
“ஆறே நாள்தான் இருக்கு தீபாவளிக்கு. 8-ஆம் தேதி இந்த நேரம் ஒரே பட்டாசுச் சத்தமா இருக்கும். அம்மா நிறைய பட்சணம் பண்ணுவா. அப்பா எனக்குப் புது நிக்கர், சட்டை வாங்கிக் கொடுப்பார்.”
கலர் கலரான கனவுகளைக் கண்டான் நாகு.
பத்மப்பிரியன் என்கிற ஆர்ட்டிஸ்ட் ரமணன் கவலையில் இருந்தான். வரவரத் தொழில் மந்தமாகிவிட்டது. கம்ப்யூட்டரே வேண்டிய படத்தைப் போட்டுத் தருகிறது. அதனால் ரமணன் போன்ற சித்திரங்கள் வரைவதையே தொழிலாக வைத்திருக்கும் ஓவியர்களுக்குச் சிரம காலம்.
தீபாவளி என்றால் ஒரு காலத்தில் இரவும் பகலுமாகச் சித்திரங்கள் தீட்டுவான். வீட்டு வாசலில் சித்திரம் வாங்கிப் போகக் காத்திருப்பார்கள். இப்போது ஒரு நாளைக்கு இரண்டு மணி நேர வேலைகூட இல்லை.
மனைவி பத்மாவுக்குப் புடவை, நாகு செல்லத்துக்கு நிக்கர், சட்டை, கொஞ்சம் பட்டாசு வாங்கப் பணம் வந்தால் போதும். ‘சுடர்’ பத்திரிகைக்கு அட்டைப்படம் அனுப்பியிருக்கிறான். ஆசிரியர் பணம் அனுப்பினால் தேவலை. இன்னும் ஆறு நாள்கூட இல்லை தீபாவளிக்கு.
யோசித்துக்கொண்டே சித்திரம் வரையும் இடத்துக்குப் போனான். அங்கே ஏற்கெனவே தன் கேன்வாஸ் போர்டில் இருந்த சித்திரத்தைப் பார்த்துச் சிரிப்பும் துக்கமும் சேர்ந்து வந்தன.
கீழே ஒரு துண்டுச் சீட்டில்:
“இது அப்பா தீபாவளிக்கு நாகுவுக்கு டிரஸ், பட்டாசு வாங்கப் புறப்படறார்.”
— நாகு.
