
அத்தியாயம் 15
மூன்றே மாதங்களுக்குள் அவர்கள் இருவரும் இவ்வளவு நெருக்கமாகிவிடுவார்கள் என்று அப்போது யாராவது நினைத்துப் பார்த்திருப்பார்களா?
முதல் மாலையிலேயே அவள் மீது தனக்குக் காதல் ஏற்பட்டுவிட்டதாக அவன் பின்னர் அவளிடம் கூறியிருந்தான். அதுவரை தன் வாழ்நாளில் பார்த்திராத பேரழகியாக அவள் அவனுக்குத் தோன்றினாள். அவள் அணிந்திருந்த ஆடையை அவன் நினைவில் வைத்திருந்தான். அது அவளுடைய திருமண ஆடை. பள்ளத்தாக்கின் லில்லி மலரைப் போல அவள் காட்சியளித்ததாக அவன் கூறினான்.
அவன் தன்னிடம் காதல் கொண்டிருக்கிறான் என்பதை அவன் வெளிப்படுத்துவதற்கு முன்பே அவள் உணர்ந்திருந்தாள். அதனால், சற்றே அச்சமடைந்து அவனைத் தன்னிடமிருந்து விலகியே இருக்கச் செய்தாள். அவன் உணர்ச்சிவசப்படக்கூடியவனாக இருந்தான். அவனைக் கையாள்வது அவளுக்குச் சிரமமாக இருந்தது.
அவன் தன்னைக் கட்டியணைத்துக் கொள்வதை நினைத்தாலே தன் இதயம் மிக வேகமாகத் துடிப்பதால், அவனை முத்தமிட அனுமதிக்க அவள் அஞ்சினாள். அதற்கு முன்பு அவள் ஒருபோதும் காதலில் விழுந்ததில்லை. அது ஓர் அற்புதமான அனுபவமாக இருந்தது.
இப்போது காதல் என்றால் என்னவென்பதை அவள் அறிந்துகொண்டுவிட்டதால், வால்டர் தன் மீது கொண்டிருந்த காதலைப் பற்றியும் அவளுக்குத் திடீரென்று ஒருவித அனுதாபம் ஏற்பட்டது. அவனிடம் விளையாட்டாகக் கேலி செய்தாள். அதனை அவன் ரசிப்பதையும் கவனித்தாள்.
முன்பெல்லாம் அவனைப் பார்த்துச் சற்றே அஞ்சியிருந்திருக்கலாம். ஆனால், இப்போது அவளிடம் அதிகத் தன்னம்பிக்கை ஏற்பட்டிருந்தது. அவனைக் கேலி செய்து பேசினாள். அவளுடைய கேலிப் பேச்சை முதலில் அவன் எதிர்கொள்ளும் விதத்தையும், அதற்குப் பதிலளிக்கும்போது அவன் முகத்தில் மெதுவாகத் தோன்றும் புன்னகையையும் பார்ப்பது அவளுக்கு வேடிக்கையாக இருந்தது. அவன் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்தான்.
இன்னும் சில நாட்களில் அவன் முற்றிலும் இயல்பான மனிதனாக மாறிவிடுவான் என்று அவள் நினைத்தாள்.
காதல் உணர்ச்சியின் ஆழத்தைப் பற்றி இப்போது ஓரளவு தெரிந்துகொண்டிருந்ததால், வீணை வாசிப்பவன் அதன் நரம்புகளின் மீது விரல்களை மென்மையாக ஓடவிடுவதைப் போல, அவனுடைய காதல் உணர்வுகளுடன் மென்மையாக விளையாடுவது அவளுக்குப் பொழுதுபோக்காக இருந்தது. அவனை எவ்வளவு குழப்பத்திலும் தடுமாற்றத்திலும் ஆழ்த்துகிறோம் என்பதைப் பார்த்து அவள் சிரித்தாள்.
சார்லி அவளுடைய காதலனாக மாறியபோது, அவளுக்கும் வால்டருக்கும் இடையிலான உறவு மிக விசித்திரமான வேடிக்கையாகத் தோன்றியது. அவன் மிகவும் தீவிரமாகவும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக்கொண்டும் இருப்பதைப் பார்த்து, அவளால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.
அவள் அளவற்ற மகிழ்ச்சியில் இருந்ததால், அவனிடம் இரக்கமற்ற முறையில் நடந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணமே அவளுக்கு ஏற்படவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, வால்டர் இல்லையென்றால் அவளுக்குச் சார்லியின் அறிமுகமே கிடைத்திருக்காது.
சார்லியின் காதலுக்கு இணங்கித் தன்னை ஒப்படைக்க அவள் விரும்பவில்லை என்பதற்காக அவள் தயங்கவில்லை. அவளுடைய காதல் உணர்ச்சியும் அவனுடைய உணர்ச்சிக்கு இணையாகவே இருந்தது. ஆனால், அவளுடைய வளர்ப்பு முறையும், இதுவரை அவள் வாழ்ந்து வந்த வாழ்க்கையின் கட்டுப்பாடுகளும் அவளை அச்சுறுத்தின. அதனால்தான் இறுதி முடிவை எடுப்பதற்கு முன்பு அவள் நீண்ட நேரம் தயங்கினாள்.
பின்னர் நடந்ததை நினைத்து அவளே ஆச்சரியப்பட்டாள். உண்மையில், அந்த இறுதிக் கட்டம் தற்செயலாகவே நிகழ்ந்தது. அந்த வாய்ப்பு தங்களை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் வரை, அது தங்களுக்கு முன்னால் இருப்பதை அவர்கள் இருவருமே உணர்ந்திருக்கவில்லை.
ஆனால், அந்த அனுபவத்திற்குப் பிறகு, முன்பு இருந்ததைவிடத் தான் எந்த விதத்திலும் மாறிவிடவில்லை என்பதை அவள் உணர்ந்தாள்.
அந்த அனுபவம் தன்னுள் ஏதோ ஓர் அதிசயமான மாற்றத்தை ஏற்படுத்திவிடும் என்றும், அதன் பிறகு தான் வேறொரு பெண்ணாக உணர்வேன் என்றும் அவள் எதிர்பார்த்திருந்தாள். ஆனால், கண்ணாடியில் தன்னைப் பார்த்துக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தபோது, முந்தைய நாளில் பார்த்த அதே பெண்ணாகத் தான் இருப்பதைக் கண்டு அவள் திகைத்துப்போனாள்.
“என் மீது உனக்குக் கோபமா?” என்று அவன் அவளிடம் கேட்டான்.
“நான் உன்னை அளவுகடந்து நேசிக்கிறேன்” என்று அவள் மெதுவாகக் கிசுகிசுத்தாள்.
“இவ்வளவு காலத்தை வீணடித்தது மிகவும் முட்டாள்தனமான செயல் என்று உனக்குத் தோன்றவில்லையா?”
“நான் ஒரு மகா முட்டாள்!”
