WriterSCafe எழுத்தாளர் சங்கமம் சார்பாக வெளியிடப்பட்ட “கோட்ட வூடு” என்ற இரண்டாவது சிறுகதை தொகுப்பில் இருந்து திருமதி சுபாஷிணி ரமணன் எழுதிய ” பேய் அடித்த அடி” ” என்ற சிறுகதை உங்கள் வாசிப்பிற்கு:

பெரியசாமி தேக்கு மர நாற்காலி ஒன்றில் பெரிய மீசையுடன் உட்கார்ந்திருந்தார். கை மீசையை முறுக்கியபடி இருந்தது.
“ம், அப்புறம்?” என்றார், பக்கத்தில் அமர்ந்திருந்த மற்ற பெரிய மனிதர்களைப் பார்த்து.
“அப்புறமென்ன, அப்புறம். கிராமத்து வழக்கமெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா மறைஞ்சுட்டு வருது. இதே மாதிரி போச்சுன்னா, நம்ம ஊரும் டவுனு மாதிரி ஆயிடும். சாதி கிடையாது. சாமி கிடையாதுன்னு தறுதலையா ஆயிட்டு வராங்களே! இன்னிக்குக் கோதண்டத்துக்கு நடந்தது தான், நாளைக்கு நமக்கும். சாதி, சனம் பாத்து வாழ்ந்த நம்ம பெரியவங்கள்லாம் முட்டாளா? இல்ல, தெரியாமத்தான் கேக்கறேன். நாலு கோண எழுத்து படிச்சுட்டா, பெரிய அறிவாளி ஆயிடுவீங்களோ!”
எப்போதும் ஜாதி, ஜாதி என்று உயிரை விடும் முத்துக் கருப்பன் கோபத்துடன் பேசி முடித்தார். அத்துடன் குற்றம் சாட்டப்பட்டுத் தலையைக் குனிந்தவாறு நின்றிருந்த இராமசாமியை முறைத்துப் பார்த்தார்.
அவர் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த இளவட்டங்கள் சிரித்தார்கள்.
“என்னங்கடா சிரிப்பு?” மறுபடி கோபத்துடன் கூட்டத்தை முறைத்தார் முத்துக் கருப்பன்.
“இராமசாமி கோதண்டத்தை வளைச்சு, சீதாவைக் கட்டிக்கலாம்னு நினைச்சானோ என்னவோ!” வெடுக்கென்று பதில் சொன்னான் கூட்டத்தில் ஒருவன்.
அந்தப் பெயர்களின் பொருத்தத்தையும், அவன் சொன்ன விதத்தையும் ரசித்த கூட்டத்தினர், மறுபடி சிரித்தார்கள்.
…..
அழகிய நல்லூர் ஒரு சின்ன கிராமம். பெயருக்கேற்ற மாதிரி அழகும் இருந்தது. நல்ல மனிதர்களும் இருந்தனர்.
ஆனால் சாதி வெறி மட்டும் இன்னும் நீங்காத கிராமம். அன்று அந்த கிராமமே, கோவில் அருகே இருந்த பெரிய ஆலமரத்து அடியில் கூடியிருந்தார்கள்.
காரணம் – கீழ்ச்சாதி என்று ஊர்க்காரர்களால் ஒதுக்கப் பட்டிருந்த குடும்பத்தில் பிறந்தவனான இராமசாமியும், மேல் சாதியைச் சேர்ந்த சீதாவும் ஒருவரை ஒருவர் விரும்பியது தான்.
சென்னையில் படித்துக் கொண்டிருந்த போது, ஒரே ஊர்க்காரர்கள் என்பதால் தொடங்கிய பழக்கம், மெதுவாக காதலாக மாறியது. அதுதான் இப்போது பஞ்சாயத்தில் முடிந்திருந்தது.
“நீங்க இப்படி வெட்டி அரட்டை அடிக்கத்தான் இங்க வந்து உக்காந்திருக்கோமா?”
கோபத்துடன் குரல் உயர்த்தினார் பெரியசாமி.
“கோபிச்சுக்காதீங்க தலைவரே! நீங்க தான் தீர்ப்பைச் சொல்லணும்,” பணிவுடன் சொன்னார் கோதண்டம்.
கோதண்டமும், பெரியசாமியும் ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள் தான். தூரத்து உறவும் கூட. ஆனால் வசதியில் பெரியசாமி உயர்ந்து விட்டார்.
தன் ஒரே மகளைப் படிக்க வைத்து, வசதியான மாப்பிள்ளைக்குக் கட்டி வைத்து விட்டால், தன் நிலைமையும் உயர்ந்து விடும் என்று மனக்கணக்குப் போட்டுக் கொண்டிருந்தார் கோதண்டம். அந்தப் பெண் இப்படி ஒரு காரியத்தைச் செய்து விட்டு வந்ததில், அவருக்கு மகா வருத்தம்.
மாறி, மாறிப் பேசினார்கள். ‘சீதாவை இராமசாமிக்குக் கல்யாணம் செய்து வைத்து விடலாம்,’ என்று கூட இளவயதுக்காரர்கள் சொன்னார்கள். ஆனால் சாதியைக் காப்பாற்றப் பிறந்தவர்கள், அதை ஒத்துக் கொள்ளவில்லை. முக்கியமாய் கோதண்டமே, அதை ஒத்துக் கொள்ளாத போது, வேறு பேச்சுக்கே இடமில்லை. கடைசியில் பஞ்சாயத்து முடிவைச் சொல்லும்படி எல்லோரும் பெரியசாமியைக் கேட்டுக் கொண்டார்கள்.
பெரியசாமிக்கு உருப்படாத மகன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் மாடசாமி. ‘மடசாமி,’ என்று தான் பெரியசாமி அவனைக் கூப்பிடுவது வழக்கம். வயது முப்பத்தைந்து. சிறிய வயதில் திருமணம் என்ற கால்கட்டைப் போட்டுக் கொள்ள, அவனுக்கு விருப்பம் இல்லை. அதற்குப் பிறகு அவன் குணத்தைத் தெரிந்து கொண்டு, அவனுக்குப் பெண் கொடுக்க யாரும் முன்வரவில்லை. இந்தப் பஞ்சாயத்தைப் பயன்படுத்திக் கொண்டு, சீதாவை தன் மகனுக்குத் திருமணம் செய்து விட வேண்டும் என்று யோசிக்க ஆரம்பித்தார். அதற்கேற்ப பேச்சை ஆரம்பித்தார்.
“முதல்ல இராமசாமிக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்னு முடிவு பண்ணனும். நம்ம கிராமத்துல இதுக்கு முன்னயும் இது போல நடந்திருக்கு. பொண்ணோட அப்பனுக்கு மனக்கஷ்டத்தைக் கொடுத்த பயலுவளுக்கு, பொண்ணோட அப்பன் கையாலேயே சாட்டையடி கொடுத்து, அந்தப் பொண்ணுக்கு வேற இடத்துல கல்யாணம் முடியற வரைக்கும், அவன் ஊருக்குள்ள வரக் கூடாதுன்னு அனுப்பி வைக்கறது தான் வழக்கம். இராமசாமிக்கும் அதே தண்டனையைக் கொடுக்கறதுன்னு இந்தப் பஞ்சாயத்து முடிவு பண்ணுது,” என்று தீர்ப்பை முடித்தார் பெரியசாமி.
துள்ளி எழுந்த கோதண்டம், தன் மகள் மேல் காட்ட முடியாத ஆத்திரத்தை, இராமசாமியை கை வலிக்கும் வரை அடித்துத் தீர்த்துக் கொண்டார்.
இராமசாமியின் தந்தையும், தாயும் இந்தக் கொடூரத்தைப் பார்க்க முடியாமல், வாயில் துணியை வைத்து அடைத்துக் கொண்டனர்.
இராமசாமி துவளத் துவள, “இரா…மூ,” என்ற அலறல் சீதாவிடமிருந்து வந்தது. “அவனை விட்டுடுங்க, நான் அவன் கிட்ட பேச மாட்டேன். பாக்க மாட்டேன். அவனை விட்டுடுங்க,” என்று கதறிக் கொண்டே சரிந்து மயங்கி விழுந்தாள்.
சீதாவைக் கூட்டத்தை விட்டு இரு பெண்கள் தாங்கிப் பிடித்துக் கொண்டு, அவர்கள் வீட்டிற்குக் கூட்டிப் போனார்கள்.
இராமசாமியைத் தூக்கி அருகிலிருந்த மேடையில் படுக்க வைத்தார்கள். “கொஞ்ச நேரம் கழித்து கூட்டிட்டுப் போங்க,” என்று பெரியசாமி அவன் பெற்றோருக்கு உத்தரவு கொடுத்தார்.
பின்னர் மறுபடி பெரியசாமி பேச ஆரம்பித்தார். “இராமசாமிக்குத் தண்டனை குடுத்தாச்சு. அந்த சீதாப் பொண்ணின் கதி என்ன?”என்றார் மக்களைப் பார்த்து.
“தலைவரே! நீங்க தான் ஒரு வழி சொல்லணும்,” என்றார் கோதண்டம்.
இதற்காகவே காத்திருந்த பெரியசாமி ஆரம்பித்தார்.
“இன்னொருத்தன் கூட பழகுன பொண்ண, கல்யாணம் பண்றது கஷ்டம். நம்மூரு பொண்ண விட்டுக் குடுக்க முடியாது. அதனால, சீதாவை எம் மருமவளா ஏத்துக்கறதா முடிவு பண்ணியிருக்கேன்.”
என் மனைவி, மகன் ஆட்சேபணை சொன்னாலும் நான் பாத்துக்கறேன். கோதண்டமும், ஊர் மக்களும் என்ன நினைக்கறீங்களோ சொல்லலாம்.”
பெரியசாமிக்கு வேண்டியவர்களும், அவரால் பிழைப்பவர்களும், ஊரில் நிறைய பேர் இருந்தார்கள். எனவே பல குரல்கள், உடனே அவரை வாழ்த்தி எழுந்தன.
“தலைவரே! உங்க பெரிய மனசு யாருக்கு வரும்?”
அநியாயத்தைத் தட்டிக் கேக்க துணிச்சலில்லாத, ஏற்றுக் கொள்ளவும் மனமில்லாத, சில குரல்கள் மெதுவாக ஒலித்தன.
“கிளியை வளத்து, பூனை கையில் குடுத்த மாதிரி, என்ன இது கொடுமை!”
ஆனால், அக்கிரமக்காரர்களின் ஒருமித்த குரலில், இந்தச் சலசலப்பு அடங்கி விட்டது. அதற்கும் மேலாய், இதை யார் தடுக்க வேண்டுமோ, அந்தக் கோதண்டமே மகிழ்ந்து போய், பஞ்சாயத்து என்றும் பாராமல் பெரியசாமியின் கால்களில் விழுந்தார்.
“தலைவரே! பொண்ண எப்படிக் கரை சேக்கப் போறோம்னு பயந்துட்டு இருந்தேன்.”
“அட என்னப்பா இது! முதல்ல எழுந்திருப்பா! நாம ஒண்ணுக்குள்ள ஒண்ணு உறவு முறை வேற! எதுக்கும், உம் பொண்டாட்டியையும், பொண்ணையும் ஒரு வார்த்தைக் கேட்டுக்கோ! எம் பையன் நான் கிழிச்ச கோட்டை தாண்ட மாட்டான். ஆனா, உம் பொண்ணு?” என்று இழுத்தவர், அங்கே நின்றிருந்த தன் மகனை அருகில் அழைத்தார்.
“இதோ பார்! உம் புத்தி தெரிஞ்சும், அந்தப் பொண்ணை உங்கையில் குடுக்கப் பாக்கறேன். ஒழுங்கா குடும்பம் நடத்துவியா?” என்று மெதுவான குரலில் யாருக்கும் கேட்காதவாறு கேட்டார்.
அசட்டு இளிப்பு இளித்தவாறு, “உங்க பேச்சை மீறுவனாப்பா?”என்றான் சத்புத்திரன் போல.
கொம்பு சீவிய மாடு போல குதித்தெழுந்த கோதண்டம், “எம் மனைவி, மக்களும் அப்படித் தான். எதோ கிரக நிலை சரியில்லாம அப்படி நடந்து கிட்டா,” என்று கூறி விட்டு கூட்டத்தில் அமர்ந்திருந்த தன் மனைவி சிவகாமியைப் பார்த்தார்.
பஞ்சாயத்தின் பாதியில் எழுந்து போகக் கூடாது என்பதற்காக அமர்ந்திருந்த சிவகாமி, “இதுக்கு அந்தப் பொண்ணு கல்யாணம், காட்சி இல்லாமலேயே காலம் கடத்தலாம்,” என்ற தன் நினைப்பை ஒதுக்கி வைத்து விட்டு, “இருவருமாய்ச் சேர்ந்தால் தன் மகளை உயிரோடு வைக்க மாட்டார்கள்,” என்ற பயத்தால் சம்மதம் என்னும் விதமாக தலையை ஆட்டினார்.
தாமதம் செய்தால் காரியம் கெட்டுவிடும் என்று தெரிந்து, இங்கேயே பேச்சை ஆரம்பித்த பெரியசாமி மகிழ்ந்தார். “அப்போ இங்கேயே எல்லோர் முன்னாலயும் நிச்சயம் பண்ணிடலாமா?” என்று பெரியசாமி கேட்க, அவசரமாகத் தட்டும், பழங்களும், வெற்றிலை, பாக்கோடு வரவழைக்கப் பட்டு அவசர நிச்சயம் நடந்தது.
பதினைந்து நாட்களுக்குள் பெரியசாமியின் பெரிய வீட்டிலேயே திருமணம் என்றும் பேசி முடித்தார்கள்.
திருமணம் முடியும் வரை ஊருக்குள் வரக்கூடாது என்று எச்சரிக்கை செய்யப்பட்டு, இராமசாமியும், அவன் பெற்றோர்களும் ஊரை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்.
ஒரு வாரத்தில் இராமசாமி இறந்தான் என்ற செய்தி வந்தது. ‘என்றாவது அவனைப் பார்ப்போம்,’ என்ற எண்ணத்தில் இருந்த சீதா மயங்கி விழுந்தாள். தீவிர சிகிச்சைக்குப் பின், பெற்றோர் வற்புறுத்தலாலும், மிரட்டலாலும் வேறு வழி தெரியாமல், திருமணத்திற்கு ஒப்புக் கொண்டாள்.
திருமணத்திற்கு முன்பு, அவர்கள் வழக்கப்படி, குலதெய்வத்திற்குப் பொங்கலிட, அவளொத்த பெண்களுடன், கோயிலுக்கு அனுப்பப் பட்டாள்.
“இந்தக் கல்யாணத்துக்கு இது வேறயா?”என்று சலித்தபடி, எல்லாம் முடிந்த பிறகு, எல்லோரையும் சாப்பிடச் சொல்லிவிட்டு, தனிமையில் போய் அமர்ந்தாள் சீதா.
“அண்ணி, அண்ணி,” மெதுவான குரலில் யாரோ கூப்பிடுவதைக் கேட்டு, நிமிர்ந்தாள்.
எதிரே இராமசாமி நின்றிருந்தான். ஆனால் எதோ மாறுதலும் தெரிந்தது. அமைதியான இராமுவின் முகம், குறுகுறுப்பாக இருக்கிறது. நிறமும் கூட மாறியிருக்கிறது. அத்தனை அடிகளை வாங்கிக் கொண்டு, மயங்கி விழுந்தவன் ஒருவாரத்தில் இப்படி மாறியிருக்க முடியுமா? திகைத்துப் போய் பார்த்துக் கொண்டிருந்தவளை, “அண்ணி, அப்புறம் பாக்கலாம். நான் சொல்றதை முதல்ல கேளுங்க. அப்புறம் திகைக்கலாம்,” என்றான் எதிரில் இருந்தவன்.
“அண்ணியா?”
“அண்ணன் பொண்டாட்டி அண்ணி தானே, இந்த ஊர்லயும்?” என்று சிரித்தவன், “அண்ணி, நான் ராமு இல்ல, இளங்கோ. அவனோட சித்தப்பா பையன். மும்பைல இருக்கேன். எதேச்சையா இவங்களைப் பாக்க போன வாரம் வந்தேன்.”
குத்துயிரா கிடந்த ராமுவை சென்னைக்குக் கூட்டிட்டுப் போய், என் நண்பனோட மருத்துவமனையில் சேத்துருக்கேன். பெரியப்பாவும், பெரியம்மாவும் அங்க தான் இருக்காங்க. இராமு இப்போ உடல்நிலை தேறிட்டு வரான். இன்னும் பத்து நாளுக்குள்ள ஓ. கே. ஆயிடுவான்.
“சென்னைக்கு வந்திருந்த இந்த ஊர்க்காரன் ஒருத்தன் கிட்ட, இராமசாமி இறந்துட்டதா, சொல்லி அனுப்பினோம்,” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, “எதுக்கு?” என்றாள் கோபத்துடன்.
“நானும் உண்மைதான்னு நினைச்சு இன்னிக்கு ராத்திரி தற்கொலை பண்ணிக்கிறதுன்னு முடிவோட இருந்தேன்.”
“அப்படி எதாவது முட்டாள் தனமா பண்ணிடப் போறீங்கன்னு தான் நான் வந்தேன். முதல்ல நான் சொல்றதை கவனமா கேட்டுட்டு வாங்க. அப்புறம் எதேனும் கேள்வி இருந்தா கேக்கலாம்,” என்றவன் தொடர்ந்தான்.
“உங்களை எப்படியும் கூட்டிட்டு போற முடிவோட தான் வந்திருக்கேன். ஆனா, இப்ப முடியாது. இராமுவுக்குக் கொஞ்சம் உடல் சரியாகணும். அதனால ஒரு சின்ன டிராமா போடலாம். சரியா? இந்த ஊர் மக்களை, அவங்க வழியிலேயே போய் ஏமாத்திட்டு தான் போப் போறோம். உங்களுக்கு ஓ. கே தானே?”
“டபுள் ஓ. கே. ஆனா, எப்படி? உங்க அண்ணன் சரியாகறதுக்குள்ள அந்த முட்டாள் எங்கழுத்துல தாலி கட்டிடுவானே?” ஆர்வத்துடன் கேள்வி கேட்டவள், ‘அது நடக்குமா?’ என்ற சந்தேகத்தால் சோகமானாள்.
“அதுக்கு அவனுக்குக் கையிருந்தா தானே?”
“நல்லாத்தானே இருக்கான்?”
சிரித்த இளங்கோ தன் திட்டத்தைச் சொல்லி விட்டு, தோழிகள் வருவதற்குள் மறைந்து கொண்டான்.
திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, நண்பர்களுடன் வெளியே போன மாடசாமி, திரும்பி வரும்போது வலது கையைத் தூக்க முடியாமல் அலறிக் கொண்டு வந்து சேர்ந்தான். வைத்தியரையும், ஜோதிடரையும் ஒரு சேர வரவழைத்த பெரியசாமி வைத்தியரிடம் திருமணத்திற்கு முன்பு மாடசாமியின் கையை சரி செய்ய முடியுமா என்றும், ஜோதிடரிடம் திருமணத் தேதியைத் தள்ளி வைக்க முடியுமா என்றும் கேட்டார். இருவரும் முடியாது என்று பதில் சொன்னார்கள்.
ஜோதிடர் மட்டும் எக்காரணம் கொண்டும் தள்ளி வைக்க வேண்டாம் என்றும், அன்று விட்டால் என்றுமே திருமணம் ஆகாதென்றும், வேண்டுமானால், மாடசாமி தொட்டுக் கொடுக்க, அவன் சகோதரி தாலி கட்டலாம் என்றும் சொன்னார்.
வைத்தியர் எண்ணெய் தடவி விட்டு, ‘இரண்டு நாள்கள் கையை அசைக்க வேண்டாம்,’ என்று சொல்லிச் சென்றார். இருவரும் போனபிறகு பெரியசாமி அவன் முதுகில் தர்ம அடி வைத்தார். ஆனால் அவர் எவ்வளவு அடித்த போதும், யாரோ இருட்டில், “கல்யாணமா பண்ணிக்கப் போறே?” என்று கேட்டு கையை முறுக்கி, நகர்த்த முடியாமல் செய்து விட்டுப் போனதை மட்டும் மாடசாமி அவரிடம் சொல்லவில்லை.
திருமணத்திற்கு முதல் நாள், கையில் பால் சொம்புடன் மாடசாமி இருந்த அறைக்குள் சீதா நுழைந்தாள். அவள் சிரிப்புடன் நுழைவதைப் பார்த்த மாடசாமி, குழப்பத்துடன் அவளைப் பார்த்தான். “இந்த நேரத்தில் இவள் எதுக்கு, இங்கு வருகிறாள்?” தன்னைப் பார்க்காமல், தன்னருகில் பார்த்து சிரித்தது, பயத்தைத் தந்தது.
பால் டம்ளரை, “குடிங்க,” என்று நீட்டினாள். கை நீட்ட முற்பட்ட மாடசாமி , “ஐயோ” என்று அலறிக் கொண்டே கையைப் பிடித்துக் கொண்டான். பக்கத்தில் யாரோ அமர்வது போல தோன்ற திரும்பினான். “உன் முகரக் கட்டைக்கு பால் ஒரு கேடு,” என்று சொல்லிக் கொண்டே முகத்தில் ராமு (இளங்கோ) ஒரு குத்து விட, அதிர்ச்சியுடன் பார்த்த மாடசாமி, “நீ, நீ, நீ ராமு தானே! நீ செத்துப் போய்ட்டதா சொன்னாங்களே?” என்றான், திகிலுடன்.
“ஆமாம்! நான் ராமு தான்! செத்துப் போய்ட்டேன் தான். அதுக்கென்ன இப்போ? உசுரோட இருக்கும் போது, கட்டி வெச்சு அடிச்சீங்கல்ல! எங்க, இப்போ பஞ்சாயத்தைக் கூட்டி அடி பாக்கலாம். பேயடி கேள்விப் பட்டிருக்கயா? ‘அன்னிக்கு கையை ஒடச்ச போதே, கல்யாணம் வேணான்னு சொல்லு,’ன்னு சொன்னேன். கேக்கல நீ. இதோ பேய் எப்படி அடிக்கும்னு தெரிஞ்சு கிட்டு, எல்லோருக்கும் சொல்லு,”என்று கூறிக் கொண்டே ராமுவாக வந்த இளங்கோ சரமாரியாக மாடசாமியை அடிக்க, அவன் “ஐயோ! பேய்! பேய்! யாராவது காப்பாத்துங்க,”ன்னு கதறிக் கொண்டே மயங்கி விழுந்தான்.
“அண்ணி, இனிமே உங்க பார்ட். நீங்க நடிக்கற நடிப்புல, யாருமே உங்க கல்யாணத்தைப் பத்தி பேசக் கூடாது. அடுத்த அமாவாசை அன்னிக்கு நான் காரோட வருவேன். ஒன்பது மணிக்கு மேல, எப்படியாவது பஸ்ஸ்டாண்டுக்கு வந்துடுங்க. இப்போ, “பேய், பேய்”னு கத்திக்கிட்டே போய் கதவைத் திறங்க. எல்லோரும் உள்ள நுழைஞ்சதும், பின்பக்கமா போய்ட்டிருக்கற என்னைக் காட்டிட்டு, நீங்க மயங்கி விழுந்துடணும்”
“நாளைக்கு மாடசாமி எழுந்தப்புறம் தான், நீங்க எழுந்திருக்கணும். சரியா? ரெடி, ஸ்டார்ட்,” என்று சொல்லிக் கொண்டே கதவருகில் போய் நின்று கொண்டான் இளங்கோ.
“பேய், பேய்,” என்று கத்திக் கொண்டே கதவைத் திறந்த சீதா, எல்லோரும், “எங்கே? எங்கே?” என்று கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்ததும், “இராமு” என்று அலறிக் கொண்டே, மயங்கி விழுந்தாள்.
பக்கத்தூர் டாக்டர் வரவழைக்கப்பட்டு மாடசாமிக்கு வைத்தியம் பார்த்தார். “யாரு இப்படிப் போட்டு அடிச்சிருக்காங்க? பேயடியா இல்ல இருக்கு? போலீஸ் கம்ப்ளெயின்ட் குடுத்திருக்கீங்களா?” என்று கேட்டார்.
டாக்டர் கேட்டதும் பெரியசாமி திகைத்தார். “அது.. வந்து.. டாக்டர்.. எம் பையனை அடிக்க யாருக்கு தைரியம் இருக்கு? பேய் அடிச்சிருக்கும் போல?“
“பேயா?” டாக்டர் சிரித்தார். “பேய் அடிச்சு, எலும்பு முறிஞ்சதை இப்போ தான் கேள்விப்படறேன். முரட்டுப் பேய் போலிருக்கு. சரி, இப்போ ஓய்வா இருக்கணும். கையை அசைக்காம படுத்திருக்கணும்,” என்று கூறி விட்டு மருந்துகள் எழுதிக் குடுத்தார்.
படுத்திருந்த மாடசாமி, “அப்பா! கல்யாணம் வேணாம். அந்தப் பேய் என்னைக் கொன்னுடும்,” என்று அலறினான்.
“வாயை மூடிட்டுப் படு,” கடு கடுத்த பெரியசாமியை லட்சியம் செய்யாமல் மாடசாமி கதறினான். “நிஜமாப்பா. இராமு பேயா வந்து அடிச்சான்? கல்யாணம் பண்ணினா, நான் உயிரோடு இருக்க மாட்டேன்னு சொல்லியிருக்கான்.”
அந்தச் செய்தி மறுநாளே கிராமமெங்கும் பரவியது.
“கல்யாணம் பண்ணினா ஆபத்தாம்!” – என்று ஊரார் பேசிக் கொண்டார்கள். பயந்து போன பெரியசாமி, இறுதியில் திருமணத்தை நிறுத்தி விட்டார்.
அடுத்த அமாவாசையன்று இரவு, சீதா மெதுவாக வீட்டை விட்டு வெளியே வந்தாள். பேருந்து நிலையத்தில் நின்றிருந்த கார் அருகில் இளங்கோவும், உடல்நிலை சற்று சரியாகியிருந்த இராமுவும் நின்றிருந்தார்கள்.
சீதாவைப் பார்த்து இராமு சிரித்தான். “வா சீதா “
கண்ணீருடன் அவன் அருகில் சென்றாள் சீதா. கார் இருட்டைத் தாண்டி வெளிச்சத்தை நோக்கி நகர்ந்தது

[14:08, 11/11/2026] Gowrishankar: சுபாஷிணி ரமணன்
திருமதி சுபாஷிணி ரமணன் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தெடாவூர் கிராமத்தில் பிறந்தவர். தமிழ் இலக்கியத்தை முதுகலைப் பாடமாகப் படித்திருக்கிறார்.
முகநூலில் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், குறுநாவல்கள் என்று பயணத்தைத் தொடங்கியவர். இன்று வரை சிறுகதைத் தொகுப்புகள் இரண்டு, திரைப்படங்களைப் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு நூல்கள் இரண்டு, கவிதைத் தொகுப்பு ஒன்று, குறுநாவல்கள் ஐந்து என்று தன்னுடைய படைப்புகளை மின் நூல்களாகவும், அச்சு நூல்களாகவும் வெளியிட்டிருக்கிறார்.
இரண்டு சிறுகதைகளும், இவர் நூலைப் பற்றிய விமர்சனம் ஒன்றும் பாரம்பரியமான கல்கியில் வந்ததைப் பெருமையாகக் கருதுகிறார். ‘லேடீஸ் ஸ்பெஷல்’ மற்றும் ‘சங்கப்பலகை’ முகநூல் குழுமமும் சேர்ந்து நடத்திய குறுநாவல் போட்டியில் இவருடைய குறுநாவல் பரிசு பெற்றிருக்கிறது. வானதியில் இவருடைய மூன்று சரித்திர நாவல்கள் வெளியாகி இருக்கின்றன.
WriterSCafe – எழுத்தாளர் சங்கமம் குழுவினர் சார்பாக வெளியிடப்பட்ட “பேரன்பின் சுகந்தம்,” என்ற முதலாவது சிறுகதை தொகுப்பில் இவர் எழுதிய “விளையாட்டுப்பிள்ளை,” என்ற சிறுகதை இடம் பெற்றுள்ளது.
