
இங்கு நல்ல நூல்கள் கிடைக்காது.
நல்ல நூல்கள் கிடைக்காது.
நூல்கள் கிடைக்காது.
________
கல்வியானாலும், கலை இலக்கியத் துறையானாலும் நாம் அடிக்கடி கேரளாவையும், மேற்கு வங்கத்தையும் உதாரணம் காட்டுகிறோம். மக்களால் வாங்கப்படும், வாசிக்கப்படும் நூல்களின் அளவினை வைத்தும், நூலகங்களின் பயன்பாட்டைப் பொறுத்தும் அந்தச் சமூகத்தின் அறிவு முதிர்ச்சியை நாம் ஓரளவு எடைபோட்டுப் பார்க்கமுடியும். தமிழ்நாட்டையும் அப்படி யாராவது உதாரணம் காட்டுகிறார்களா என்று தெரியாது.
கடந்த பல ஆண்டுகளாகவே, நூலகங்களுக்கு புத்தகங்களைக் கொள்முதல் செய்யாமல் இழுத்தடித்த அரசு, ஒரு கட்டத்தில் இரண்டு மூன்று ஆண்டுகளுக்குச் சேர்த்துவைத்து பேருக்காக ஒரு நூலகக் கொள்முதல் ஆணையை வெளியிடுகிறது. அதை நம்பி பதிப்பாளர்கள் பலரும் ஒவ்வொரு தலைப்பிற்கும் ரூ.100 கட்டி, ஒவ்வொரு தலைப்பிலும் எட்டுப் பிரதிகள் என்றவகையில் முறையாக விண்ணப்பிக்கிறார்கள்.
உதாரணத்திற்கு, ஒரு பதிப்பகம் 10 புத்தகத்திற்கு விண்ணப்பிக்கிறார்கள் என்றால் அவர்கள் ஒவ்வொரு தலைப்பிலும் 8 புத்தகங்கள் வீதம் 80 புத்தகங்களை திரும்பக் கிடைக்காத உத்தரவாதத்துடன் அனுப்பியாக வேண்டும். இத்துடன், ரூபாய் 100 வீதம் ரூ.1,000 போயே போச்சு. இதெல்லாம். நடைமுறை.
லஞ்சம் வாங்குவது தவறு என்னும் சுரணையே இல்லாமல், அது நமது படிப்புக்கும் பதவிக்கும் கிடைக்கும் சன்மானம் என்ற அரிய புரிதலோடு மாறிவிட்ட அதிகாரிகள் மட்டம் தக்க தரகரை எண்ணி தவங்கிடக்கையில், சிலர் தரகுவேலை செய்வதற்காக, குளித்துமுடித்து, குங்குமம், விபூதியுடன் களத்தில் இறங்கிவிடுகிறார்கள். நூலகத் துறைசார்ந்த அதிகாரிகளின் வாசலில் பியூன்போல நிற்கிறார்கள். அதிகாரிகளை அணுகி, எவ்வளவு நூலக ஆர்டர் போட்டால், எத்தனை சதவீதம் லஞ்சமாகக் கிடைக்கும், என்று கணக்குப்போட்டுச் சொல்லியபடியே அதிகாரிகளுக்கு, வளைந்து வழிந்து மதிய உணவை ஊட்டிவிடுகிறார்கள். கொடுக்கவேண்டிய லஞ்சம், கிடைக்கவேண்டிய கமிஷன் இவற்றை உறுதி செய்துகொண்டபின், வளைந்த உடலை நிமிர்த்திக்கொண்டு, தங்களின் தரகு வேடத்தைக் களைந்துவிட்டு, குழுவாக இணைந்து ஒரு பாரம்பரியமிக்க பதிப்பாளரைப்போல வெளியே வந்து ஆளுக்கொரு திசையில் ஆள் பிடிக்கிறார்கள்.
சக பதிப்பாளர்களை (இந்த இடத்தில் சக தரகர்களை என்று படிக்க வேண்டாம்) முறையாக அணுகுகிறார். உங்களால் இத்தனை சதவீதம் லஞ்சம் தரமுடியுமா? என்று கேட்கிறார். எவ்வளவு லஞ்சம் தந்தால் எவ்வளவு நூலக ஆணை கிடைக்கும் என்று தனது லேவாதேவி அறிவையெல்லாம் கொட்டி விளக்குகிறார். முடியாது என்று சொன்னால் அவர் முட்டாள். வட்டிக்கு வாங்கியாவது கொடுக்க முன்வந்தால் அவர் பிழைக்கத் தெரிந்தவர். பொதுவாக, லஞ்சத்தை கையூட்டு என்று சொல்வது வழக்கம். ஆனால் இப்போது ஊக்கத் தொகை என்று சொல்வதாகவும் கேள்வி.
லஞ்சம் கொடுக்க முன்வந்தாலும், இங்குதான் பதிப்பாளர்களுக்கு ஒரு பிரச்சினை உருவாகிறது. ஒரு பதிப்பகம் ஓராண்டில் அல்லது ஒருசில ஆண்டில் 10 முதல் 50 தலைப்புகளில் புத்தகங்களைப் புதிதாக பதிப்பித்திருக்கும். இதில் நூலக ஆணை கிடைக்கும் தகுதியுடையவையாக 25 புத்தகங்கள் இருப்பதாக வைத்துக்கொண்டால், விற்பனை விலையிலிருந்து தோராயமாக மூன்றில் ஒரு பங்கு விலை வைத்துத்தான் அரசு கொள்முதல் செய்யும். ஒரு பதிப்பகத்திற்கு தோராயமாக பத்து லட்சம் மதிப்பீட்டிற்கு நூலக ஆணை கிடைக்கலாம். நூலக ஆணையின் தொகைக்கேற்ப, அதிலிருந்து 20 சதவீதம் லஞ்சம். பத்து லட்சத்திற்கு 2 லட்சம் லஞ்சமாகக் கொடுக்கவேண்டும். இப்போது நூலக விண்ணப்பத்துடன் அனுப்பிய மாதிரி புத்தகத்தில் உள்ளதைப்போன்ற தாள், வடிவமைப்பு, அட்டையின் தரம் என்று வைத்து அச்சடித்தால் மீளமுடியாது. என்ன செய்வது?, இருப்பதிலேயே மலிவான தாள், அட்டை என்று அச்சிட்டு அனுப்பினாலும், கொடுத்த லஞ்சம், அச்சு, ஒவ்வொரு மாவட்ட மைய நூலகத்திற்கும் அனுப்பிவைக்கும் செலவு என்று கணக்கிட்டுப் பார்த்தால், மூன்று வருடம் கழித்து கையில் ரூ.50 ஆயிரம் நின்றால் பெரிய விசயம்.
’வெறும் 50 ஆயிரத்திற்கு இந்த ரிஸ்க் எடுக்கணுமா?’ என்று பதிப்பாளர் யோசிக்கிறார். அலைந்து திரிந்து ஆர்டர் பிடித்துவருவதாகச் சொல்லிவிட்டு, கமிஷன் உலகத்தில் மிதக்கும், தரகர் விடுவாரா?. மாற்று யோசனையை முன்வைப்பார். அதாவது, ‘வெறும் 10 லட்சத்தில் ஆர்டரை வாங்கினால்தானே இந்தப் சொற்ப ஐம்பதாயிரப் பிரச்சினை. இதுவே, ஒரு கோடிக்கு ஆர்டர் வாங்கினால்?’ என்று கேட்பார். பதிப்பாளர் யோசிப்பார். ஆஹா… ஒருகோடிக்கு ஆர்டர் வாங்கினால், பத்து லட்சத்திற்கு ரூ.50 ஆயிரம் என்ற லாபக்கணக்கு, ரூ.2.5 லட்சமாக மாறிவிடும். ரூ.2.5 லட்சத்தை 10ஆல் பெருக்கினால் ரூ.25 லட்சம் லாபமாக நிற்கும். பதிப்பாளர் கணக்குப் போட்டுப்பார்த்து நிம்மதி அடைகிறார். ஆனால் கூடவே இன்னொரு குழப்பம். நமக்கு, ஒரு கோடிக்கு ஆர்டர் கிடைக்குமா? அப்படியே கிடைத்தாலும் அனுப்புவதற்கு நம்மிடம் புத்தகம் வேண்டுமில்லையா?.
ஓராண்டில் குறைந்த புத்தகங்களையே வெளியிடும் ஒரு பதிப்பாளருக்கு கோடிகளில் நூலக ஆணை கிடைத்தால் அவரால் எப்படி அவ்வளவு புத்தகங்களை அனுப்ப முடியும்? என்பது நமக்குத்தான் முக்கியமான கேள்வி. ஆனால் நமது தரகர் அநாயசமாக ‘அதை நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் ஆகவேண்டியதைப் பாருங்கள்’ என்கிறார். (தரகர் என்பவரும் சக பதிப்பாளர்தான் என்பதை இங்கே மீண்டும் நினைவூட்டக் கடமைப்பட்டுள்ளேன்)
நமது தரகர் எப்போதும் கையில் உள்ள பையில் ஒரு டிவிடி-யை தயாராக வைத்திருப்பார். குறைந்த விலைக்கு அந்த டிவிடி-யை பதிப்பாளருக்குக் கொடுத்து உதவுவார். அதில் நாட்டுடமையாக்கப்பட்ட புத்தகங்கள் மற்றும் வேறு பதிப்பகங்கள் வெளியிட்ட புத்தகங்களின் முழுமையான வடிவமைப்பு ஆகியவை தயாராக இருக்கும். பதிப்பாளர் செய்யவேண்டியது.. முன்அட்டை மற்றும் உள்ளே உள்ள முதலிரண்டு பக்கங்களில் தேவையான மாற்றங்களைச் செய்யவேண்டும். அதாவது, புத்தகத்தின் பெயர் சத்ய சோதனை என்று இருந்தால் இவர் அதை சத்யம், சோதனை என்று மாற்றிப்போட்டு அச்சடிக்க வேண்டும். பிறகு அதே புத்தகத்தை ‘காந்தி நீந்திக் கடந்தது சத்யமா? சோதனையா?’ என்று மீண்டும் தலைப்பை மாற்றி குறிப்பிட்ட அளவுப் பிரதிகளை அச்சடிப்பார். இப்படியே அட்டைகளை மாற்றி மாற்றி ஐந்தாறுமுறை அச்சடித்தபிறகு, கொத்தமல்லி, கருவேப்பிலையைத் தூவி இறக்கினால் நூலக ஆணைக்கான புத்தகங்கள் தயார்.
கடந்த பல வருடங்களாக நூலகத்திற்கு அனுப்பிவைத்த அதே புத்தகத்தை, இந்த பாணியில், தலைப்புகளை மாற்றி மாற்றி அச்சடித்து அனுப்பி வைப்பார்.
எல்லாம் சரிதான். குறிப்பிட்ட பதிப்பகங்கள் மட்டும் கோடிகளில் நூலக ஆணை பெறும்போது மற்ற பதிப்பாளர்களுக்கு சந்தேகம் வராதா?. கேள்வி கேட்கமாட்டார்களா?. கேட்பார்கள். அதாவது, ஏன் நியாயமாக நடக்கவில்லை என்று நியாயம் கேட்கமாட்டார்கள். அநியாயத்தில் தங்களுக்கான பங்கில்லை என்றால், இதென்ன அநியாயம்? என்று கேள்வி கேட்கத்தான் செய்வார்கள். ஆனால் ஒரு கோடிக்கான ஆர்டரையும் ஒரே பெயரில் வாங்காமல் நூலக ஆணை பெறுவதற்காக ஒருவரே ஐந்தாறு லெட்டர் பேடு பதிப்பகங்களைத் துவங்கி, அதன்பேரில் வாங்கும்போது இந்தப் பிரச்சினை சுமுகமாக முடிகிறது.
இந்த மைய நூலக நீரோட்டத்தில், பதிப்பாளர்கள்தான் நூலக ஆணை பெறமுடியும் என்றில்லை. பிரிண்டர்கள், பைண்டர்கள், டிடிபி செய்பவர்கள் என யார் வேண்டுமானாலும் ஆணை பெறலாம். அதிகாரிகளுக்குத் தேவை புத்தகங்களின் பட்டியலும், அதற்கு இணையான பணமும்தான். இரண்டும் சமமாக இருக்க வேண்டும் என்பது மிக முக்கியம். யாரும் யாரையும் ஏமாற்றமுடியாது. லஞ்சம் வாங்குவதிலும் ஒரு நேர்மையை கடைப்பிடிப்பார்கள்.
அதிகமும் கவனமாக இருக்கவேண்டிய விசயம் என்னவென்றால், ஒரு குறிப்பிட்ட புத்தகம், அதன் பக்க அளவு கருதியும், படிப்பதற்கு வசதியாக இருக்கவேண்டும் என்பதற்காகவும், அதை 3 தொகுதிகளாக வெளியிட்டிருப்போம். அதில் இரண்டு தொகுதிகளுக்கு மட்டுமே நூலக ஆணை கிடைக்கும். மூன்றாம் தொகுதிக்கு கிடைக்காது. ஏனென்றால் நீங்கள் கொடுத்த பணத்தின் அளவுக்குள் மூன்றாம் தொகுதி அடங்கி இருக்காது. அதனால், மூன்றாம் தொகுதி கடைசிவரை இடம்பெறாமலே புத்தகங்களை அனுப்பவேண்டும். நூலகத்தில் முதல் இரண்டு தொகுதிகளைப் படித்த ஒரு வாசகன், மூன்றாம் தொகுதியைத் தேடினால் கடைசிவரை கிடைக்காமல்போக இதுவே முக்கியக் காரணம்.
சரி, லஞ்சம் கொடுத்தோம், நூலக ஆணை கிடைத்தது. சாணித்தாளில் அச்சடித்து சொந்தச் செலவில் ஒவ்வொரு மாவட்டத்தின் நூலகத்திற்கும் அனுப்பியாகிவிட்டது. வேலை முடிந்தது. பணம் வந்துவிடுமா?
ஒவ்வொரு பதிப்பாளர்களுக்கும் இதுதான் சோதனைக்காலம். எல்லாம் அவன் செயல்தான்.
தமது நூலகத்திற்கு வந்துள்ள நூல்களைப் பிரித்து, தரவுகளை எழுதிக்கொண்டு, கணக்கு முடித்து, பதிப்பாளருக்கு காசோலை அனுப்பி வைக்கவேண்டியது மாவட்ட நூலகரின் கட்டுப்பாட்டில் வருகிறது. அனைத்து மாவட்டங்களில் இருந்தும் காசோலைகள் வந்துசேர 3 முதல் 6 மாதகாலம் ஆகலாம். இது இப்போது இரண்டு மூன்று ஆண்டுகள்வரை ஆகிறது. சில மாவட்டங்களில் கடைசிவரை வராமல் போவதும் உண்டு.
எல்லா நடைமுறை உண்மைகளையும் தெரிந்துவைத்துள்ளதால், மாவட்ட நூலகர், வந்திருக்கும் புத்தகக் கட்டுகளைப் பிரிக்காமல் அப்படியே வைத்திருப்பார். பதிப்பாளர் சென்னையிலுள்ள முதன்மை அலுவலரை அணுகுவார். அவர் உடனடியாக மாவட்ட நூலகருக்குப் பேசுவார். பேசினால் நடந்துவிடுமா? ‘உனக்கு வந்தா ரத்தம், எனக்கு வந்தா தக்காளி சட்னியா?’ மாவட்ட நூலகர் திருப்பிக் கேட்பார்தானே? வேறுவழியில்லை. வாங்கிய பணத்துக்கான வட்டி ஏறிக்கொண்டே இருக்கும். ஓடோடிப்போய் மாவட்ட நூலகரிடம் நிற்பார். சென்னை எலி, தமிழ்நாட்டின் கடை கோடியிலுள்ள ஒரு மாவட்ட நூலகத்தில் வைக்கப்பட்ட பொறியில் மாட்டிக்கொண்டு முழிப்பதை இங்கே நாம் பார்க்கலாம். ஒரே வழிதான். சென்னை அதிகாரியின் உத்தரவுப்படி, மாவட்ட நூலகருக்கு ஒரு 5% வெட்டியவுடன், பதிப்பாளரின் புத்தகம் புத்தூர் கட்டுபோல மிக லாவகமாக பிரிக்கப்படும். வேலை எளிதாக முடித்துக் கொடுக்கப்படும்.
#லஞ்சம்_கொடுக்காமல்_நூலக_ஆணையே_கிடைக்காதா?
கிடைக்கும். இப்படி கேள்வி கேட்கும் பதிப்பாளர்களுக்கு அல்லது எந்தெந்த பதிப்பகங்களின் வாய்களை அடைக்க வேண்டுமோ, அவர்களின் வாயை அடைத்து மூடும் அளவுக்கு திருப்திகரமான ஒரு ஆணையைக் கொடுப்பார்கள். அவர்களும் அப்படியே அமைதியாக புத்தகங்களை அச்சடித்து நூலகங்களுக்கு அனுப்பிவிடுவார்கள். குறுக்குவழியில் நூலக ஆணைபெற்று தவறான புத்தகங்களை நூலகங்களுக்கு அனுப்பும் சுயநலவாதிகளைக் காட்டிலும், மக்களுக்கானவர்களாக, இலக்கியத்தின் அடையாளமாக தங்களை முன்னிறுத்திக்கொண்டு, பாரம்பரியம் பேசும் பதிப்பாளர்கள், லஞ்சம் கொடுப்பதில்லை என்றாலும், தங்களுக்குக் கிடைத்தால்போதும், என்ற அறம்பிறழ்ந்த போக்குதான் உண்மையான சாபக்கேடு.
#எழுத்தாளர்கள்_என்ன_செய்கிறார்கள்?
தங்களின் படைப்புகளில் தவறுதலாக ஒரு எழுத்துப்பிழை நேர்ந்துவிட்டால் தமிழையே கொலை செய்துவிட்டதாக அறச்சீற்றம் கொள்ளும் எழுத்தாளர்கள், ஒரு பதிப்பகத்தில் தங்களின் புத்தகம் என்னமாதியான அட்டைப்படம், எந்தத் தாளில், எப்படி வரவேண்டும் என்றெல்லாம் பாடமெடுக்கும் எழுத்தாளர்கள், தங்களின் அதே படைப்பு சாணித்தாளில் முறைகேடான வழிகளில் அச்சாகிச் சென்று, நூலகங்களில் மூன்றாண்டுக்குள் மக்கிப்போவதுபோன்ற இழிசெயலை எங்கேயேனும் கண்டித்திருக்கிறார்களா என்று தேடிப்பார்த்தால் ஏமாற்றமே. ஆனாலும் குறுக்குவழி மேவிய சாணித்தாளச்சுக்கு உரிமைத் தொகைகேட்டு அறச்சீற்றத்தை தொடர்வார்கள்.
யாழ் நூலகம் எரிந்தபோது மொழியின் முதுகெலும்பு உடைந்துவிட்டது என்று கதறினோம். ஆனால் இன்றைய தமிழகத்திலுள்ள நூலகச் சூழலைப் பார்க்கும்போது தமிழை, அதன் வரலாற்றுத் தொடர்ச்சியை, எதிர்கால நீட்சிக்கான விதைத் தானியங்களைப்போல சேர்த்துவைக்க வேண்டிய நூலகங்களில் இப்படி குப்பைக் கூளங்களாக சேர்த்து வைத்துவிட்டு பல்லாயிரமாண்டு பாரம்பரியம். ஈராயிரம் ஆண்டுக்கு முந்தைய இலக்கிய வளம் என்றெல்லாம் பேசித் திரிவது வெட்கக்கேடானது. தமிழகத்தில் வெளியான ஒரு நூல், அதன் தரத்தைப் பொறுத்து, அடுத்த ஒரு மாதத்தில் சிங்கப்பூர் நூலகத்தில் படிக்கக் கிடைக்கிறது. ஏதேனும் ஒரு நூலில் சிறிய அளவில் அச்சு மங்களாக இருந்தாலோ, முனை மழுங்கி இருந்தாலோ உடனடியாக அதை நிராகரிக்கிறார்கள். அதோடு, தரமற்ற அந்த நூலினை அனுப்பிய நூலகக் கொள்முதல் ஏற்றுமதியாளருக்கு தண்டத் தொகையும் விதிக்கிறார்கள். அதேபோலவே, தமிழகத்தில் வெளியாகும் பெரும்பாலான நூல்களை கனடாவிலுள்ள நூலகத்தில் மூன்று மாதங்களுக்குள் எடுத்துப் படிக்கலாம். உலக நாடுகள் இப்படி தமிழ் நூல்களைக் கொண்டாடிக் கொண்டிருக்கும்போது, இங்கு அதன் வேர்களில் வெந்நீர் ஊற்றுகிறோம் என்பதே வெளிப்படை.
‘படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்,
போவான், போவான், ஐயோவென்று போவான்!
இது வெறும் வரிகளல்ல, நாட்டை, மொழியை ஆழ்ந்து நேசித்த ஒரு கவிஞனின் மந்திரச் சொல். அறம் தவறும்போது மந்திரமே சாபமாகும்…
