பத்மா ராகவன்/ஒத்தக் கண்ணன்

சின்ன வயசுல, எதுக்கெடுத்தாலும் என்னோட பாட்டி, “ஒத்தக்கண்ணன் வருவான்”னு சொல்லிச் சொல்லி என்னைப் பயமுறுத்தும். மனசுக்குள்ள ஒத்தக்கண்ணன்னா இப்படித்தான் இருப்பான்னு பதிஞ்சு போச்சு.
பொறவு, சித்திரக் கல்லூரியில் சேர்ந்து, சித்திரம் வரையக் கத்துக்கிட்டப்போ ஒரு போட்டி வந்துச்சு. அழகா ஒத்தக்கண்ணனை வரைஞ்சு, அதை அந்தப் போட்டிக்கு அனுப்பி வச்சேன்.
சித்திரத்தைப் பார்த்தவங்க எல்லாம் சிரிச்சாங்க. “என்னடா கிறுக்கல் இது?”ன்னு கேட்டாங்க. பாட்டி வேற கிண்டலா சொல்லிச்சு: “எலே பயலே, ஒத்தக்கண்ணனைக் காட்டி எல்லாரையும் பயமுறுத்தாதடா”ன்னு.
“இதுக்கெல்லாம் எங்கே பரிசு வரப்போகுது?”ன்னு கொஞ்ச நாளில் நானும் அதைப் பத்தி மறந்துட்டேன்.
இடையில் பாட்டிக்கு நிமோனியா வந்திடுச்சு. தர்மாஸ்பத்திரி என்றாலும் கைச்செலவுக்குப் பணமில்லாம திண்டாடினோம்.
அடிச்சுது பரிசு! என்னோட சித்திரத்துக்கு முதல் இடம். அதோட ஒரு பெரிய மனுஷன், ஜாஸ்தி விலை கொடுத்து அதை வாங்கிக்கிறாராம்.
இப்போ ஒத்தக்கண்ணன், பாட்டி வைத்தியத்துக்கு மட்டுமில்லே, அவங்களுக்கு ஆர்லிக்ஸ், பழம், பால் வாங்கவும் பணம் கொடுத்துட்டான். எனக்கு ஒத்தக்கண்ணன்தாங்க தெய்வம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன