ஒளிவண்ணன்/எனக்கு ஏனோ ஒரு சோர்வு.

44 ஆண்டுகளாக நாங்கள் ஆங்கிலத்தில் பதிப்பகம் நடத்தி வருகிறோம். அப்பா தொடங்கிய காலத்தில் சென்னையில் மிகப்பெரிய பன்னாட்டு ஆங்கிலப் பதிப்பகங்கள் ஆதிக்கம் செலுத்திய சூழல் அது. தன்னுடைய அய்ம்பதாவது வயதில் அப்பா இந்த முயற்சியை எடுத்தபோது, பலரும் அவரை எச்சரித்தனர்; ஒரு சிலர் மட்டுமே அவரது முடிவை ஆதரித்தனர்.

இன்னும் என் நினைவில் பசுமையாக இருக்கிறது. அப்பாவின் மிக நெருங்கிய நண்பரும், முக்கியமான துறையில் உச்சத்தில் இருந்தவருமான ஒருவர் அக்கறையுடன், “பெரிய சுறா மீன்களும் திமிங்கிலங்களும் நிறைந்த இந்தப் பதிப்புக் கடலில், உங்களால் ஒரு சிறிய மீனாக நீந்திவிட முடியுமா?” எனக் கேட்டார்.

அதற்கு அப்பா, “சிறியதாக இருப்பதே ஒரு பாதுகாப்பு. நாம் யாரிடமும் சிக்க மாட்டோம்; நீந்துவதற்கும் எளிது” என்றார்.

காலச்சக்கரம் சுழல்கிறது… இன்றைக்கு அந்தத் திமிங்கிலங்களும் சுறாக்களும் தங்கள் கடைகளை மூடிவிட்டன.

ஆயிரத்திற்கும் மேலான ஆங்கில நூல்கள்; தென்னிந்தியாவில் உள்ள அத்தனை பல்கலைக்கழகங்களிலும் எங்களது பதிப்பகத்தின் நூல்கள் பாடநூல்களாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எண்ணற்ற ஆராய்ச்சி நூல்கள், ஒப்பிலக்கியங்கள்; நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களைப் பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து உரிமத்தைப் பெற்று ஆங்கிலத்தில் கொண்டு வந்தோம். அதேபோல, உலக மொழிகளிலிருந்து தமிழ் மொழியில் 30-க்கும் மேற்பட்ட புத்தகங்களைக் கொண்டுவந்து எங்கள் எல்லைகளை விரிவாக்கிச் சென்றோம்.

இன்று ஒரு நண்பர் தனிச் செய்தியாக என்னிடத்தில் ‘அரசு மையங்களோடு ஒட்டி உறவாடி கோடிக்கணக்கில் சம்பாதித்தவர்தானே நீங்கள்’ என்று கேள்வி கேட்டிருந்தார்.

சிரிப்புதான் வந்தது.

பெரியார் அறிவுலகத்திற்கு எங்களிடம் வாங்கப்பட்ட ஆங்கில நூல்கள் இரண்டே இரண்டுதான்! Just two. அதிலும் ஒரு நூல், அக்குழுவில் இடம் பெற்றிருந்த, திட்டக்குழுவில் பணியாற்றிய பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் அவர்களுடைய ஆங்கில நூல்.

எத்தனை எத்தனையோ பிரபலமான எழுத்தாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் அமைச்சர் பெருமக்கள், துணைவேந்தர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பேராசிரியர்கள், அறிவியலாளர்கள்… எந்த நூலுக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. பெரியார் மட்டுமல்ல – அண்ணா கலைஞர்கூட கண்டு கொள்ளவில்லை.

நாங்கள் நூலகங்களை மட்டுமே நம்பிப் பதிப்பகம் நடத்தாத காரணத்தால், இதில் எனக்கு எந்தவிதமான வருத்தமும் இல்லை.

ஆனால், கடந்த இரு தினங்களாக எனக்கு ஏனோ ஒரு சோர்வு.

பொறியியல் பட்டம், வணிக மேலாண்மைப் படிப்பு, ஆறாண்டுகள் உழைத்து வாங்கிய முனைவர் பட்டம் (Ph.D.), ஆயிரக்கணக்கானவர்கள் பயன்பெறும் வகையில் நடத்திய பயிற்சிப் பட்டறைகள், அல்லும் பகலும் பதிப்பகமே கதி என்று வாழ்ந்த வாழ்க்கை… இவை எல்லாமே விழலுக்கு இறைத்த நீராகிவிட்டதா?

கல்வி அமைச்சர்கள், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர்கள் எனக் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு அனைவருமே என்னுடன் நெருங்கிப் பழகியுள்ளனர். நான் என்றைக்குமே யார் வீட்டு வாசலிலும் சென்று காத்திருந்ததே இல்லை. நான் காரில் இருந்து இறங்கிச் சென்றவுடன் என்னை நேரடியாக அழைத்துச் சென்று அவர்களது தனியறையில் உட்கார வைப்பார்கள். அதற்கு முக்கிய காரணம், எனக்காகவோ என் பதிப்பகத்துக்காகவோ யாரிடமும் நான் ஒரு முறைகூடச் சிபாரிசு செய்ததில்லை. நான் சார்ந்த ரோட்டரி அமைப்புக்கான சமூகப் பணிகளுக்காக மட்டுமே அமைச்சர்களையும் அதிகாரிகளையும் அணுகியிருக்கிறேன்.

அருமைச் சகோதரர் மனுஷ்யபுத்திரனின் வேண்டுகோளுக்காக, என்னுடைய ரோட்டரி சங்கத்தின் தலைவர் அன்புச் சகோதரர் குமார் வாயிலாக, 10 இலட்சம் ரூபாய்க்குத் தேவநேயப் பாவாணர் கட்டிடத்தில் கழிப்பறைகளைச் செப்பனிட்டுக் கட்டித் தந்தோம். ‘சென்னை இலக்கியத் திருவிழா’வை கடந்த 13 ஆண்டுகளாக எங்கள் சொந்தக் காசு போட்டு நடத்தி வருகிறோம். பல கல்லூரிகளிலே பயிற்சிப் பட்டறை நடத்தி மாணவர்களைத் தயார் செய்திருக்கிறோம்.

ஒருமுறை முன்னாள் அமைச்சர் மா.சு. அவர்கள், “அண்ணே, நம்முடைய புத்தகங்களுக்கு (அவருடைய பல புத்தகங்களைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் பதிப்பித்துள்ளேன்) ஏதாவது ஆர்டர் கிடைத்ததா?” என என்னிடம் கேட்டார்.

‘இல்லை’ என்று சொன்னால் அவருக்குச் சங்கடம்; ‘உதவ முடியுமா?’ என்று கேட்பது என் தன்மானத்திற்கு இழுக்கு. அதனால் வெறுமனே புன்னகைத்தேன். நல்லவேளை, அதற்குள் அவருக்கு ஒரு கைப்பேசி அழைப்பு வர, அவர் அதில் மூழ்க… நான் அங்கிருந்து விடைபெற்றுக்கொண்டேன்.

இதில் கொடுமை என்னவென்றால் ஒரு முக்கியமான விஐபி. இரண்டு நூல்களை அவருக்கு மொழிபெயர்ப்பு செய்து கொடுத்துள்ளோம். பணமே கொடுக்காமல் இழுத்து அடித்துக் கொண்டிருக்கிறார்.

இதெல்லாம் புன்னகையுடன்தான் கடக்கிறோம்.

எவனோ பெயரே தெரியாதவன் எல்லாம், பதிப்புத் துறையின் அரிச்சுவடி கூட அறியாமல், அதிகார மையத்தோடு ஒட்டி உறவாடிக் கொள்ளையடிப்பதைப் பார்க்கும்போது, கடுமையான எரிச்சலும் வெறுப்பும்தான் வருகிறது.

எனக்கு இனிமேல் இந்தத் துறையில் சம்பாதித்து குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் கட்டாயம் இல்லை. ஆனால், நூற்றுக்கணக்கான பதிப்பாளர்கள் இன்றைக்கு இதையே தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்டு போராடிக்கொண்டிருக்கிறார்கள். பல நண்பர்கள் தங்களுடைய அடுத்த தலைமுறையினரையும் இந்தத் துறைக்குள் அழைத்து வந்து இந்தச் சூதாட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள். அந்தத் தம்பிகளெல்லாம் கஷ்டப்படுவதைப் பார்க்கும்போது பரிதாபமாக இருக்கிறது. இரவும் பகலும் உழைக்கிறார்கள்; ஊர் ஊராகச் சுற்றுகிறார்கள்.

அவர்களுக்காகவாவது கொஞ்சம் கருணை காட்டுங்கள்.

எவ்வளவு வேண்டுமானாலும் ஊழல் செய்துகொள்ளுங்கள்;

ஆனால், இங்கே காலங்காலமாக உழவாரப்பணி செய்துவரும் உண்மையான பதிப்பாளர்களையும் கொஞ்சம் நினைவில் கொள்ளுங்கள்!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன