
பாதுகாப்பு அமைச்சர் கோபாலின் மூன்று வயது மகள் நிலாவைக் காணவில்லை.
அவருடைய மகளைக் கடத்தியவர்கள், சிறையில் இருக்கும் தீவிரவாதத் தலைவனை விடுதலை செய்தால்தான் அவருடைய மகள் கிடைப்பாள் என்றார்கள்.
அந்தத் தீவிரவாதத் தலைவன் கொடூரமானவன். முக்கியமான கட்டிடங்களை வெடிகுண்டு வைத்துத் தகர்த்தவன். அப்பாவிப் பொதுமக்களைக் கொன்று குவித்தவன்.
அவனை விடுதலை செய்தால் நாட்டுக்கே மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பான்.
அரசாங்கம் ஆலோசனை நடத்தி, குழந்தைக்காக அவனை விடுதலை செய்யலாமென்று முடிவெடுத்தது.
கோபால், ‘குழந்தையா, தீவிரவாதத் தலைவனின் விடுதலையா?’ என்ற மனப்போராட்டத்துடன் பூங்காவில் நடந்துகொண்டிருந்தார். அப்போது…
“அப்பா!” என்றபடி நிலா ஓடிவந்து அவரை அணைத்தாள்.
தன்னுடைய மகளைப் பாசத்துடன் இறுக்கமாக அணைத்துக்கொண்ட கோபால், அவள் கையில் இருந்த சிவப்புப் பொம்மையைப் பார்த்தார்.
“இந்தப் பொம்மை ஏது?”
“அந்தத் தாடிக்கார மாமாதான் கொடுத்தார்” என்றாள்.
பொம்மையிலிருந்து வந்த ‘டிக் டிக்’ ஒலியைக் கேட்டதும், அது ஒரு டைம் பாம் என்று கோபாலுக்குப் புரிந்தது.
நிலாவிடமிருந்து அந்தப் பொம்மையைப் பறித்து, வெகுதூரத்தில் இருந்த குளத்தில் தூக்கி எறிந்தார். அது பயங்கரமாக வெடித்துச் சிதறியது.
பயத்தில் நடுங்கியபடி அவரைக் கட்டிக்கொண்ட நிலாவிடம், “அறிமுகம் இல்லாதவர்கள் எதைக் கொடுத்தாலும் வாங்காதே!” என்றார்.
