
, செய்ய வேண்டிய வேலைகள் பாமாவின் கண்முன் பட்டியலிட்டன.
‘என்னென்ன செய்ய வேண்டும்? மாமியாருக்குக் கஞ்சி, மாமனாருக்குத் தேநீர். கணவனுக்கும் குழந்தைகளுக்கும் காபி, காலைச் சிற்றுண்டி, மதியச் சாப்பாடு. கிளம்பித் தெருக்கோடியில் இருக்கும் அம்மாவைப் பார்த்துவிட்டு, அங்கிருந்து பள்ளிக்குச் செல்ல வேண்டும்.’
பள்ளியில் ஆசிரியர் பணி.
வீட்டில் வேலைக்காரி வரவில்லை. எனவே, திரும்பி வந்து பாத்திரம் தேய்க்க வேண்டும். மாலையில் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித் தர வேண்டும்.
பக்கத்து வீட்டில் இருக்கும் நாத்தனார், “அண்ணி, என் குழந்தைகளுக்கும் பாடம் சொல்லிக் கொடுங்கள்” என்று அனுப்பி வைப்பார்.
அதன் பிறகு, இரவு உணவு முடிந்ததும் பாத்திரங்களைத் தேய்த்து, கணவன், குழந்தைகளின் சீருடைகளை அயர்ன் செய்து மடித்து வைக்க வேண்டும். அப்புறம் படுக்கை… கணவன்…
பாமாவுக்கு மிகவும் சலிப்பாக இருந்தது.
‘மற்றவர்களுக்காகவே வாழும் நான் யார்? என் ஆசைகள் என்ன?’
‘எனக்குத்தான் எத்தனை முகங்கள்! மகள், தாய், மனைவி, டீச்சர், அண்ணி, வேலைக்காரி, வண்ணாத்தி, சமையல்காரி…’
‘உண்மையில் நான் யார்? என்னுடைய முகம் எது?’
அவளுக்குள் கேள்விகள் மட்டுமே எழுந்தன. பதில் தெரியாமல் திகைத்துக் கிடந்தாள் பாமா.
