கம்பனைக் காண்போம்—16 /வளவ. துரையன்

                                     

                     கண்ணன் போன்ற வெள்ளம்

       செறிநறுந் தயிரும் பாலும் வெண்ணெயும் சேந்த நெய்யும்
       உறியொடு வாரி உண்டு குருந்தொடு மருதம் உந்தி
       மறி விழி ஆயர் மாதர் வனை துகில் வாரும்நீரால்
       பொறிவரி அரவின் ஆடும் புனிதன் போலும் அன்றே!           [27]

[செறி=உறைந்த; மறிவிழி=மான்குட்டி போல மருண்ட பார்வை;
வனை துகில்=உடுத்திய ஆடை; பொறி=புள்ளி; புனிதன்=கண்ணன்]

அந்த வெள்ளம் என்ன செய்ததாம்? உறைந்த நல்ல மணமுள்ள தயிர், பால், வெண்ணெய், ஆகிய இவற்றைக், கட்டித் தொங்கவிடப்பட்டுள்ள உரியுடன் வாரி விழுங்கியதாம். குருந்த மரத்தையும், மருத மரத்தையும் முறித்துத் தள்ளியதாம். மான்குட்டியின் விழி போல மருண்ட பார்வை உடைய இடைச்சியர் உடுத்திருந்த ஆடைகளையும் கவர்ந்ததாம். இவை எல்லாம் கண்ணன் சிறுவயதில் செய்த செயல்கள் அல்லவா? எனவே அந்த வெள்ளம், புள்ளிகளையும் வரிகளையும் உடைய பாம்பின் மீது ஆடுகின்ற கண்ணனை ஒத்திருந்ததாம்.