னு கேட்டு இருக்கா. சுரேஷ் கிட்டேயும், சொல்லி இருக்காளாம்; அவனும் வரானாம்,” என்றாள் ஹேமா.
“அப்படி என்ன டிஸ்கஷன் பண்ணப் போறாளாம்?”
“டீடைலா சொல்லல. ஏதோ பக்கத்து வீட்டு லாயரோட பேசினேன்னு சொன்னா. கொஞ்ச நாளாவே தன்னோட சொத்து எல்லாத்தையும் எனக்கும், சுரேஷுக்கும் எழுதி வைச்சுட்டா, நிம்மதியா இருக்கும்ங்கற மாதிரி சொல்லிட்டு இருந்தா; அதைப் பத்தித்தான் இருக்கும்னு எனக்கு தோண்றது.”
“இதோ பாரு ஹேமா; இந்த விஷயத்துல, நீ ரொம்ப கேர் ஃபுல்லா இருக்கணும் இப்ப சட்டப்படி பெண்ணுக்கும், பிள்ளைக்கும் ஒரு வித்தியாசமும் கிடையாது; ரெண்டு பேருக்கும் ஈக்குவல் ரைட்ஸ் உண்டு. அதைத் தவிர உங்க அண்ணாக்கு என்ன குறைச்சல்; அமெரிக்காவில அவனும் அவன் பொண்டாட்டியும் டாலரா குவிக்கிறா; என்ன – நம்ம பாடு தான் கொஞ்சம் இழுபறியா இருக்கு. எங்க கம்பெனி நிலைமை ரொம்ப மோசமா இருக்கு; மாசா மாசம் ஆட்கள வீட்டுக்கு அனுப்பிச்சிட்டே இருக்காங்க. என்னோட டர்ன் எப்ப வரும்னு நான் வயித்ல நெருப்பை கட்டிட்டு, உக்காந்துட்டு இருக்கேன். நாளைக்கு நம்ம குழந்தைகளோட ஃபியூச்சர் எல்லாம் ஒழுங்கா இருக்கணும். அதுக்கெல்லாம் நெறைய பண ஏற்பாடு பண்ணனும். கொஞ்சம் ஜாக்கிரதையா இரு; உங்க அண்ணாவாவது ஓரளவு பரவாயில்ல; உங்க மன்னி லதா இருக்காளே – அவ ஒரு எமகாதகி. கொஞ்சம் அசந்தா, உன்னையும் தின்னு, ஏப்பத்தையும் விட்டுடுவா. உங்க அம்மா சொத்துக் கணக்க எல்லாம் கரெக்டா வாங்கிக்கோ. நான் என்னோட ஆடிட்டர் ஃபிரண்டு கிட்ட கொடுத்து, அதை க்ராஸ் செக் பண்றேன். வேணும்னா நானும் உன்கூட வரேன்”
“வேண்டாம் வேண்டாம்; என்னை மட்டும் தான் கூப்பிட்டு இருக்கா; அதே மாதிரி சுரேஷ மட்டும் தான் கூப்பிட்டிருக்கா. அதனால நாங்க ரெண்டு பேர் மட்டும் தான் போகப்போறோம். நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்கோ. நான் எல்லாத்தையும் பாத்துக்கிறேன். எனக்கு எல்லாம் தெரியும்.”
அடுத்த இரண்டு நாளில், சுரேஷ் ஹேமாவுடன் பேசி, நவம்பர் மாத கடைசியில் சென்னை வந்து, அவளையும் அழைத்துக்கொண்டு, கோயம்புத்தூர் போவதாக சொன்னான். இது ஹேமாவை முதலிலேயே கோயம்புத்தூருக்கு போகவிடாமல் தடுக்க லதா கொடுத்த ஐடியா.
பேசி வைத்தபடி சென்னை வந்த சுரேஷ், ஹேமாவை கூட்டிக்கொண்டு, கோயம்புத்தூருக்கு ஷதாப்தியில் புறப்பட்டான். வழியெல்லாம் தாங்கள் ஒன்னும் அவ்வளவு வசதியாக இல்லையென்பதை இருவரும் வலியுறுத்தியவாரே இருந்தனர்.
“யூ நோ சுரேஷ்; இவர் கம்ப்பெனி ரொம்ப மோசமான நிலையில இருக்கு. எப்ப வேணாலும் வேலை போய்டும்னு சொல்லின்டிருக்கார். எனக்கு ரெண்டும் பெண் குழந்தைகள். அவங்க ரெண்டு பேருக்கும் ஸ்கூல் ஃபீஸ், ட்யூஷன், பாட்டு க்ளாஸ்,டான்ஸ் க்ளாஸ்னு பணம் தண்ணியா செலவாறது. இந்த லட்சணத்தில இவருக்கு வேலையும் போச்சுன்னா அவ்வளவுதான். நெனச்சாலே கொல நடுங்கறது. இந்தியா ரொம்ப காஸ்ட்லியா ஆயிடுத்து,” என்று ஹேமாவும்;
“ஹேமா, நீ என்னவோ நாங்க அமெரிக்காவுல கொழிக்கறோம்னு நெனக்கிற. அதெல்லாம் ஒன்னும் கிடையாது. அங்கேயும் நெலம மோசம்தான். அமேஸான் கூகிள் மைக்ரோஸாஃப்ட் எல்லாரும் 20 ஆயிரம் 30 ஆயிரம்னு ஆட்குறைப்பு செய்றாங்க. ந்யூஸ்ல பாத்திருப்பியே. போறாத்துக்கு இந்த ட்ரம்ப் பண்ற அட்டகாசம். அங்கங்கே இந்தியர்கள சுடறது; கொள்ளை அடிக்கறது. அமெரிக்கா இந்தியாவ விட மோசமாயிடுத்து. நாங்கெல்லாம் எப்படா இந்தியாவுக்கு திரும்பலாம்னு தான் காத்திண்டிருக்கோம். எல்லாம் இக்கரைக்கு அக்கரை பச்சதான்,“ என்று சுரேஷ் பதிலுக்கும் புலம்பியவாரே வந்தனர்.
ஒரு வழியாக அவர்கள் கோயம்பத்தூர் ஜங்ஷனிலருந்து, அம்மா இருக்கும் ரிட்டயர்மென்ட் ஹோமுக்கு வந்த பொழுது மாலை மணி 5 ஆகி இருந்தது. இருவரையும் மகிழ்ச்சியுடன் வரவேற்ற அம்மா சூடாக காஃபிகொடுத்தாள்.
“இன்னைக்கு ராத்திரி டின்னருக்கு கல் தோசை; ரெண்டு பேரும் கேண்டினுக்கு போய் சாப்பிட்டு நல்லா தூங்குங்க; கார்த்தால எல்லா விஷயத்தையும் பேசிக்கலாம். லாயர் சிவராமன் சார் ஈரோடு போயிருக்கார். நாளைக்கு காலைல தான் வருவார். அவரை வைத்து எல்லாத்தையும் டிஸ்கஸ் பண்ணிக்கலாம்,” என்று அம்மா சொன்னதும் ‘பேசப்போவது சொத்து பிரிப்பது பற்றித்தான்,’ என்று உறுதியாயிற்று. சுரேஷும், ஹேமாவும் தங்களுடைய ஷேரை அதிகப்படுத்த காரணங்களை சேகரித்துக் கொண்டனர். ஏற்கனவே ஹேமாவுக்கு கொடுத்த வீட்டின் மதிப்பையும், அவள் திருமணத்திற்காக செய்த செலவையும் கணக்கில் கொள்ளவேண்டுமென்று சுரேஷும், அவனை மேல் படிப்புக்காக அமெரிக்கா அனுப்பிய செலவைப் பற்றி ஹேமாவும் யோசித்தபடியே உறங்கினர். விடியற்காலை சுரேஷுக்கு லதாவிடமிருந்தும், ஹேமாவிற்கு அவள் கணவனிடமிருந்தும் ஃபோனில் கடைசி நிமிஷ ஆலோசனைகள் வந்தன.
காலையில் மூவரும் குளித்து, ப்ரேக் ஃபாஸ்ட் காஃபி சாப்பிட்டு முடிப்பதற்கும், சிவராமன் சார் வருவதற்கும் சரியாக இருந்தது. சிவராமன் இவர்களுக்கு பக்கத்து அபார்ட்மென்ட்டில் வசிப்பவர். ரிடையர்ட் லாயர். சமீபத்தில் மனைவியை இழந்தவர். இங்குள்ளவர்களுக்கு சட்டம் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு உதவி செய்பவர்.
உள்ளே வந்தவர் எல்லோரையும் பார்த்து, புன்னகைத்து குசலம் விசாரித்தபடி அவர்களுக்கெதிரில் அமர்ந்தார். அம்மா பெரிய சொற்பொழிவை ஆற்ற முற்படுபவள் போல் தொண்டையை கனைத்துக் கொண்டாள். “ஒரு முக்கியமான விஷயத்தை பற்றி பேசணும்னுதான் உங்க ரெண்டு பேரையும் அவசரமா வரச் சொன்னேன். அதுக்கு முன்னாடி சிவராமன் சார பத்தி கொஞ்சம் சொல்றேன். இவர் நம்ப வீட்டுக்கு பக்கத்து வீட்ல இருக்கார். நீங்க பார்த்திருக்கலாம். சட்ட சம்பந்தமான எல்லா விஷயமும் அவருக்குத் தெரியும். இங்க இருக்கிற எல்லாருக்குமே, இந்த விஷயத்துல எல்லா விதமான உதவியையும் பண்ணிக் கொடுப்பார். எனக்கு எல்லா விதமான உதவியும் செய்வார். போன தடவை நான் கீழே விழுந்து கால் உடைந்த போது, இவர் தான் என்னை ஆஸ்பிட்டலுக்கு கூட்டிப் போய் அட்மிட் பண்ணினார் பிறகு எப்போது எனக்கு உடம்புக்கு சரியில்லாமல் இருந்தாலும் அவர் எனக்கு உறுதுணையாக இருந்தார்”
இந்த சமயத்தில் சிவராமன் குறுக்கிட்டு, “உங்க அம்மாவும் எனக்கு நிறைய ஹெல்ப் பண்ணி இருக்காங்க. போன வாரம் எனக்கு உடம்பு சரியில்லாத போது, இவங்க தான் எனக்கு கஞ்சி கொடுத்து மருந்து எல்லாம் கொடுத்துப் பார்த்துட்டாங்க,” என்றார்.
“ஆக ஒருத்தருக்கு ஒருத்தர் ஹெல்ப் பண்ணிட்டு இருக்கோம்,” என்று தொடர்ந்த அம்மா, “கொஞ்ச நாளாகவே என்னோட சொத்து எல்லாத்தையும், உங்களுக்கு பிரிச்சி கொடுக்கனும்னு சொல்லிட்டு இருந்தேனில்லையா; இத பத்தி இவர் கிட்ட எப்படி பண்ணலாம்னு கேட்கப் போனேன். அப்போ அவர் இந்த புத்தகத்தை காமிச்சு ‘இதை முதல்ல படிங்க’ அப்படின்னு கொடுத்தார்,” என்ற அம்மா.
“An Incomplete Life by Vijaypat Singhania, “ என்ற புத்தகத்தை எடுத்துக் காட்டி, “இந்தப் புத்தகத்தை பற்றியோ இல்ல இந்த சிங்கானியா பத்தியோ உங்களுக்கு ஏதாவது தெரியுமா,” என்று கேட்க அவர்கள் இருவரும் தெரியாது என்று தலையை அசைத்தவுடன் அம்மா தொடர்ந்தாள்.
“ரேமண்ட் துணிகளை பற்றி கேள்விப்பட்டிருப்பீங்க. ரொம்ப பிரபலமான நிறுவனம் இந்த சிங்கானியா தான். அந்த கம்பெனியை ஆரம்பித்தவர். இந்த கம்பெனியை பெரிதாக வளர்த்தார். வயதான பிறகு, ஓய்வெடுக்க விரும்பி அந்த கம்பெனியையும் தன் எல்லா சொத்துக்களையும் தன் மகனுக்கு எழுதி வைத்தார். ஆனால் அந்த மகனோ கம்பெனியும் சொத்துக்களும் தன் பெயருக்கு மாற்றிய பிறகு தன் அப்பாவையே வீட்டை விட்டு வெளியே துரத்தி விட்டான். அவர் இப்போது ஒரு வாடகை வீட்டில் எளிமையான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார். தன் சோக அனுபவங்கள் மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கட்டும் என்று இந்த புத்தகத்தை எழுதினார். அதில் எழுதுகிறார் ‘நீங்கள் உங்கள் பிள்ளைகளை செல்லமாக வளருங்கள்; பாசம் காட்டுங்கள்; ஆனால் ஒரு போதும் உங்கள் சொத்துக்களை, நீங்கள் உயிரோடு இருக்கும்போதே, அவர்களுக்கு எழுதி வைக்காதீர்கள். அவையெல்லாம், உங்கள் வாழ்வுக்கு பிறகு அவர்களுக்குப் போகட்டும். இல்லையென்றால் எனக்கு நேர்ந்த கதி உங்களுக்கும் நேர வாய்ப்பிருக்கிறது. மேலும் சொத்துக்கள் உங்கள் பெயரில் இருக்கும் போது அந்த சொத்துக்களுக்காகவாது, உங்களிடம் அவர்கள் மரியாதையாக நடந்து கொள்வார்கள்.”
அம்மா மேலே தொடரும் முன் சிவராமன் குறுக்கிட்டார். “சிங்கானியாவ விடுங்கள். என் நிலைமையும் அதேதான்; அன்ஃபார்ச்சுனேட்லி நான் இந்த புத்தகத்தை ரொம்ப லேட் ஆகத்தான் படித்தேன். அதாவது நான் ஏமாந்த பிறகு இப்போது என் சொத்துக்களை எல்லாம் என் மகனும், மகளும் அனுபவிக்கிறார்கள். எனக்கு இப்போ இந்த அப்பார்ட்மெண்டும், என் பென்ஷனும் தான் என் கையில் இருக்கிறது. அதனால் தான் உங்க அம்மா தன் சொத்தை பிரிக்க என்னிடம் வரும்போது, இந்த புத்தகத்தை கொடுத்து அவர்களைப் படிக்கச் சொன்னேன்,” என்றதும் அம்மா தொடர்ந்தாள்.
“தயவு செய்து என்னை தப்பா நினைக்காதீங்க. நீங்க எல்லாருமே இந்த மாதிரி இருப்பீங்கன்னு நான் சொல்ல வரல. ஆனா என்னோட சொத்தெல்லாம் வந்து தான் உங்களுக்கு ஆகணும்ங்ற அவசியம் இல்லை. ஆனால் எனக்கு இந்த சொத்து தான் என்னோட ஒன்லி சோர்ஸ். இத விட்டேனா எனக்கு வேற வழி இல்ல.”
“சரி சொத்த பிரிச்சு குடுக்க போறதில்லன்னு சொல்ற; இட்ஸ் ஃபைன். பின்ன எதுக்கு எங்கள அவசர அவசரமாக வரச்சொன்னே?” என்றான் சுரேஷ் எரிச்சலுடன்
“சொல்றேன்; எனக்கு வயசாயின்டு வருது. இந்த கால் ஆப்ரேஷன் ஆனதுலேந்து அடிக்கடி கீழே விழுந்துடறேன். அப்பப்ப பக்கத்தில இருக்கற இவர்தான் எனக்கு ஒத்தாசையா இருக்கார்.”
“அதே மாதிரி எனக்கும் அடிக்கடி உடம்புக்கு வந்து படுத்த படுக்கையா ஆகிடறேன். அப்பெல்லாம் உங்கம்மாதான் எனக்கு ஹெல்ப் பண்றாங்க..அதனால, ” சிவராமன் தயங்கினார்.
“அதனால நாங்க சேந்து இருக்கறதா, முடிவு பண்ணிட்டோம்.” அம்மா சட்டென முடித்ததும், “அம்மா; என்னம்மா உளர்ற; உனக்கு பைத்தியம் கிய்த்யம் பிடிச்சுடித்தா?” ஹேமா அலறினாள்.
“ஏம்மா உனக்கு வெக்கமா இல்லயா? இந்த வயசில living togetherனு சொல்றதுக்கு. வீ டோன்ட் அக்சப்ட் திஸ் நான்சென்ஸ்,” சுரேஷ் சீறினான்.
அம்மா அமைதியா பேச ஆரம்பித்தாள். “ஏன்டா living together உங்க ஜெனரேஷன்ல பண்ணினா; ஓகே ஆனா எங்க வயசில அதுவே நான்சென்ஸாயிடுமா? living togetherங்கற வார்த்தையோட அர்த்தத்தை செக்ஸோட மட்டுமே சம்மந்தப்படுத்தி அசிங்கமாக்கினதே உங்க ஜெனரேஷன் தான். பெண்கள் ஆண்களோட பேசுவதைக் கூட விகல்பமா பார்த்த ஒரு காலம் உண்டு. அதிலேர்ந்து ஆண்களோட ஒன்னா படிச்சு, ஒன்னா வேலை பாத்து சகஜமா பேசிப் பழகறது எங்க ஜெனரேஷன்ல நடந்தபோது நாங்க அத சாதரணமாகத்தான் ஏற்றுக்கொண்டோம். இந்த living togetherஐ இதோட அடுத்த கட்டம்னுதான் நான் நினைக்கிறேன். ஒரு வயதான ஆணும், பெண்ணும் ஒருத்தருக்கொருத்தர் உதவியா இருக்க சேர்ந்து இருந்தால், அத நல்ல விதமா ஏத்துக்கறதுக்குண்டான மெட்சூரிட்டி கூட உங்களுக்கில்லையா? “Yes, we are living together,” – அத சொல்லிக்க எங்களுக்கு வெட்கமுமில்ல; அதுக்கு உங்ககிட்டேர்ந்து அனுமதியும் தேவையுமில்ல. இத உங்களுக்கு தெரிவிக்கறதுக்காகத்தான் வரச்சொன்னேன். புரிஞ்சுதா?”
பதில் சொல்ல முடியாமல் சுரேஷும் ஹேமாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு திகைத்து நின்றனர்.

எம். சங்கர்
திரு எம். சங்கர் சென்னையில் வசிக்கிறார். தொழில் முறையில் சார்டர்டு அக்கௌண்டன்ட் (ஆடிட்டர்). அமெரிக்காவை சார்ந்த ஒரு IT கம்ப்பெனியில், CFO ஆக பல வருடங்கள் பணிபுரிந்தவர். இவருக்கு எழுவதில் அதிக ஆர்வம் உண்டு. எழுத்தில் ஆர்வமுள்ளதால், இணைய தளம், முகநூல், மின்னிதழ்கள், பத்திரிகைகள் போன்றவற்றில் அடிக்கடி எழுதுவது இவர் வழக்கம். இவருடைய பல கதைகள் பரிசுகள் பெற்றிருக்கின்றன.
