தீபாவளி அன்று எண்ணெய் குளியல்: அறிவியல் விளக்கம்

தென்னகத்தில் நாம் அனைவரும் தீபாவளியன்று எண்ணெய் ஸ்நானம் செய்வதை அறிவோம். அனைவரும் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது, “கங்கா ஸ்நானம் ஆச்சா?” என்றுதான் கேட்டு தீபாவளி வாழ்த்துகளைப் பரிமாறிக்கொள்வோம். எண்ணெய் குளியலும், கங்கா ஸ்நானமும் ஏன்? அவற்றின் தாத்பரியம் என்ன? ஆன்மிகம் தவிர, அவற்றுக்குப் பின்னால் என்ன அறிவியல் காரணம் இருக்கக்கூடும்?
வடக்கில் இதைத் தீபத் திருநாளாக, தீப வரிசைகளை ஏற்றி கொண்டாடுகிறார்கள். என்றாலும், இந்தியா முழுவதும் ஒருங்கிணைந்து கொண்டாடப்படும் இந்தப் பண்டிகையில் ஆச்சரியமான அறிவியல் அம்சங்களும் உள்ளன!
ஆன்மிக ரீதியாக, எண்ணெயில் மகாலட்சுமி வாசம் செய்வதாகவும், பிரம்ம முகூர்த்தத்தில் குளிக்கப் பயன்படுத்தும் வெந்நீரில் கங்கா தேவியும், சிகைக்காயில் வாயு பகவானும் இருப்பதாகவும் ஐதீகம்.
எண்ணெயில் மகாலட்சுமியும், புத்தாடைகளில் மகாவிஷ்ணுவும், சந்தனத்தில் பூமாதேவியும், குங்குமத்தில் கௌரி தேவியும், மலர்களில் முனிவர்களும், தீபாவளி லேகியத்தில் தன்வந்திரி பகவானும், தீப ஒளியில் தேவர்களும் இருப்பதாகவும், அன்றைய தினம் அவர்களின் ஆசியும் நமக்குக் கிடைக்கும் என்றும் புராணங்கள் கூறுகின்றன.
மனிதர்களும் தேவர்களும் பட்ட நரக வேதனை அழிந்த நாள்
நரகாசுரன் என்ற அசுரன் மனிதர்களையும் தேவர்களையும் சிறையில் அடைத்து, சிற்றவதை செய்து ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தான். அவனை அழிக்க வழி தெரியாமல் தேவர்கள் ஸ்ரீகிருஷ்ணரை வேண்டினர்.
அசுரர்கள் எப்போதுமே சிவபெருமானை வேண்டித் தவமிருந்து விசித்திரமான வரங்களைப் பெற்று, சிவபெருமானையே சோதிப்பார்கள்.
நரகாசுரன் பெற்ற விசித்திரமான வரம் என்னவென்றால், தன் தாயின் கையால்தான் தனக்கு மரணம் நேர வேண்டும் என்பதாகும். அந்த வரத்தைப் பெற்றதால் அவன் செய்த அட்டூழியங்கள் கொஞ்சநஞ்சமல்ல. உலகில் அந்தகாரம் (இருள்) சூழச் செய்து, தேவர்களையும் சிறைப்பிடித்து, பெண்களைக் கொடுமைக்கு உள்ளாக்கினான்.
ஒரு கட்டத்தில், மிகுந்த கோபமுற்ற பூமாதேவி (சத்யபாமா), பகவான் கிருஷ்ண பரமாத்மாவின் துணையோடு நரகாசுரனை வதம் செய்தாள்.
நரகாசுரனின் அகங்காரம் அழிந்தவுடன், எந்தத் தாயும் தீய சக்திகளைப் பொறுத்துக்கொள்ள மாட்டாள் என்பதை உணர்ந்த அவன், தாயிடம் ஒரு வரம் கேட்கிறான். தான் இறந்த பிறகு இந்த உலகம் பிரகாசம் அடைய வேண்டும் என்றும், மக்கள் இருளிலிருந்து மீண்டு விளக்கேற்றி, வாசனைத் திரவியங்கள் கலந்த நறுமணமுள்ள நல்லெண்ணெயைத் தேய்த்துக் குளித்து, புத்தாடை அணிந்து, பலகாரங்களும் இனிப்புகளும் உண்டு, ஆரவாரமாகப் பட்டாசுகள் வெடித்து, பூமத்தாப்புகளைக் கொளுத்திக் கொண்டாட வேண்டும் என்றும் வரம் பெற்றான்.
வாசனைத் திரவியங்களாகப் பூக்கள், ஜவ்வாது, ஒரு ஏலக்காய், உடல் நலத்திற்கான மிளகு ஆகியவற்றைச் சேர்த்துக் குளிப்பது நல்லது.
சதுர்த்தசி திதியும் அமாவாசையும் கூடும் இந்த நேரத்தில், நாம் தீப வரிசைகளை ஏற்றி தீபாவளியைக் கொண்டாடுகிறோம்.
நரகாசுரன் அழிந்த இந்த நாளில், நமது துன்பங்கள் மறைந்து இனி இன்பங்கள் பெருக வேண்டும் என்று மகாலட்சுமி தேவியை வழிபடுகிறோம்.
எண்ணெயில் மகாலட்சுமியும், பிரம்ம முகூர்த்தத்தில் வெந்நீரில் கங்கா தேவியும், சிகைக்காயில் வாயு பகவானும் இருப்பதாக ஐதீகம்.
இவ்வாறு அதிகாலையில் குளிப்பது, புத்தாடை அணிவது ஆகியவை மனமும் உடலும் புத்துணர்ச்சியோடு ஒரு புதிய தொடக்கத்தை வாழ்வில் தரும் என்ற நம்பிக்கை உள்ளது.
எண்ணெய் குளியலின் அறிவியல் விளக்கம்
அறிவியல் ரீதியாக, குளிர்காலத்தின் தொடக்கம் என்பதால் தோல் வறண்டு போகாமல், நமது சருமத்தின் ஈரப்பதம் பாதுகாக்கப்பட்டு மிருதுவாக இருக்கும். நல்லெண்ணெய் உடலின் உஷ்ணத்தைக் குறைக்கும்.
உடல் முழுவதும் எண்ணெயைத் தேய்த்து மசாஜ் செய்து (அப்யங்க முறை), சிறிது நேரம் ஊறவைக்கும்போது, தோலின் துவாரங்கள் திறக்கப்பட்டு இரத்த ஓட்டம் சீராகிறது. நரம்புகளுக்குப் புத்துணர்ச்சி அளிக்கிறது.
எண்ணெய் உடலின் மூட்டுகளில் ஊடுருவும்போது, குளிர்காலத்தில் ஏற்படும் தசைப்பிடிப்பு, மூட்டு வலி ஆகியவை ஏற்படாமல், தசைகளின் எண்ணெய்ப்பசைத் தன்மையால் இயக்கம் சீராக இருக்கும்.
பொதுவாக, தீபாவளி நாளில் நாம் அதிகாலையில் தலையில் எண்ணெய் வைத்து, மசாஜ் செய்து குளிப்பதால் மன அழுத்தம் குறைந்து, மனதுக்கும் உடலுக்கும் அமைதி கிடைக்கிறது. இதனால் புத்துணர்ச்சியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கின்றன. நேர்மறை எண்ணங்களும் நல்ல சிந்தனைகளும் தோன்றுகின்றன.
