சுஶ்ரீ/மாயத் தோற்றம்

வீல் என்ற சத்தத்துடன் படுக்கையில் எழுந்து உட்கார்ந்தாள் வனஜா. ஓடி வந்தாள் சாந்தம்மா, வனஜாவின் தாயார். இது இப்போது அடிக்கடி நடக்கிறது. அதுவும் நடராஜன் சிங்கப்பூர் சென்ற பிறகு. தன் கணவனிடம் இதைப் பற்றிச் சொல்ல சாந்தம்மாவுக்குப் பயம்.
வனஜாவின் கைகால்கள் நடுங்கி, முகம் அஷ்டகோணலாக மாறியது. வாயின் ஓரத்தில் எச்சில் ஒழுகியது. சாந்தம்மா அவளைத் தன் மடியில் படுக்க வைத்து, டவலால் முகத்தைத் துடைத்து ஆசுவாசப்படுத்தினாள். வனஜா பயந்த முகத்துடன் பேந்தப் பேந்த விழித்தாள்.
நடராஜன் திரும்பி வந்தவுடன் தன் ஆசை மகளையே தேடினார். சாந்தம்மா தயங்கித் தயங்கி வனஜாவின் நிலைமையைச் சொன்னாள்.
உடனே மனநல மருத்துவர் சங்கரநாராயணனிடம் வனஜாவை அழைத்துச் சென்றார். அவர் பரிசோதனை செய்து, இது ஒரு மாயத்தோற்றம் (Hallucination) என அனுமானித்தார். அவளிடம் ஒரு காகிதத்தையும் பல வண்ணங்களையும் கொடுத்து, மனதில் தோன்றுவதை வரையச் சொன்னார். வனஜா வண்ணங்களால் பல பாவங்களில் சுமார் ஆறு முகங்களை வரைந்தாள்.
அவளை மயக்க நிலையில் ஆழ்த்தி விசாரித்ததில், ஆறு பேருடன் சென்ற ஒரு ஆட்டோ, பேருந்துடன் மோதி நொறுங்கிய கோர விபத்தை நேரில் பார்த்த அதிர்ச்சிதான் இதற்குக் காரணம் எனத் தெரிந்தது. தேவையான ஓய்வுக்குப் பிறகு சரியாகிவிடும் என்று மருத்துவர் நடராஜனுக்கு ஆறுதல் கூறி அனுப்பினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன