இலக்கிய இன்பம் 18/கோவை எழிலன்

ஏதிலர் என்னும் இவ்வூர்

தன் காதலனை தன் கண்ணில் சிறை எடுத்து இருக்கிறாள் இப்பெண். கண்ணுக்குள் இருக்கும் காதலன் தான் இமை மூடினால் மறைந்து விடுவானோ என்ற அச்சத்தில் கண் மூடித் துயிலவும் மறுக்கிறாள். இவள் துயில் மறந்து கிடப்பதை தோழியர் மூலம் அறிந்த உற்றார் இவளுக்கு இத்துயர் அளித்த காதலனைப் பழிக்கின்றனர். இவளோ அவர்களை உண்மை தெரியாதவர் என்று கூறுகிறாள்.

தன் காதலன் தன்னை விட்டுப் பிரிந்திருந்த போதும் உற்றார் அவனைப் பழிக்கக் கூடாது என்ற நோக்கத்தில் தான் துயில் மறந்தமைக்குக் கூட காரணம் கற்பிக்கும் இப்பெண்ணின் காதற் சிறப்பை நயம்படக் காட்டுகிறது இக்குறள்.

“இமைப்பிற் கரப்பாக்
கறிவல் அனைத்திற்கே
ஏதிலர் என்னுமிவ் வூர்”