
திடீரெனத் தூக்கத்தில், “புரியல, புரியல! திரும்பிச் சொல்லுங்க!” என்று கத்தினான் ஸாய்நாத். அவனைத் தட்டிக்கொடுத்தார்கள் அம்மாவும் அப்பாவும். அவனது முகம் பேயறைந்த மாதிரி வெளிறியிருந்தது. மேல் நெற்றியில் வியர்வைத் துளிகள் அரும்பியிருந்தன.
“ஏதோ கனவுப்பா” என்று சொல்லிவிட்டு, திரும்பிப் படுத்துக்கொண்டான் ஸாய்நாத்.
காலாண்டுத் தேர்வில் பத்தாவது ரேங்க். முதல் மூன்று இடங்களுக்குள் பத்தாம் வகுப்பு வரை வந்தவன், பிளஸ் ஒன்னில் பின்தங்குகிறான். பள்ளியை மாற்றியதாலா, ஆங்கில மீடியத்தில் சேர்த்ததாலா என்று யோசிக்க ஆரம்பித்தனர் பெற்றோர்.
அவனிடமே கேட்டுவிடலாம் என நினைத்துக்கொண்டே தூங்க ஆரம்பித்தார் அப்பா. ஒரு மணி நேரம்கூட அவரால் தூங்க முடியவில்லை.
சாயின் கனவில் எல்லா வாத்தியார்களும் பயமுறுத்தும் விதமாக வந்து ஆங்கிலத்திலேயே பாடம் எடுக்கின்றனர். “புரியல ஸார்!” என்று கத்திப் படுக்கையிலிருந்து விழுந்தான் சாய். அவன் முகம் வெளிறியிருந்தது.
அப்பா அவனது கையைப் பிடித்துக்கொண்டு, “ஏன்டா, ஆங்கில மீடியம் புரியலையா? திரும்பவும் தமிழ் மீடியத்துல போடவா?” என்று கேட்டார்.
“ஆமாம்பா, பாதி புரியவே மாட்டேங்குது. திரும்பவும் தமிழ் மீடியம் ஸ்கூல்லயே போட்டுடுங்கப்பா” என்று புன்னகைக்க முயன்றான் சாய்.
“நாளைக்கே மாத்திடுறேன்டா” என்று அப்பா ஆறுதலளித்தார்.
