மரு. ச. கந்தசாமி/சான்டா பரிசு

ஒவ்வோர் ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகையன்று, எலிசபெத் அம்மா ஜூலியிடம், “அம்மா, அப்பாவை எனக்கு டோரா பொம்மை வாங்கி வரச் சொல்லு” என்றாள்.
எலிசபெத், ஜூலி – டேவிட் தம்பதியின் செல்ல மகள். வேலை நிமித்தம் டேவிட் அமெரிக்கா சென்றுவிட, ஜூலி மகளைத் தான் ஆசிரியையாக வேலை பார்க்கும் பள்ளியில் படிக்க வைத்தாள்.
டேவிட் அமெரிக்கா சென்று ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன. வாரம் ஒருமுறை தன் செல்ல மகளுடன் இணையதளம் வழியாகக் கொஞ்சிப் பேசுவான். யாராவது ஜூலியிடம், “உன் அப்பா எங்கே?” என்று கேட்டால், உடனே கணினியைக் கைகாட்டுவாள்.
ஜூலி டேவிட்டிடம், “ஏங்க, இந்த வருடம் கிறிஸ்துமஸுக்காவது கண்டிப்பாக நீங்கள் வர வேண்டும். உங்கள் அன்பு மகளுக்கு டோரா பொம்மை வாங்கி வாருங்கள்” என்றாள்.
இந்த வருடம் கிறிஸ்துமஸுக்கு ஊரே விழாக்கோலம் பூண்டது. தினமும் கிறிஸ்துமஸ் கேரலின்போது, சான்டா கிளாஸ் வீடு வீடாகப் பவனி வந்தார். எலிசபெத் சான்டா கிளாஸைப் பார்த்ததும் ஓடிச் சென்று கட்டிக்கொண்டு விளையாடினாள். அவரும் திடீரெனத் தன் முகமூடியை அகற்றினார். எல்லோருக்கும் இன்ப அதிர்ச்சி!
தன் அன்பு மகளைக் காண டேவிட், சான்டா கிளாஸ் வேடமிட்டு வந்திருந்தான். தன் செல்ல மகளுக்கு டோரா பொம்மையைப் பரிசளித்தான்.
ஆக, கிறிஸ்துமஸ் பண்டிகை விண்ணில் மின்னும் நட்சத்திரத்தைப் போலப் பிரகாசமானது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன