WriterSCafe எழுத்தாளர் சங்கமம் சார்பாக வெளியிடப்பட்ட “கோட்ட வூடு” என்ற இரண்டாவது சிறுகதை தொகுப்பில் இருந்து திருமதி அன்புச்செல்வி சுப்புராஜூ எழுதிய ” தோடைக்காணோம் ” என்ற சிறுகதை உங்கள் வாசிப்பிற்கு:

“அம்மாவுக்கு நேரங்குறிச்சாச்சுனு,” தாக்கல் வரவும், அரக்கப்பரக்க ஓடிவந்தா சாரதா. தெருமுனையிலேயே நின்றிருந்த சித்தப்பா, “ஏத்தா சாரதா, செத்த நில்லுத்தா,”ன்னு கூப்பிடவும், கெதங்குனு அடிவயிறு கலங்க நின்னா சாரதா.
“வீட்டுக்குள்ள இருந்து பெரிய அழுகை சத்தம் எதுவும் கேக்கல; அப்ப அம்மா நல்லாதா இருக்காக,” உள்ளுக்குள்ள நெனச்சிக்கிட்டே, “சொல்லுங்க சித்தப்பா,”ன்னு, கேட்டா.
“வீட்டுக்கு மூத்த புள்ள நீ, எல்லாத்தையும் பொறுப்பா எடுத்துச் செய்யணும். இம்புட்டு தாமதமாவா வரது? சரி, சரி, போத்தா போயி பொறுப்பேத்துக்க.”
அவர் பேசிட்டு இருக்கும் போதே, அம்மாவைப் பார்க்குற அவசரத்துல உள்ளே ஓடினா சாரதா.
கூடியிருந்த சனமெல்லாம் அவளைப் பார்த்ததும், ஓடிவந்து, மேலே விழுந்து கட்டிப்பிடிச்சு, அழுதாங்க. அவளும் சேர்ந்து அழுதா;
“இந்தாத்தா, கையோட அம்மாவுக்கு பாலூத்து”ன்னு, யாரோ டம்ளர கையில திணிக்கவும், நெஞ்சு பதறி கை நடுங்க, நிலை குத்தின பார்வையோட அசையாம படுத்திருந்த அம்மா கிட்ட போய் நின்னு, “ஏம்மா, இப்படி அசையாம பொணமாட்டம் கிடக்க; நீ இல்லனா நாங்க அனாதையா கேப்பாரத்துப் போயிடுவோம்; வந்துடும்மா”ன்னு மனசுக்குள்ள புலம்பினா.
அது அம்மாவுக்கு கேட்டுச்சோ என்னமோ; வலதுகால் கட்டை விரலை வேகமா ஆட்டினாங்க.
“ஆத்தி, அம்மாவுக்கு வாழணும்னு நெனப்பு இருக்கு! பாலூத்துனா அம்புட்டுதே; பரலோகமுல போய்டுவாக; கூடாது சாமி; எங்க அம்மா எங்க கூடத்தே இருக்கணுங்கிற உறுதியோட,
“அம்மாவ திரும்ப ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போவோம்; அவுக பொழச்சிக்குவாக”ன்னு சத்தமா சொன்ன சாரதா கையைப்பிடிச்சு “நீ மொதல்ல பாலூத்து; பொறவு பார்க்கலாம்”ன்னு சொல்லிக்கிட்டே பாலூத்த வச்சிட்டாங்க.
அடுத்த அஞ்சு நிமிஷத்துல உசுரு போயிடுச்சு.
“நாம பாலூத்தாம இருந்திருந்தா, இன்னும் கொஞ்ச நாள் இருந்திருக்குமோ?”ன்னு நெனச்சுக் கதறி அழ ஆரம்பிச்சா சாரதா.
அன்னைக்கி சாயந்திரம் எல்லாம் முடிஞ்சப்புறம், சாரதாவையும், அவளோட தங்கச்சியையும் கூப்பிட்ட சித்தப்பா, “இந்தாங்கத்தா, உங்கம்மாவோட தோடு”ன்னு கொடுத்தாரு.
“தம்பி மகளுக்கு, அதான் பேத்திக்கு கொடுக்கணும்னு அம்மா ஆசப்பட்டாங்க; தம்பி கிட்டே கொடுத்துங்க சித்தப்பா”ன்னு, சாரதா சொல்லவும், “வித்து ஆளுக்கு கொஞ்சம் பிரிச்சுப்போம் அக்கா,” தங்கச்சி குரல் குடுக்க, கூட்டத்துல கசகசப்பா பேச்சு எழுந்துச்சு.
ஆள் மாத்தி ஆள், பேசினாங்க. ஒன்னும் முடிவாகல.
“சரி, இப்போதைக்கு தாய்க்கு சமமான தாய்மாமா கிட்ட கொடுத்து வைங்க. எப்பவாச்சும் நாலு பேரும் ஒன்னா ஒத்துமையா சேர்ந்து வந்து வாங்கிக்கங்க,”ன்னு, ஊரு பெரியவரு சொல்ல, ஒரு மனசா மாமாகிட்ட தோடைக் கொடுத்து வச்சிட்டு நாலு பேரும் நாலு தெசைக்குப்பிரிஞ்சு போயிட்டாங்க.
அதுக்கப்புறம் அடிக்கடி ஊருக்குப் போனாலும், நாலு பேராலயும் சேர்ந்து போக முடியல. தனித்தனியா போனதால மாமாவிடம் தோட்டைப் பத்தி பேசவே முடியல. அந்தா இந்தானு ஏழெட்டு வருசம் ஓடிப்போச்சு.
ஒரு விசேசத்துக்காக ஊருப்பக்கம் வந்த நாலு பேரும், திரும்பவும் ஒன்னு கூடி சந்தோசமாப்பேசிக்கிட்டு இருந்தாங்க.
அப்ப தம்பி பொண்டாட்டி, மெதுவா சாரதா கிட்ட, “நாலு பேரும் திரும்ப எப்ப ஒன்னு சேருவோம்னு தெரியாது அண்ணி. இப்போ எல்லாரும் சேர்ந்து, உங்க மாமா கிட்ட உங்கம்மாவோட தோட்டைக் கேப்போமா?”ன்னு கேட்டா.
காலங்கழிஞ்சதாலோ என்னவோ, புத்தி வந்த நாலு பேரும் ஒத்துமையா மாமா கிட்டபோயி கேட்டாங்க.
“எம் பொண்டாட்டி, அதான் உங்க அத்தையோட தோடு உங்களுக்கு எதுக்கு?”ன்னு மாமா கேட்டாரு.
“நாங்க கொடுத்த எங்க அம்மாவோடத்தோட்டைக்கேக்குறோம் மாமா”ன்னு, சாரதா சொன்னா.
“ஏழெட்டு வருசமா எத்தனமொறை ஊருக்கு வந்தீங்க? இதுவரைக்கும் யாராவது கேட்டு வாங்கிட்டுப்போயிருக்கமாட்டீங்களா என்ன? யாரு கிட்ட கொடுத்தேன்; என்னாங்குறது மறந்துடுச்சு; ஆனா கொடுத்துட்டேன். இப்ப ஒன்னுந்தெரியாத மாதிரி திரும்பக் கேட்டு இந்த பெரிய மனுசனஅசிங்கப்படுத்தறீங்களா?”ன்னு சத்தமா மாமா கேட்டதும், நாலு பேரும் தெகைச்சு நின்னாங்க.
தங்கச்சியும், தம்பியும் கோபத்துல பேசப்போனாங்க. அதைத்தடுத்த சாரதா அமைதியாச்சொன்னா; “மாமா மேல நாம ஏன் கொறைபட்டுக்கணும்? எவ்வளவோ போயிச்சு. இந்த ஒத்தத் தோடு போறதுனால, ஒன்னும் பிரச்சனை இல்ல. நம்ம ஒறவ விட நகையப்பெரிசா நெனச்சதாலத்தான் அது காணாமப்போயிடுச்சு. நாம ஒத்துமையா ஆகுறதுக்கு கொடுத்த விலை தான் அந்தத் தோடு,” – அவள் சொன்னதும் யாருக்கும் வார்த்தை வரல.
எல்லாரும் அம்மாவோட நினைவுகளைச்சுமந்துக்கிட்டு, மாமா வீட்டை விட்டு அமைதியா வெளியேறினாங்க.

அன்புச்செல்வி சுப்புராஜூ
திருமதி அன்புச்செல்வி சுப்புராஜூ பிறந்தது தேனி மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஆண்டிபட்டி நகரம். தற்போது இவர் வசிப்பது திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பட்டாபிராம். அன்பின் சங்கமம் என்ற அமைப்பின் அமைப்பாளர். புதுக்கவிதைகள் , ஹைக்கூ கவிதைகள் , தன்முனைக் கவிதைகள், சிறுகதைகள் , கட்டுரைகள், சிறார் இலக்கியம் என இதுவரையில் இவர் வெளியிட்டுள்ள நூல்கள் 36. கனடா – தமிழாழிக்காட்சியில் நிகழ்ச்சித்தொகுப்பாளராக இதுவரை 300 நிகழ்வுகள் நடத்தியுள்ளார். கம்போடிய அரசுடன் இணைந்து அங்கோர்வாட் தமிழ்ச்சங்கம் இவருக்கு “சர்வதேச பாரதியார் விருது” அளித்து கவுரவித்துள்ளது.
கனடா – தமிழாழிப் பேரவை வழங்கிய “கலையாழி” விருது உள்பட இதுவரை இவர் பெற்றுள்ள விருதுகள் பல.

மிகவும் பெருமையாக இருக்கிறது
தோழியின் சாதனைகள் அறிந்து.
மேலும் சிறப்புடன் பயணிக்க வாழ்த்துகள்.