
பிரசாத் ஒரு ஓவியன். அதிகத் திறமை இருந்தாலும் அதிர்ஷ்டம் அவனுக்கு இல்லை. குடும்பக் கவலைகளைத் தீர்க்க ஒரு வழி கிடைக்குமா என எண்ணிக்கொண்டே சாலையில் நடந்து சென்றான். வழியில் இருந்த சிறிய பிள்ளையார் கோயிலைப் பார்த்து, வாசலில் இருந்தபடியே சாமி கும்பிட்டான்.
கோயிலுக்கு எதிரே இருந்த ஒரு மண்டபத்தில் சிலர் போவதும் வருவதுமாக இருந்தனர். இவனும் அங்கு சென்று பார்த்தான். அங்கே ஓர் ஓவியப் போட்டி தொடங்க இருந்தது. அவனுக்குப் பாதி உயிர் வந்தது. பையில் கொஞ்சம் வண்ணங்கள் மட்டுமே இருந்தன. அவனும் போட்டியில் கலந்துகொண்டான்.
எல்லோரும் ஒரு படத்தை எதிரில் வைத்துக்கொண்டு வரையத் தொடங்கினார்கள். பிரசாத்திடம் வரைவதற்கு எந்தப் படமும் இல்லை. அவன் ஒரு நிமிடம் கண்களை மூடினான். அவனுக்குத் தன்னுடைய உருவமே தோன்றியது. உடனே தன்னுடைய உருவத்தையே வரைந்தான். கண்களை மட்டும் கடைசியாக வரைவது அவனுடைய வழக்கம்.
அப்போது திடீரென்று மின்சாரம் தடைப்பட்டது. ஒரே சலசலப்பு. எல்லோருக்கும் குழப்பம். இன்னும் பத்து நிமிடங்களில் படத்தை வரைந்து முடிக்க வேண்டும்.
பிரசாத் சட்டென்று எதிரில் இருந்த பிள்ளையார் கோயிலுக்குச் சென்று, அங்கிருந்த அகல் விளக்கை எடுத்துக்கொண்டு வந்தான். தன் கையில் அந்த விளக்கை வைத்துக்கொண்டு கண்களை வரைந்தான். கண்களில் ஒளி வந்தது. ஓவியத்திற்கு உயிர் வந்தது. அவனுக்குப் பரிசு கிடைத்தது.
