
அந்த ஓவியத்தை ஊர்ப் பொதுவிடத்தில் வைத்திருந்தார்கள். எல்லோரும் வந்து மௌனமாகப் பார்த்து, கண்ணீர் வடித்துச் சென்றார்கள்.
மணல் திருட்டு, கனிமத் திருட்டு என்று அந்த ஊர் அரசியல்வாதி செய்யும் அநியாயங்களை எல்லாம் தட்டிக் கேட்டுக்கொண்டிருந்தவன் ருத்ர பிரகாஷ். எதிர்த்துக் குரல் கொடுத்ததோடு, மக்களிடமும் பேசி எழுச்சியூட்டிக் கொண்டிருந்தான்.
அதிகார வர்க்கத்தின் ஊழல் வெளிச்சத்துக்கு வந்துகொண்டிருந்தது.
தொலைக்காட்சி விவாதங்களில் பேசியும், பத்திரிகைகளிலும் செய்தித்தாள்களிலும் எழுதியும் விஷயத்தை எல்லோருக்கும் தெரியப்படுத்தினான். எல்லோரும் இதைப் பற்றிப் பேசத் தொடங்கினார்கள்.
அதிகாரத் தரப்பு அவனை மிரட்டிப் பணிய வைக்கப் பார்த்துத் தோல்வியடைந்தது.
சுண்டெலி என்று நினைத்தது சுனாமியாக மாறிக்கொண்டிருக்கிறதே! ஆரம்பத்திலேயே கிள்ளி எறிந்துவிடுவதுதான் நல்லது என்று நினைத்த மந்திரியின் ஆட்கள், அவனைப் போட்டுத் தள்ளிவிட்டார்கள். ஒன்றும் செய்ய இயலாத மக்கள் துக்கத்தில் ஆழ்ந்தனர்.
அறியாமையில் இருந்த மக்களுக்கு அறிவு விளக்கேற்ற முனைந்த அவனை ஒருவன் ஓவியமாகத் தீட்டி, தெருவுக்குத் தெரு வைத்தான்.
இதைப் பார்க்கும் பொதுமக்களில் ஒருவனாவது இவனைப்போல உருவாக மாட்டானா என்று மற்றவர்களிடம் எழுச்சியை எதிர்பார்த்தார்களே தவிர, தாங்களே வெகுண்டெழ அவர்களிடம் துணிவில்லை.
ஓவியத்தில் ருத்ர பிரகாஷின் கண்களில் சோகம் தெரிந்தது.
