விஜி ஆர் கிருஷ்ணன்/நான் ராசா – நீ ராணி

WriterSCafe எழுத்தாளர் சங்கமம் சார்பாக வெளியிடப்பட்ட “கோட்ட வூடு” என்ற இரண்டாவது சிறுகதை தொகுப்பில் இருந்து திருமதி விஜி ஆர் கிருஷ்ணன் எழுதிய ” நான் ராசா – நீ ராணி” என்ற சிறுகதை உங்கள் வாசிப்பிற்கு:



“ஏய் காலங்காத்தால ஏன் இப்டி கூவீனு கீற? “
“ஆமா, எனக்கு கிறுக்கு புடிச்சிருக்கு. அதான் கூவீனுகீறேன்; இம்மா தூண்டு நேரம் கழிச்சி போனாக்கூட, அந்த மேஸ்த்ரி எரும எம்மாம் பேச்சு பேசுறான், உனக்கு அரை நாள் கூலி தான்ட்றான்; நீ அந்த பொட்ட புள்ளைய எழுப்பி, இஸ்கூலுக்கு கூட்டிட்டு போன்னு சொன்னா, என்னவோ மில்லு முதலாளி கணக்கா, தெனா வெட்டா உக்காந்துகீற, இதுல கால் மேல கால் போட்டு பேச்சு வேற?”

“அடியே, தினமும் பொழுது விடிஞ்சா இதே ஒப்பாரி தான்; நிறுத்துமே; நானே இன்னைக்கு மில்லுல என்னா பஞ்சாயத்தோனு முழிச்சீன்னு கெடக்கேன்; ஏன் உங்க அம்மா இதோ அடுத்த தெருவுல தானே கீது, அத கூட்டிட்டு வந்து, உன் மவாரணிய இஸ்கூலுக்கு கூட்டிட்டு போகச்சொல்லு. அந்த அம்மா பெரீய எலிசபெத்து மகாராணி?”
“ ஐயே, காலங்கத்தால, எங்க அம்மாவ எதுக்கு இழுக்குறவன்; நீ பெத்தத நீ தான் வளக்கணும்; ஏன், எங்க அம்மா எலிசபெத்து மகாராணின்னா, உங்கொம்மா என்ன ஒபாமா பொண்டாட்டியா?”
“ எடு செருப்ப –“
தினமும் காலை – ராயபுரம் சேரி பகுதியில் உள்ள ஒரு குடிசையில், சித்தாள் வேலை பார்க்கும் முனிம்மாவுக்கும், மில்லுல, மூட்டை தூக்கும் கட்டையனுக்கும் நடக்கும் பேச்சு வார்த்தைகள் தான் இது.
ஒரு வழியா மக பொன்னம்மாவ எழுப்பி கஞ்சி கொடுத்து, தலையை வாரி அடுத்த வீட்ல கொண்டு விட்டுட்டு, முனிம்மா ஓடும்போது, மணி காலை 7.30; கட்டையன் ஏழு மணிக்கே கிளம்பி போய்ட்டான்.
“என்ன முனிம்மா, 7 மணிக்கு வரச்சொன்னா, எப்பவும் அரை மணி நேரம் லேட்டா தான் வாரது; சம்பளத்துல கழிச்சிக்கிடுவேன்; – ஆமா சொல்லிப்புட்டேன்.”
“இதே சோலியா போச்சு, நானும் எத்தன தபா சொல்லிக்கீறேன் – புள்ளைய தனியா வுட்டுட்டு, நான் படற பாடு எனக்கு தானே தெரியும்.”
“அப்போ வீட்ல குந்தீன்னு கிட, எதுக்கு வேலைக்கு வாரவ?”
“க்கும், கொரோனா காலத்துல ரெண்டு வருஷம் கடன வாங்கி, வயத்த கழுவினு கெடந்தோம். அந்த கடன அடைக்கத்தான் உன்கிட்ட பேச்சு வாங்கி சாவுறேன்.”
“சரி, சரி கூவாத; என் கூட ஒத்து போ, சோடி போடலாம்னா முறைக்கிற, பெரிய இவளாட்டம், சம்பளத்துக்கு மேலயே காசு கொடுப்பேன் – ம்ம்ம்.”
“அட போய்யா விவஸ்த்த கெட்ட மனுஷன் – தூ.”
“க்கும் போடி; ஏதோ செங்கல்லு கணக்கா திமிசுக்கட்ட மாதிரி இருக்கேனு ஆசையா கேட்டா, ரொம்பத்தான்.”
……
“கட்டையா, இங்கன வா.”
“ஐயா, சொல்லுங்க.”
“காலை லேர்ந்து, எத்தனை மூட்டை லாரில ஏத்துன?”
“ஒரு நூத்தம்பது மூட்டைங்க.”
“இந்நேரத்துக்கு ஐந்நூறு மூட்டை ஏத்தியிருக்கணும்; டீ குடிக்க பத்து வாட்டி; பீடி பிடிக்க பத்து வாட்டி போனா; இப்படி தாம்ல ஆகும்; ஒழுங்கா பர, பரன்னு பாக்க முடிஞ்சா பாரு; இல்ல கணக்க தீத்து அனுப்பி உட்ருவேன். ஆமா பாத்துக்க.”
……
முனிம்மாவும், கட்டையனும் வீடு வர ஏழு மணியாச்சி.
முனிம்மா, பொன்னம்மாவ தேடி போனா; தெரு முக்குல மண்ணுல விளையாடிட்டு இருந்தவள கூட்டியாந்து குளிக்க வச்சு, சூடா சோறும், குழம்பும் வச்சிட்டு திரும்பி பாத்தா புள்ள தூங்கிருச்சு. எழுப்பி தூக்கத்துல ரெண்டு வாய் சோறு ஊட்ட, மூணாவது வாய்க்கு புள்ள தூங்கிருச்சு. ரெண்டு வாய் சோத்த அள்ளி போட்டுட்டு, அடுத்த தெருவுக்கு நடைய கட்னா முனிம்மா.
அம்மா வீட்டுக்கு முன்னாடி நின்னு கூவுனா; “ஏய் ஆத்தா, உனக்கு மனசாட்சினு ஒன்னுக்கீதா? இந்தா இருக்க அடுத்த தெருவுல உன் பேத்தி பசியோட அனாதையா திரியுது; ஒரு வேளை சோறு போடலாம்ல; இல்ல வீட்ல இருக்க மிச்ச கஞ்சியவாது வந்து கொடுக்கலாம்ல.”
“வாடியம்மா, வா காக்கா கரஞ்சுச்சாம், குயிலு அழுதுச்சாம்னு, அந்த கட்டையன் கூட ஓடிப்போய் கண்ணாலம் கட்டும்போது, நானும், உன்ன கட்டிக்க தவமிருந்த என் தம்பியும் அழுதுகிட்டு இருக்கும் போது நீதான் வந்து எங்க அழுவாச்சிய தொடைச்சியா, சொல்லு பாப்போம்.”
“க்கும்… உன் தொம்பி ஆகாத, போகாத வேல – இப்போ செயில்ல இருக்கான் தெரியும்ல?”
“ஆனா நான் கட்டிக்கிட்டவன் கௌரதையா மூட்டை தூக்கி பொழைக்கிறான், உன் தொம்பியக்கட்டி இருந்தா, நானும் செயில்ல களி தான் துன்னோனும்.”
“பண்றதெல்லாம் பண்ணிட்டு, என் தம்பிய பஞ்சாயத்துக்கு இழுக்காத – ஆமா, சொல்லிப்புட்டேன்.”
ஒரு வழியா சண்ட வலிச்சுட்டு, வீட்டுக்கு வந்தா முனிம்மா.
“எங்கடி போன சொல்லாம கொள்ளாம, ஆத்தாக்காரி மேல பாசம் பொங்கிருச்சா க்கும்?”
“அட இல்லையா பாவம் பொன்னி, பசியோட ரோட்ல திரியுது. அந்த ஆத்தாமைல போய் சண்ட வலிச்சீன்னு வந்தா பாசமாம்லக்கும்?”
…..
“சரி, இன்னைக்கு நான் ஒரு முடிவு பண்ணிட்டேன்யா.”
“இன்னா முடிவு?”
“நம்ம அஞ்சல இருக்காள.”
“ஓ, உன் தங்கச்சி தானே?”
“ஆமாய்யா, அவள வழில பாத்தேன் அவதான் சொன்னா; மன்னார்சாமி கோயில் தெருவுல ஒரு அப்பார்ட்மெண்ட் கீதாம். அங்க நிறைய வூடுங்களாம், சாமான் தேய்க்க, சமைக்கனு ஒரு அஞ்சு வீடு பாத்தா போதும். பதினைஞ்சாயிரம் கிடைக்குமாம். இந்த மேஸ்திரி தொல்லை வேற தாங்க முடில. அங்க வேலைக்கு போனா சாயங்காலம் பொக்குனு வந்து சோறு பொங்க சரி யா இருக்கும். “
“சரி, சரி வேல கிடச்சப்புறம், மேஸ்திரி கிட்ட சொல்லு புள்ள.”
முனிம்மா நினச்ச மாதிரி வேலய அஞ்சலை வாங்கி கொடுத்தா; காலைல புள்ளய சாப்பிட விட்டு, இஸ்கூல் அனுப்பிட்டு, நிதானமா வீட்டு வேலை பாக்கக்கிளம்பினாள்.
காலை எட்டரை மணிக்கு, முதலில் வேலை பார்க்கும் வீட்டின் அழைப்பு மணியை அழுத்த, உள்ளே இருந்து பரப்பாக செல் போனில் பேசியவாறு, தலையை மட்டும் அசைத்து, முனிம்மா உள்ளே வந்ததும் கதவை சாத்தினாள்.
“இது என் பையன் யுவன்; இவனுக்கு ஸ்கூல் பஸ் எட்டேமுக்கால் மணிக்கு வரும்; இவனக்கொண்டு கொஞ்சம் பஸ்ல ஏத்தி விட்டுட்டு, அப்பறம் வந்து சிங்க்ல இருக்குற சாமான் விளக்கிட்டு, வீடு கூட்டி மாப் போடுங்க; அப்பறம் டைனிங் டேபிள் சுத்தம் பண்ணிடுங்க; வேலை முடிச்சிட்டு, மறக்காம பூட்டி, சாவியை சவிதா வீட்ல வேலைக்கு போம்போது கொடுத்திடுங்க,” என்று இவளிடம் பேசிக்கொண்டே, மொபைல், சார்ஜர் எடுத்து ஹாண்ட்பாக்ல போட்டாலும், இன்னொரு கை லஞ்ச் பாக்ஸ நோக்கி போய்க் கொண்டிருந்தது.
“யுவன் டேக் கேர் – திஸ் ஆன்டி வில் பிக்கப் அண்ட் சென்ட் யு ஓ. கே பை,”என்று போனி டைல் ஆட, ஜீன்ஸ் பாண்ட், டீ ஷர்ட் போட்டு ஓடினாள் யாமினி.
“ஆ,” என்று பிளந்த வாய் மூடாமல், பார்த்துக்கொண்டிருந்தாள், முனிம்மா.
‘நம்மளயும், வாங்க, போங்கனு மறுவாதையா கூப்ட ஒரு ஆள் – ம்ம்ம்;’
பொன்னி வயசு தான் இருக்கும் யுவனுக்கும். “ஹாய் ஆன்டி;’
“வாப்பா கண்ணு, பைய நான் தூக்கியாறேன்.”
அந்த பையனை பஸ்ல ஏத்தி விட்டுட்டு, வீட்டுக்குள் வந்து பம்பரமாய் வேலை முடித்தாள்;
……
அடுத்து சவிதா மேடம் வீட்டுக்கு சென்றாள். அழைப்பு மணியை அழுத்தினாள். பாதி தூக்கத்தில் வந்து கதவை திறந்தாள் சவிதா.
“உன் பேர் என்ன, எஸ், எஸ் முனிம்மா தானே, அஞ்சல உன் தங்கச்சியா, அவ சொல்லி தான் உன்ன வேலைக்கு சேத்தோம், எனக்கு நைட் டூட்டி. நான் தூங்குவேன், நீ பாட்டுக்கு வந்து வேலைய முடிச்சிட்டு கதவை சாத்திட்டு போய்டு.”
“சரிம்மா.”
“ஆத்தாடி ராத்திரி முச்சூடும் வேலை பாத்துட்டு, பகல் பூரா தூங்கறதா; ஐயோ பாவம், புள்ள குட்டி எங்கயோ தெரியலயே, போட்டோல ரெண்டு புள்ளைங்க கீதே;”
“ புள்ளைங்க எங்கம்மா -இஸ்கோலுக்கு போய்ட்டாங்களா ?”
“இல்லம்மா, ரெண்டு புள்ளையும் ஹாஸ்டல்ல விட்டுட்டேன், அவங்க அப்பாக்கு போலீஸ் வேலை, எப்போ வீட்டுக்கு வருவார்னு சொல்ல முடியாது; பிள்ளைங்க சின்ன பிள்ளைங்க வேற; நைட்ல தனியா விட முடியல, அதான்.”
‘ அடப்பாவமே – புள்ளைங்க தனியா அனாத மாதிரி கிடக்குதுங்களே?’- யோசித்துக்கொண்டே வேலைகளை முடித்து, அடுத்து சி. பிளாக் நோக்கி போனாள்.
……
உள்ளே ஒரே சண்டையும், கூச்சலுமாய் இருந்துச்சு. மெல்ல தலையை நீட்டி, “அம்மா,’ என்றாள்.
“யாரு, ஓ முனிம்மாவா? என்ன வேலைனு அன்னைக்கே சொல்லிட்டேன்ல; போய் வேலைய பாரு,” என்று கணவனுடன் சண்டையை தொடர்ந்தாள்.
“லிசன் கோபி, குழந்தை இல்லாததுக்கும், நான் வேலைக்கு போறதுக்கும் என்ன சம்மந்தம்; உங்க அம்மா தான் இடியாட்டிக்கா பேசுறாங்கன்னா, நீங்களுமா?”
“ஆமா, ஹேமா, நீ ரொம்ப டென்ஷனா வேலை பாக்கறதுனால தான் குழந்தை பொறக்க லேட்டாகுது னு எங்க அம்மாவா சொன்னாங்க; அந்த டாக்டர் தானே சொன்னாங்க; இதுல எங்க அம்மாவ ஏன் அனாவசியமா இழுக்குற?”
“ஆமா – இன்னைக்கு ரெண்டு பேரும் லீவு போட்டது டாக்டர் பாக்க, சண்டை போட இல்ல; கிளம்பு முதல்ல.”
“குழந்தை அடுத்த வருஷம் கூட பெத்துக்கலாம் கோபி; நமக்கென்ன வயசா ஆயிடுச்சு? ஆனா எனக்கு ப்ரோமோஷன் வைட்டிங் லிஸ்ட்ல இருக்கு கோபி, புரிஞ்சுக்கோங்க. “
சண்டை வலுத்தது. ”அட கடவுளே, ஒரு குழந்தைய பெத்துக்கக்கூட நேரமில்லையா,”- முனியம்மா இங்கேயும் திறந்த வாய மூடல.
…..
ஒரு வழியா வேலைய முடிச்சிட்டு, எதிர் பிளாக்ல இருக்கும் மீனாட்சி அம்மா வீட்டுக்கு போன முனியம்மா, அழுதுக்கிட்டே கதவ திறந்த அம்மாவ பார்த்தா, எழுபது வயசு இருக்கும், ஒல்லியா, வெள்ளையா இருந்தாங்க.
“முனியம்மா, விளக்கிட்டு, வீடு பெருக்கிட்டு, சாமி விளக்கெல்லாம் கொஞ்சம் தேச்சிடு. “ – சரிம்மா என்று உள்ளே போனாலும், காது இங்க தான் இருந்தது.
“டேய், அவதான் கோவிச்சிட்டு போய்ட்டான்னா, நீயும் இப்படியே விட்டுடிவியா?”
“என்ன என்னம்மா பண்ண சொல்ற, அவளா தான சண்டை போட்டுட்டு போய்ட்டா; நானும் இந்த மூணு மாசத்துல முப்பது வாட்டி கால் பண்ணி, அவ எடுக்கல. “
“எனக்கும் வயசாயிட்டே போகுது; பேரப்புள்ளைங்க கண்ணுக்குள்ள நிக்குதுங்க, நேர போய் கூப்பிடு, வந்துடுவா.”
“சரி, சரி அழுது புலம்பாத – போறேன். “
“அம்மா விளக்கிட்டேன். போயிட்டு வாரேன்.”
…
முனியம்மா சரியா அஞ்சு மணிக்கு வீட்டுக்கு போய், சமச்சி, பொன்னியக் கூப்பிட்டு, ஊட்டி விட்டா. கட்டையைன் வந்ததும், அன்னைக்கு ஓவ்வொரு வீட்லயும் நடந்த கதைய சொன்ன முனியம்மாவை, ஆச்சரியத்துடன் பாத்தான்.
“மெய்யாலுமா சொல்ற; அரண்மன கணக்கா அம்மாம்பெரிய வூட்ல இருக்கவனுக்கெல்லாம் இம்புட்டு பிரச்சின கீதா?”
“அட ஆமாங்கரேன், நம்ப ஒத்த புள்ளைய கஷ்டப்பட்டு வழக்குறோம்னு நினைச்சா, பாவம் அதுங்க பிள்ளைங்க எவ்ளோ கஷ்ட படுதுங்கோ?”
இழுத்து பெருமூச்சு விட்ட, கட்டையன் சொன்னான்.
“நான் ராசான்னா – நீ ராணி – நம்ம மவ இளவரசி.” – இது எப்படி இருக்கு?
நல்லாத்தான் இருக்குது. அதுக்கு பேசிக்கிட்டே பக்கத்துல வர வேலை வச்சிக்காத!”
“ஏண்டி நம்ம அரண்மனைக்கு, ஒரு இளவரசன் வேணும்னு யோசிக்க மாட்டியா?”
“க்கும்………”
…
வெளிச்சம் விடை பெற, இருள் தன்னுடைய ஆட்சியை கோலோச்சியது.

விஜி ஆர் கிருஷ்ணன்
திருமதி விஜி ஆர் கிருஷ்ணன் ஒரு கல்வியாளர், எழுத்தாளர், கவிஞர், ஓவியர். அனைத்திற்கும் மேலாக இவர் ஒரு சின்னத்திரை நடிகர். சுமார் 25 ஆண்டுகள் ஶ்ரீ ராகவேந்திரா மெட்ரிகுலேஷன் பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வராக பணியாற்றி வருகிறார். 2015ல் எழுத்தாளராக அறிமுகமாகி இதுவரை 250 சிறுகதைகள், சில குறுநாவல்கள் மற்றும் ஏழு நூல்கள் வெளியிட்டுள்ளார்.
WriterSCafe – எழுத்தாளர் சங்கமம் குழுவினர் சார்பாக வெளியிடப்பட்ட “பேரன்பின் சுகந்தம்” என்ற முதலாவது சிறுகதை தொகுப்பில் இவர் எழுதிய “காவேரி ஓரம், கதை சொன்ன காதல்” என்ற சிறுகதை இடம் பெற்றுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன