
பிருந்தாவனத்தின் அதிகாலைக் காற்று வெண்ணெய்ப் பொதிந்த மணம் போலக் கமழ்ந்தது. யமுனையின் கரைகளில் பறவைகளின் இன்னிசை பாற்கடலின் அலை ஓசை போலக் கேட்டது.
ஆனால், அந்தப் பொழுதில் நந்தகோகுலத்தின் அருகில் இருந்த ஒரு சிற்றூரில் இருந்த மாளிகைகளில் எழுந்த ஆரவாரம் அதைவிடப் பெரிது. பட்டுத்துணிகள் காற்றிலே பறந்தன; வாழை மரங்களும் தோரணங்களும் கட்டப்பட்டு வீதிகள் மணந்தன.
எட்டு வயதே ஆன சிறுமி கோபிகாவின் சிறிய நெற்றியில் குங்குமப் பொட்டு மின்னியது. அவளது பிஞ்சு விரல்களில் மஞ்சள் பூசப்பட்ட கயிறுகள் கட்டப்பட்டிருந்தன. அவளது பெரிய மை தீட்டிய கண்களில் ஒருவித மௌனமான வியப்பும், குழந்தைக்குரிய அச்சமும் பின்னிப் பிணைந்திருந்தன.
“கோபிகா… மகளே, இங்க வா,” என்றபடி அவளது தாய் அவளைத் தழுவிக்கொண்டாள். தாயின் கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டிருந்தது.
“அம்மா… நான் எங்கே போகப் போகிறேன்? இந்த வீட்டை விட்டு நான் எங்குமே வரமாட்டேனே!” என்று மழலை மாறாத குரலில் கேட்டாள் கோபிகா.
வீட்டின் மூலையில் அமர்ந்திருந்த பாட்டி, கோபிகாவின் கன்னத்தைத் தட்டிக் கொடுத்துச் சொன்னாள், “என் தங்கமே… நீ சாதாரணமான இடத்திற்கு போகவில்லை. கோ பூமி அது. அந்த ஊரின் பெயர் பிருந்தாவனம். அங்கே செல்வத்திற்குக் பஞ்சமே இல்லை. லட்சுமிதேவியே அங்கே பசுக்களின் குளம்படிகளில் நடமாடுகிறாள் என்பார்கள். கோகுலத்தின் செல்வம் நந்தபாபாவின் மாளிகையில் கொட்டிக் கிடப்பது போல, உன் கணவனின் வீடும் ஏழு தலைமுறைக்கும் குறையாத பொன்னும் பொருளும் நிறைந்தது.”
அக்கம் பக்கத்துப் பெண்கள் வியப்புடன் பேசிக் கொண்டனர்,
“அடடா… அந்த வீட்டுக்கு மருமகளாகப் போவது சாதாரண விஷயமா? தங்கக் கம்மலும், முத்து மாலையும் அவள் கழுத்தை அலங்கரிக்கப் போகிறது. நந்தனின் செல்வம் போன்றதொரு பெருமை இவள் போகும் அந்தக் குடும்பத்திற்கும் உண்டு!”
எல்லோரும் குரலை உயர்த்திப் பிருந்தாவனத்தின் செழிப்பைப் பற்றியும், மாளிகையின் பெருமையைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்த அந்த வேளையில், திடீரென்று அந்தப் பெண்களின் குரல்கள் ரகசிய முணுமுணுப்பாக மாறின. அவர்கள் தாழ்ந்த குரலில் பேசத் தொடங்கிய விதம், எட்டு வயதுக் குழந்தை கோபிகாவின் மனதில் ஒரு பெரும் புயலைக் கிளப்பியது.
பெண்கள் தங்களுக்குள் கிசுகிசுத்தார்கள்,
“ஆனால்… அங்கே ஒருவன் இருக்கிறானே… மாயக் கிருஷ்ணன்!”
“அவனது லீலைகள் சாதாரணமானவை அல்ல. அவன் கண்ணில்பட்டால் எந்தப் பெண்ணின் மனமும் கலங்கிவிடும். அவன் புல்லாங்குழல் ஓசை காற்றைக் கூட அடிமைப்படுத்திவிடும்.”
கோபிகா தன் பிஞ்சுச் செவிகளைத் தீட்டிக் கொண்டு அருகில் வந்தாள். அவளது இளம் மனதில் ஏதோவொரு விவரிக்க முடியாத பசி உருவானது.
“அம்மா… யார் அந்த மாயக் கிருஷ்ணன்? அவர் என்ன செய்கிறார்?” என்று ஆவலோடு கேட்டாள்.
யாரும் அவளுக்குப் பதிலளிக்கவில்லை. அச்சம் அவர்களின் முகங்களை மூடியிருந்தது. அப்போது, கூட்டத்தின் நடுவிலிருந்து மணமகன் வீட்டைச் சேர்ந்த மிக வயதான மூதாட்டி ஒருவள் தள்ளாடியபடி வந்தார். கோபிகாவின் கரத்தைப் பற்றி, தன் சுருக்கங்கள் விழுந்த கரங்களால் அவளது முகத்தைத் தாங்கினார். அந்த மூதாட்டியின் கண்கள் எதையோ கண்டு நடுங்குவது போல இருந்தன.
“குழந்தாய் கோபிகா… நீ பிருந்தாவனத்திற்குப் போகிறாய். அங்கே செல்வம் கொழிக்கும், இசை ஒலிக்கும், பக்தி பெருகும். ஆனால், ஒரே ஒரு எச்சரிக்கை என் கண்ணே… அந்த மாயக் கிருஷ்ணன் கண்ணில் பட்டுவிடாதே!”
கோபிகா திகைத்துப் போய் நின்றாள். “கண்ணில் பட்டால் என்ன பாட்டி நேரும்?”
மூதாட்டி குரலைத் தாழ்த்தி, ஒரு மந்திரம் போலச் சொன்னார்,
“அவன் இந்த உலகத்தின் மனிதன் அல்ல. அவன் புன்னகை ஒரு மாயை; அவனது பார்வை ஒரு சுழல். அவன் உன்னைப் பார்த்தால், இந்த உலகின் மீது நீ கொண்ட பற்று அறுபட்டுவிடும். அவன் உன்னைப் பார்த்து புன்னகைத்தால் , நீ உன்னை இழந்துவிடுவாய். எனவே, கோபிகாவே… அவன் உனக்கு எதிரில் வந்தால், உன் கண்களைக் கெட்டியாக மூடிக்கொள். ஒருபோதும் அவன் அருகில் செல்லாதே! இதுவே இந்த வாழ்வின் உனக்கான ஒரே விதி!”
அந்த வார்த்தைகள் கோபிகாவின் பிஞ்சு நெஞ்சில் ஒரு நெருப்பைப் பற்ற வைத்தன. ‘அவன் அப்படி யார்?
என்னை ஏன் பார்க்கக் கூடாது?
அவனைப் பார்க்கக் கூடாது என்றால், அவன் மேல் எனக்கேன் இத்தனை ஆர்வம் எழுகிறது?’ என்ற கேள்விகள் அவளது அடிமனத்தில் சுழன்றடித்தன.
மந்திரக் கோலங்கள் கோபிகாவின் விழி வீச்சில் மறைய, சடங்குகள் முடிவடைந்தன. வேத மந்திரங்கள் ஒலிக்க, எட்டு வயதுக் குழந்தை கோபிகா பிருந்தாவனத்தின் இளம் மருமகளாக மாளிகைக் கூண்டில் ஏறினாள்.
மாட்டு வண்டிகளும், உறவினர்களின் கூட்டமும் புடைசூழப் பிருந்தாவனத்தை நோக்கிப் பயணம் தொடங்கியது. இரண்டு நாட்களும் இரவும் பகலும் நீண்ட பயணம். வண்டியின் சக்கரங்கள் உருளும் ஓசையோடும், உறவினர்களின் பேச்சோடும் அந்தப் பயணம் நகர்ந்தது.
வழியில் மக்கள் பேசிய பேச்சு இந்திரனின் திருவிழாவைப் பற்றியது.
“இந்த ஆண்டு நாம் இந்திரனுக்கு விழா எடுக்கவில்லையே… நந்தனின் மகன் கிருஷ்ணன் ஏதோ புதிய வழியைக் காட்டுகிறானே!” என்றார் ஒரு பெரியவர்.
“ஆமாம்… மலைகளுக்குப் பூஜை செய்ய வேண்டும் என்கிறானாம். இந்திரனின் கோபத்திற்கு ஆளாகப் போகிறோமோ?” என்று மற்றொருவர் அச்சத்துடன் கூறினார்.
பயணத்தின் களைப்பு கோபிகாவின் கண்களை மூடிக்கொண்டது. அவள் தூங்கும்போது கூட, அந்த மூதாட்டியின் வார்த்தைகள் அவளது கனவில் ஒலித்துக் கொண்டே இருந்தன— “மாயக் கிருஷ்ணனைப் பார்த்தால் கண்களை மூடிக்கொள்…”
இரண்டு நாட்களுக்குப் பிறகு, பிருந்தாவனத்தின் எல்லைக்கு அருகில் வண்டிகள் வந்து நின்றன. ஆனால், அங்கே நிகழ்ந்திருந்த காட்சி அனைவரையும் உறைந்துபோகச் செய்தது.
பருவமழை காலமே இல்லாத அந்த வேளையில், பிருந்தாவனத்தின் எல்லை முழுவதும் நீர்ப் பெருக்கு பெருக்கெடுத்து ஓடியது. யமுனை நதி தனது கரைகளை மீறி ஊருக்குள் புகுந்திருந்தது. நீர் வழிந்த ஓடைகள் எங்கு பார்த்தாலும் வெள்ளமாகக் காட்சியளித்தன.
“இது என்ன அதிசயம்? மழை இல்லாமல் இவ்வளவு நீர் எங்குளிருந்து வந்தது?” என்று மாளிகையின் பெரியவர்கள் பதறினார்கள்.
அவர்கள் பிருந்தாவனத்திற்குள் நுழைந்தபோது, அதிர்ச்சி இன்னும் அதிகரித்தது. அந்தப் புகழ்பெற்ற பிருந்தாவன வீதிகள் முழுவதும் ஆள் அரவமின்றி வெறிச்சோடிக்கிடந்தன. வீடுகளின் கதவுகள் திறந்திருந்தன, ஆனால் மனிதர்களைக் காணவில்லை. வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட பாளையங்களைப் போல, அங்கே வசித்த சிறிய குழுக்களும், மக்களும் எங்கே சென்றார்கள் என்று தெரியாமல் திசைதடுமாறிச் சிதறிப் போயிருந்தனர்.
கோபிகாவின் கணவன் வீட்டார் கடும் பயத்தால் நடுங்கினர். “இங்கே ஏதோ அமானுஷ்யம் நடக்கிறது. இது சாதாரண வெள்ளம் அல்ல,” என்று அவர்கள் அலறினர்.அவர்கள் மாளிகையை பற்றிய கவலையும் ,அவர்கள் மாடுகளை பற்றிய கவலையிலும் ஆளாளுக்கு ஒரு பக்கம் சிதறி ஓடினர் .அந்த புதுப் பெண்ணை பற்றியும் நடந்த திருமணத்தைப் பற்றியும் மறந்தனர் .
அந்தப் புதிய இளம் கோபிகா எட்டு வயதுச் சிறுமி—அந்தக் குழப்பங்களுக்கு மத்தியிலும் எதையோ தேடத் தொடங்கினாள். அவளது மனம் முழுவதும் அந்த மூதாட்டி எச்சரித்த ‘மாயக் கிருஷ்ணன்’ என்ற பெயர்தான் எதிரொலித்தது.
அமைதியான அந்த வெள்ளப் பெருக்குக்கு நடுவில், எதையோ தேடும் வெறியுடன் கோபிகா தன் சிறிய கால்களால் நடக்கத் தொடங்கினாள். தூரத்தில் ஒரு தெய்வீக ஒளி பிரகாசிப்பதைப் போல அவளுக்குத் தோன்றியது. அந்த ஒளியின் பிரகாசம் அவளது இளம் இதயத்தை ஈர்த்தது.
அவள் அந்த ஒளியை நோக்கித் தன் நடையைத் துரிதப்படுத்தினாள். வெள்ள நீர் அவளது கணுக்காலை நனைத்தது; ஆயினும் அவள் நிற்கவில்லை.
அவள் அந்த இடத்தை நெருங்கியபோது, கண்ட காட்சி அவளது சுவாசத்தை நிறுத்தியது. அங்கே பூமியிலிருந்து உயர்ந்தெழுந்த ஒரு பிரம்மாண்டமான மலை நின்றது. அந்த மலை சாதாரணமானதல்ல; அது ஒரு மிகப்பெரிய குடையைப் போல வளைந்து, அத்தனை கோகுல மக்களையும், பசுக்களையும் தன் நிழலில் பாதுகாத்துக் கொண்டிருந்தது. அந்தச் காட்சி மனிதக் கண்களால் தாங்க முடியாத அளவுக்குத் வியக்கத்தக்கதாய் இருந்தது.
மேலும் அவள் தன் பார்வையை உயர்த்தினாள். அந்தப் பிரம்மாண்ட மலையை ஒரு சிறுவன் தன் ஒற்றைத் திருவிரலால் லாவகமாகத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்தான். அவனது உதடுகளில் அந்தப் புன்னகை… காலத்தையே வென்ற சிரிப்பு!
“அவன்தான்… மாயக் கிருஷ்ணன்!” என்று கோபிகாவின் மனம் துடித்தது.
அப்போதுதான் அவளுக்கு அந்த மூதாட்டியின் எச்சரிக்கை நினைவுக்கு வந்தது “அவன் உன் கண்ணில்பட்டால் உன் கண்களை மூடிக்கொள்… அவன் அருகில் செல்லாதே!”
அச்சமும் ஆச்சரியமும் ஒருசேரப் பிடித்துக்கொள்ள, எட்டு வயது கோபிகா தன் பிஞ்சுக் கரங்களால் அவசரமாகக் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டாள்.
ஆனால், அந்தத் திருப்பத்தில் அவளது சிறிய கால்கள் சறுக்கின. வெள்ள நீரால் வழுக்கிய பாறையில் அவளது சமநிலை குலைந்தது.
“அம்மா…” என்ற அவளது பிஞ்சுக் குரல் யமுனையின் நீரில் கரைந்தது. அவள் கீழே சரிந்தாள்.
அவள் உயிர் பிரியும் அந்த இறுதித் தருணத்தில், அவளது மூடிய கண் இமைகளுக்குள்ளும், அந்த நீர்த்துளிகளிலும் பதிந்த கடைசிக்காட்சி எது தெரியுமா?
அந்த கோவர்தன கிரியைத் தன் விரலில் ஏந்தியபடி, அவளைப் பார்த்துக் கனிவோடு புன்னகைத்த ‘கோவர்தன கிரிதாரி’யின் திருமுகம் மட்டுமே!
அவள் உயிர் அந்தச் சித்திரத்திலே உறைந்துபோனது. அந்தப் பிரம்மாண்டமான காட்சியும், கோபிகாவின் விழிகளில் தேங்கிய அந்தத் தரிசனமும் அப்படியே உறைந்து விட்டன.
காலங்கள் ஓடின. யுகங்கள் மாறின, பேரரசுகள் தோன்றி, மறைந்தன. ஆனால் காதல் அழியுமா?
காலத்தின் ஆழத்திலிருந்து ஆன்மாக்கள் கரையுமா?
ஆயிரம், இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்தன.
அவளது கண்கள் எப்போதுமே எதையோ தேடிக்கொண்டிருந்தன. எட்டு வயதுடைய கோபிகாவாக யமுனைக் கரையில் சறுக்கி வீழ்ந்த அந்த ஆன்மா, இப்போது அரசியாக எழுந்து நின்று காதலைப் பாடியது.
யாரும் அறியாத அந்த ரகசியம் அவளுக்கு மட்டுமே புரிந்திருந்தது—பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அந்த வெள்ளத்தில் மிதந்தபோது தான் கண்ட அந்த ஒரு பார்வை, தன் பிறவிகளைத் தாண்டித் தன்னைத் தொடர்கிறது என்பதை அவள் உணர்ந்திருந்தாள்.
அவள் தன் காதலைப் பற்றிப் பாடும்போது கண்ணீர் மல்கக் கூறினாள், “உலகம் என்னை ஒற்றைக் காலில் நிற்கச் சொன்னாலும், என் கால்கள் அந்த மாயக் கிருஷ்ணனின் சந்நிதியை நோக்கியே ஓடும். அவன் புன்னகைதான் என் ஆயுள்; அவனது விரல் தாங்கிய கோவர்தனம்தான் என் அடைக்கலம்!”
அவள் அந்த மாயக் கிருஷ்ணனுடன், தன் கோவர்தன கிரிதாரியுடன், ஒரு நாள் முழுமையாக ஒன்றிணைய வேண்டும் என்ற ஒரே தாகத்தோடு தன் வாழ்நாளைக் கழித்தாள். கிரிதர கோபாலனின் நாமத்தையே மூச்சாகக் கொண்டு வாழ்ந்தாள்.
கோபிகாவின் கண்கள் அன்று யமுனையில் மூடிக்கொண்டாலும், அவளது ஆன்மாவின் கண்கள் அந்த கிரிதாரியின் ஒளியை என்றென்றும் பார்த்துக் கொண்டேதான் இருந்தன! அந்தத் தரிசனம் ஒருநாளும் அவளை விட்டு அகலவில்லை.
அவள் கைகளில் தம்பூரா மீட்டப்பட்டது. அவளது கால்களில் சலங்கைகள் ஒலித்தன.
அவள் தன் தம்பூராவை மீட்டியபடி ,
“மேரே தோ கிரிதர் கோபால், தூஸ்ரோ ந கோயி…
ஜாகே ஸிர் மோர் முகுட் மேரோ பதி சோயி…!”
(எனது ஒரே தலைவன் அந்த கிரிதர கோபாலன்தான்; மயிலிறகு சூடிய அவனே எனக்குப் பதி!)
ராஜஸ்தானின் மணல் பரவிய மேவாரின் காற்றில் மிதந்து வரும் இது போன்ற எண்ணற்ற அமரகீதங்கள் சொல்லும் அவள் திருநாமம் ‘மீரா’.
