ஜாதகக் கதைகள்/மன்மதநாத் குப்தா

  1. நாட்டின் நல்லறம்

முற்காலத்தில் இந்திரப்பிரஸ்தம் (டில்லி) கௌரவர்களின் நாட்டுக்குத் தலைநகரமாய் இருந்தது. அந்நாட்டை தனஞ்சயன் என்னும் பெயருடைய புகழ்பெற்ற ஓர் அரசர் ஆண்டு வந்தார். போதிசத்துவர் அந்த அரசருக்கு மைந்தர். உரிய வயதில் தட்சசீலம் என்னும் இடத்திற்குச் சென்று கல்வி கற்றார். படிப்பு முடிந்து அவர் திரும்பிவந்ததும் அரசர் அவருக்கு இளவரசுப் பட்டம் கட்டினார்.
அரசருக்கு வயது முதிர்ந்து, அவர் காலமானதும் போதிசத்துவர் அரியணை ஏறி அறநெறிப்படி அரசு புரிந்துவந்தாரானார். நகரத்தின் நடுவிலும், நகரத்தின் நான்கு நுழைவாயில்களிலும், அரண்மனைக்கு அருகிலும் ஆறு அறச்சாலைகளை அவர் நிறுவினார். அன்றாடம் அந்த அறச்சாலைகளில் தானம் பெறத் தகுதியுள்ளவர்களுக்கெல்லாம் ஆறு லட்ச ரூபாய் மதிப்புள்ள செல்வத்தைக் கொண்டு தான தருமம் செய்யப்பட்டு வந்தது. மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர். அரசின் நீதிமுறை, நெறிமுறை, கொடைச்சிறப்பு ஆகியவை துணைக் கண்டம் முழுவதும் பரவின.
அந்தக் காலத்தில் கலிங்க நாட்டில் தந்தபுரம் என்னும் நகரத்தில் இருந்து கலிங்க மன்னர் ஆண்டு வந்தார். அந்நாட்டில் எதிர்பாராவிதமாய் மழையே பெய்யாமல் பஞ்சம் தலைவிரித்தாடியது. பட்டினியால் மக்கள் பலர் மாளத் தொடங்கினர். பசி பொறுக்காத மக்கள் உண்ணக்கூடாத பொருள்களை உண்டு, அருந்தக்கூடாத நீரை அருந்தியதால் நோய்கள் பரவலாயின. வீட்டை விட்டு விட்டு குழந்தைகளையும் தூக்கிக்கொண்டு மக்கள் அங்குமிங்கும் அலைய ஆரம்பித்தார்கள். சிலர் தந்தபுரம் அடைந்து அரசரின் அரண்மனை வாயிலில் ஆரவாரம் செய்தனர்.
அவர்கள் போட்ட கூச்சலைக் கேட்டு அரசர் ஜன்னலுக்கருகே வந்து பார்த்தார். பிறகு அமைச்சர்களை அழைத்து, அவர்கள் ஏன் கூச்சல் போடுகிறார்கள் என்று கேட்டார்.
“அரசே! இந்த முறை மழை பெய்யாததால் பயிர்த் தொழில் நடக்கவில்லை. வயல்கள் எல்லாம் வறண்டு கிடக்கின்றன. மக்கள் கண்டதைக் தின்று நோயுற்றிருக்கிறார்கள். வீடுவாசல்களை விட்டு விட்டு இங்குமங்கும் சுற்றித் திரிகிறார்கள்” என்று அமைச்சர்கள் விடையளித்தார்கள்.
“இவர்களின் இன்னல் நீங்குவதற்கு வழி என்ன?” என்று கேட்டார் அரசர்.
“மழை பெய்தால்தான் மக்களுக்கு நன்மை” என்றனர் அமைச்சர்கள்.
மன்னர் சற்று யோசித்துவிட்டு, “இந்த மாதிரி மழையில்லாமல் போயிருப்பது இதுதான் முதல் தடவை அல்லவே, இதற்கு முன்பும் மற்ற மன்னர்களின் ஆட்சிக் காலத்திலும் இப்படிப்பட்ட நிலைமை எப்போதாவது ஏற்பட்டிருக்குமே; அப்போது அந்த அரசர்கள் என்ன செய்தார்கள்?” என்று கேட்டார் அமைச்சர்களை.
அதற்கு அமைச்சர்கள், “அரசே! அப்படிப்பட்ட நிலைமை வந்தபோதெல்லாம் அந்த அரசர்கள் முதல் காரியமாக தம்மிடம் இருந்த பொருட்களை எல்லாம் மக்களுக்கு வாரி வழங்கினார்கள். பிறகு விரதம் இருந்து, தமது படுக்கையறையில் ஒருவார காலம் தருப்பைப்புல் விரிப்பின்மீது படுத்துக் கொண்டார்கள். அப்படி அவர்கள் செய்ததும் தன்னாலேயே மழைபெய்து விட்டது” என்று கூறினார்கள்.
“இது என்ன பெரிய காரியம்? நானும் அப்படியே செய்துவிடுகிறேன்” என்றார் மன்னர்.
சொன்னபடியே செயலிலும் காட்டினார். ஆனால் எல்லாவற்றையும் அவர் செய்த பிறகும் மழை வருவதற்கான அறிகுறியே தோன்றவில்லை. வானத்தில் ஒரு மேகங்கூடத் தலை காட்டவில்லை. அப்போது அரசர் அமைச்சர்களை அழைத்து, “நான் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்தாயிற்று ஆயினும் மழையே வரக்காணோம். இனி நான் என்ன செய்ய வேண்டும்?” என்றார்.


“அரசே! இந்திரப்பிரஸ்தம் என்று ஒரு நகரம் உள்ளது. அங்கே தனஞ்சயன் என்னும் அரசர் ஆண்டு வந்தார். இப்போது அவர் மைந்தர் அங்கே அரசாள இருக்கிறார். அவரிடம் ‘அஞ்சன வசப்’ என்னும் பெயரில் மங்ககரமான யானை ஒன்று உள்ளது. அந்த யானையை நீங்கள் இங்கே தருவிக்க முடியும் என்றால், நம் நாட்டிலும் அதனால் நன்மையுண்டாகும், நல்ல மழை பொழியும்” என்று அமைச்சர்கள் தெரிவித்தார்கள். “சரி, யானை இங்கே வருவதால் மழை பொழியும் என்பதை நானும் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் அதை அனுப்பிவைக்க அந்த அரசர் தயாராய் இருப்பாரா? அவரிடமும் படைபலம் இருக்கும், சிறந்த வீரர்கள் இருப்பார்கள். அவரே ஒரு மாவீரர் என்னும் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆகவே…” என்று இழுத்தார் அரசர்.
“நீங்கள் அவரோடு போரிட்டுத்தான் யானையைக் கைப்பற்ற வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லையே. போர் புரிவதால் பயனொன்றுமில்லை. அவர் ஓர் ஒப்பற்ற கொடை வள்ளல் என்பதே எங்கும் பேச்சாக இருக்கிறது. அவரிடம் யார் போய் எதைக் கேட்டாலும் மறுக்காமல் உடனே அவர் கொடுத்து விடுகிறார். யாராவது உங்கள் கண்களைக் கொடுங்கள் என்றால் கூட உடனே தமது கண்களை வழங்கிட அவர் தயங்குவதில்லையாம். ராஜ்யத்தைக் கேட்டாலும் கொடுத்து விடுவாராம் அப்படிப்பட்டவருக்கு இந்த யானை ஓர் அற்பமான விஷயம். அதுவும் இங்கே பஞ்சம் பரவி நூற்றுக்கணக்கானோர் அல்லல் படுகிறார்கள் என்பதை அவர் அறிந்தால் அந்த யானையை நிச்சயமாய் அவர் தானந்தந்து விடுவார்” என்று அமைச்சர்கள் சொன்னார்கள். அரசர், “சரி, தானம் கேட்க யார் போவது? நானே நேரில் சென்று கேட்பதா?” என்றார். “வேண்டாம் அரசே! நீங்களே போவது நல்லதல்ல. இந்த மாதிரி காரியத்துக்கெல்லாம் அந்தணர்களே பொருத்தமானவர்கள். அவர்களேயே அனுப்புங்கள்” என்றார்கள் அமைச்சர்கள்.
அரசர் உடனே சில அந்தணர்களை வரைவழைத்து, அவர்களில் எட்டுப் பேரைத் தேர்ந்தெடுத்து நிலைமையை நன்கு விளக்கி, “நாட்டின் நன்மையை உத்தேசித்து நீங்கள் போய் கையோடு யானையைப் பெற்று வாருங்கள்” என்று கூறினார்.
அந்தணர்கள் அரசரின் ஆணையை ஏற்று வழிச் செலவுக்குத் தேவையானவைகளை எடுத்துக் கொண்டு வழிப்போக்கர்கள் போல வேடம் தரித்து அங்கிருந்து புறப்பட்டு விரைவாய்ச் சென்றார்கள். கடைசியில் கௌரவர்களின் நாட்டை அடைந்து அரசர் எப்போதெல்லாம் அறச்சாலைக்கு வருகை புரிகிறார் என்கிற விவரத்தைக் கேட்டறிந்தார்கள். பதினைந்து நாட்களில் அரசர் மூன்று முறை. அதாவது அஷ்டமி, சதுர்த்தசி, பௌர்ணமி ஆகிய மூன்று தினங்கள் மட்டும் அறச்சாலைக்கு வருகிறார் என்பது தெரியவந்தது.
நல்ல வேளையாக மறுநாளே பௌர்ணமி. அரசர் அறச்சாலைக்கு வரும் நாள். கலிங்க நாட்டு அந்தணர்கள் தெற்கு வாயிலை அடைந்து அரசரின் வருகையை என்று எதிர்நோக்கியிருந்தார்கள். அரசர் வந்தவுடன் “வாழ்க! வெல்க” வாழ்த்தொலிகளை எழுப்பினார்கள். அரசரும், தாம் அமர்ந்துவந்த யானையை நிறுத்தச் செய்து, “உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார்.
“அரசே! எங்களுக்கு உங்கள் அஞ்சன யானைதான் வேண்டும். நாங்கள் அதைக் கொண்டுபோய் கலிங்க மன்னரிடம் கொடுத்துவிட்டு. அவரிடமிருந்து ஏராளமான பொருள்களைப் பரிசாய்ப் பெற்று மகிழ்வோம். உங்களையும் உளமாரப் போற்றுவோம்” என்று அந்தணர்கள் சொன்னார்கள். அதைக் கேட்ட அரசர். யானைமீது அமர்ந்தவாறே அதை உடனே தானம் செய்துவிட்டார். யானைமீது •பலவித அணிகலன்கள் இருந்தன. அரசர் கீழே இறங்கி. “யானையின் எந்த அங்கத்திலாவது அணிகலன் போட விட்டுப் போயிருந்தால் அதையும் அலங்கரித்துத் தருகிறேன்” என்றார்.
ஆனால் யானையோ ஓரிடம் பாக்கியில்லாமல் முற்றிலும் அணி செய்யப்பட்டதாகவே இருந்தது. அந்தணர்கள் யானையை தானமாய்ப் பெற்றுக்கொண்டு அரசரை வாயார வாழ்த்திவிட்டு கலிங்கநாட்டை நோக்கிப் பயணமானார்கள்.
யானையைத் தங்கள் அரசரிடம் ஒப்படைத்தார்கள். அரசர் மிகவும் ஆனந்தம் அடைந்து அவர்களுக்கு நிறைய வெகுமதிகளை அள்ளித் தந்தார்.
அதற்குப் பிறகுங்கூட கலிங்கத்தில் மழை பெய்யவில்லை. அப்போது அரசர் அமைச்சர்களிடம், “இனி என்ன செய்வது?” என்று வினவினார்.
அமைச்சர்கள், “அரசே நம் நாடு பெரிய கேடு காலத்தில் சிக்கியிருப்பதாய்த் தெரிகிறது. யானையிடம் நலந்தரும் நற்குணங்கள் நிரம்பியிருந்தபோதிலும் அது மட்டுமே ஒற்றையாய் இந்நாட்டின் இன்னல்களை அகற்ற முடியாமலிருக்கிறது. கௌரவர்கள் நாட்டிலோ காலந் தவறாது மழை பெய்வது எங்களுக்கெல்லாம் தெரியும், அதற்குக் காரணம் அந்நாட்டில் அறநெறி ஒழுங்காய்க் கடைப்பிடிக்கப்படுவதுதான் என்று கருதுகிறோம். கௌரவர் நாட்டு அரசரிடம் அவர் எத்தகைய நல்லறத்தைப் பின்பற்றி வருகிறார் என்பதைத் தங்கத் தகட்டில் பொறித்துத் தருமாறு கேட்டுக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்,
யானையைப் பெற்று வந்த அந்த எட்டு அந்தணர்களும் மீண்டும் ஒருமுறை கௌரவர் நாட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார்கள். யானையைத் திருப்பிக் குரு அரசரிடமே கொடுத்துவிட்டு, “மாமன்னா! நாங்கள் இந்த யானையை உங்களிடமிருந்து பெற்றுச் சென்றதன் நோக்கம் அதைக் கொண்டு போனவுடனேயே நல்ல மழை பெய்து நாடு சிறக்க வேண்டும் என்பதுதான். ஆனால் மழையே பெய்யவில்லை, தாங்கள் குரு வம்சத்தின் நல்லறத்தைப் பின்பற்றுகிறீர்கள் என்று அறிந்தோம். ஆகவே தாங்கள் கடைப்பிடிக்கும் அந்த நல்லறத்தை ஒரு தங்கத் தகட்டில் பொறித்துத் தரவேண்டுமென்று தங்களைக் கேட்டுக் கொள்கிறோம். அதனால் எங்கள் நாட்டிலும் வளம் பெருகி வாழ்வு சிறக்க வழியுண்டாகும்” என்றார்கள்.
அரசரும் அவர்களின் வேண்டுகோளை ஏற்று தங்கத் தகட்டில் பின்வருமாறு எழுதினார்:
“உயிர்களுக்கு உறுகண் செய்யாதே, காமம், குரோதம், மோகம் முதலிய அபச்சாரங்களில் ஈடுபடாதே. பொய் சொல்லாதே. கள், சாராயம் ஆகியவற்றை அருந்தாதே.”
இவ்வாறு அரசர் எழுதிவிட்டாலும் இதில் ஏதேனும் குறை இருக்குமோ என்று அவருக்கே கொஞ்சம் சந்தேகம் உண்டாயிற்று. ஆகவே அவர் குரு வம்ச நெறி பற்றி அறிவுரை பெற்றுக் கொள்ளச் சொல்லி அந்தணர்களைத் தம் தாயாரிடம் அனுப்பிவைத்தார்.
அரசரின் அன்னை அந்தணர்களிடம், ‘நான் குரு வம்சத்தின் தர்மத்தைக் கடைப்பிடிப்பது உண்மைதான். என்றாலும் நான் முறையாகத்தான் அவ்வாறு செய்து வருகிறேனா இல்லையா என்று எனக்கே சரியாய்த் தெரியவில்லை. ஆகையால் நீங்கள் இளவரசன் அதாவது அரசனின் தம்பியிடம் போய்க் கேளுங்கள். கௌரவர்களின் தர்மநீதி என்ன என்பதை அவன் உங்களுக்குச் சொல்லக்கூடும்” என்றார்.
இளவரசனின் மனதிலும் சந்தேகம் இருந்தது. எனவே அவன் அந்தணர்களை ஓர் அலுவலரிடம் அனுப்பி வைத்தான். அந்த அலுவலருக்கு ஒருக்கால் இந்த நீதிநெறி நன்றாய்த் தெரிந்திருக்கக்கூடும் என்பது அவன் எண்ணம். நிலங்களை எல்லாம் சரியாய் அளந்து குறிப்பது அந்த அலுவலரின் வேலை, கம்பில் கயிற்றைக் கட்டி அவர் நிலங்களை அளவெடுப்பது வழக்கம். அந்தணர்கள் அங்கே போன சமயத்தில் அவர் தமது அலுவலில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் தமக்கு முன்னாலிருந்த ஒரு பிரச்சினையை எப்படிச் சமாளிப்பதென்று யோசித்துக் கொண்டிருந்தார். அளவுகோலை குழிக்குள் செலுத்தினால் அங்குள்ள நண்டு இறந்துவிடும். கோலைக் கொஞ்சம் முன்னால் தள்ளி வைத்தால் அரசருக்கு அநீதி இழைத்ததாகும். கோலைக் கொஞ்சம் பின்னால் நகர்த்தினாலோ நிலச் சொந்தக்காரருக்கு நியாயமில்லாமற்போகும் இவ்வாறு யோசித்து யோசித்துக் கடைசியில் கம்பைக் குழிக்குள்ளேயே செலுத்துவதென்று அவர் முடிவு செய்தார். கம்பைக் கண்டதும் நண்டு நகர்ந்து ஓடிவிடும் என்று அவர் நினைத்தார். ஆனால் கழி வளைக்குள் போனதுமே நண்டு ஓர் ஓலமிட்டு ஓய்ந்தது. நண்டைக் கொன்று விட்டோமோ என்ற ஐயம் தோன்றியது அவருக்கு. ஆகவே தமது ஒழுக்கம் கெட்டுப் போய்விட்டதென அவர் கருதினார்.
இவ்வாறு மனம் உழன்று கொண்டிருந்த அவரிடம் அந்தணர்கள் அறிவுரை கேட்டபோது, “நான் என்ன பிரமாத உபதேசம் உங்களுக்குச் செய்துவிடப் போகிறேன்? என்னுடைய ஆசாரமே கேட்டுப்போய்விட்டது போல் தோன்றுகிறது” என்று தம் நிலைமையை அவர் அவர்களுக்கு விளக்கினார்.
அதைக் கேட்ட அந்தணர்கள். “ஐயா. நண்டை நீங்கள் கொன்றிருந்தாலுங்கூட, அது வேண்டுமென்றே செய்த காரியம் இல்லையாதலால் உங்களுக்கு அதனால் பாவமில்லை” என்று கூறினார்கள். ஆனால் அந்த அலுவலரோ அவர்களை ஒரு தேரோட்டியிடம் அனுப்பிவைத்தார்.
தேரோட்டிக்கும் தன்மீதே ஒரு மாதிரி சந்தேகம் இருந்தது. ஒரு நாள் அரசரைத் தேரில் அமர்த்திப் பூங்காவிற்கு அழைத்துச் சென்றுவிட்டுப் பின்னர் அரண்மனை திரும்புகிற சமயத்தில். மழை வரும்போல் இருந்ததால் குதிரைகளை விரைவாய்ச் செலுத்தும் நோக்கத்துடன் அவைகளுக்கு முன்னால் சாட்டையை ஓங்கி அவர் சுழற்றினார். அதற்குப் பிறகு குதிரைகள் அந்தப் பக்கமாய் வரநேர்ந்த போதெல்லாம் குறிப்பிட்ட இடத்திலிருந்து வேகமாய் ஓடத் தொடங்குவது அவைகளுக்கு வழக்கமாயிற்று. அந்த இடத்தில் ஏதோ அபாயம் இருக்கிறது. அதனால்தான் தேரோட்டி நமக்கு முன்னால் சாட்டையைக் காட்டி நம்மை துரிதப்படுத்தினார் என்று குதிரைகள் நினைத்துவிட்டன. ஆகவேதான் அவை அந்த இடத்திற்கு வரும்போதும், போகும்போதும் மிக விரைவாய் ஓட்டம் எடுத்தன. இந்தச் சம்பவத்தைத் தேரோட்டி அந்தணர்களிடம் விவரித்து. “என்னுடைய நன்னடத்தையும் பாதிக்கப்பட்டுவிட்டதோ என்று எனக்கே பயமாயிருப்பதால் நான் உங்களுக்கு உபதேசம் செய்ய அருகதையற்றவன்” என்று சொல்லி விட்டார்.
அது மிக அற்பமான விஷயம் என்பதை அந்தணர்கள் அவருக்குப் புரியவைக்க முயன்றார்கள். “ஐயா, நீங்கள் செய்தது சரிதான். ஆனால், குதிரைகள் விலங்கினம் ஆதலால் உண்மையான காரணத்தை அவைகளால் உணர இயலவில்லை. ஆகவே அவை தமது அனுபவத்தின் அடிப்படையில்தான் தங்களது ஓட்டத்தை அந்த இடத்தோடு சம்பந்தப்படுத்திக் கொள்ளுகின்றன. இதில் உங்களுடைய குற்றம் எதுவுமே இல்லை” என்றார்கள்.
எனினும், அந்தத் தேரோட்டி இணங்காமல் அந்தணர்களிடம் ஒரு வணிகரின் பெயரைச் சொல்லி, “நீங்கள் அவரிடம் செல்லுங்கள், அவர் உங்களுக்கு நல்ல முறையில் உபதேசம் செய்வார்” என்று கூறி அனுப்பினார்.
எட்டு அந்தணர்களும் அந்த வணிகரிடம் சென்று. தங்கள் வருகையின் நோக்கத்தைச் சொன்னார்கள். அதற்கு அவர், “அறநெறியைப் பின்பற்றுவதே என் வழக்கம். ஆனால் இப்போது நானும் ஒரு தவறு புரிந்துவிட்டேன். அதாவது ஒரு நாள், நான் வயலுக்குப் போயிருந்தபோது கதிர்களை ஒடித்துப் பார்க்கலாமென்று நினைத்து ஒரு கையளவு கதிர்களை எடுத்து வந்துவிட்டேன். கையளவான அந்தத்

தானியத்தில் அரசருக்கும் பங்கு உண்டு. ஆனால் அதை நான் கொடுக்கவில்லை. ஆகையால் என்மீது எனக்கே சந்தேகமாயிருக்கிறது. எனது நன்னெறிக்கும் குந்தகம் வந்துவிட்டது. என்றே நினைக்கிறேன்” என்று கூறினார். அந்தணர்கள், “நீங்கள் நடந்துகொண்ட விதம் சரிதான். ஆகவே உங்கள் மீது திருட்டுக் குற்றம் உண்டாக வழியில்லை” என்று அவருக்குச் சமாதானம் சொன்னார்கள். இருந்தாலும், அந்த வணிகர் மரக்காலால் நெல் அளந்து கொட்டும் ஒரு தானிய அளவையாளரிடம் அவர்களை அனுப்பி வைத்தார்.
அந்தணர்கள் நெல் அளப்பவரிடம் செல்ல, அவருக்கும் தன்மீது ஓரளவு சந்தேகம் இருந்தது. ஒரு நாள் தம் வீட்டு வாயிலில் உட்கார்ந்து அரசரின் பங்குக்குரிய நெல்லை அளந்து கொண்டிருந்ததாகவும். அடையாளத்துக்காக அளக்காத கொண்டுவிட்டதால், அடையாள நெல்லை அளந்த நெல்லோடு அவசரத்தில் கலந்து குவியலிலிருந்து நெல்லை எடுத்ததாகவும் அப்போது திடீரென்று மழை பிடித்துக்
விட்டதாகவும் அவர் சொன்னார்.
மழையினால் உண்டான பரபரப்பில் இப்படி ஆகிவிட்டது. பிறகு ஆழ்ந்து யோசித்துப் பார்த்தபோதுதான் அரசரின் பங்கு வீணாக அதிகரித்து, அதனால் விவசாயியின் பங்கு குறைந்துபோயிருப்பது தெரிந்தது. ஆதலால் என் மீது எனக்கு நம்பிக்கை இல்லை, எனது நெறி தவறிவிட்டதோ என்று நான் அஞ்சுகிறேன். என்றார்.
அதற்கு அந்தணர்கள், “நண்பரே. உங்கள் நடத்தையில் குற்றமில்லை. ஆகையால் உங்கள் மீது திருட்டுக் குற்றம் ஏற்பட இடமில்லை” என்று சொன்னார்கள். ஆயினும் அந்த அளவையாளர் அவர்களை ஒரு வாயிற்காப்போனிடம் அனுப்பி வைத்தார்.
அந்த வாயிற்காவலர் எல்லா விஷயத்தையும் கேட்டுவிட்டு “அந்தணர்களே! எனக்கும் நன்னெறி பற்றிப் பேச நாவே இல்லை. ஒரு நாள் நகர வாயிலை மூடுவதற்கு முன்பாக, கதவு.இதோ அடைக்கப்படும் என்று மூன்று தடவை மக்களுக்கு எச்சரிக்கைக் குரல் கொடுத்தேன். பிறகு நான் கதவை அடைத்து விட்டேன். இதற்குள்ளாக ஓர் ஏழை, ஒரு பெண்மணியுடன் சுள்ளிகளையும், தழைகளையும் சுமந்துகொண்டு காட்டிலிருந்து திரும்பி வந்தான். அவன்மீது எனக்குக் கடுங்கோபம் உண்டாயிற்று “நீ என்ன பெரிய மனிதன் என்று நினைப்போ? மனைவியைக் கூட்டிக்கொண்டு இங்குமங்கும் கும்மாளம் போட்டுத் திரிகிறாயா? இங்கேயும் அரசர் என்று ஒருவர் இருக்கிறார் என்பது தெரியாதா, என்ன?” என்று இரைந்தேன். அப்போது அந்த ஏழை கூட வந்தவள் தன் மனைவி இல்லையென்றும் தன் தங்கை என்றும்
சொன்னான். தங்கையை தாரம் என்று நான் தவறாக நினைத்துத் தாறுமாறாகப் பேசிவிட்டதால் நிச்சயமாய் நான் நெறி தவறி விட்டேன்” என்று பதில் சொன்னார்.
‘வாயிற்காவலரே! நீங்கள் வேண்டுமென்றே வீணாக அவர்களைத் திட்டவில்லையே, மேலும் மக்களும் இந்த மாதிரித் தகாத காரியங்களில் ஈடுபடத்தானே செய்கிறார்கள். ஆகவே உங்கள் மீது தவறேதுமில்லை” என்று அந்தணர்கள் அவருக்கு உணர்த்தினார்கள்.
அதன் பிறகு அந்த எட்டு அந்தணர்களும், தங்கத் தகட்டில் பஞ்சசீலம் என்னும் ஐவகை ஒழுக்கங்களையும் பொன்னெழுத்துக்களால் பொறித்துக் கொண்டனர். அவர்கள் சந்தித்த அந்தந்த மனிதர்கள் எவ்வளவோ தடுத்துச் சொல்லியும் கேளாமல் அந்த நிகழ்ச்சிக் குறிப்புக்களையும் அவர்கள் ஒன்றுவிடாமல் எழுதிக் கொண்டு கலிங்க நாட்டிற்குத் திரும்பி வந்தார்கள்.
அந்தணர்கள் திரும்பி வந்தவுடனேயே நாட்டில் நல்ல மழை பெய்தது. பயிர் விளைந்து மக்களும் சுபிட்சமாய் வாழத் தொடங்கினார்கள்.

(நன்றி : இயக்குநர், பப்ளிகேஷன்ஸ் டிவிஷன், செய்தி ஒலிபரப்பு அமைச்சகம், இந்திய அரசு சூச்னா பவன், சி.ஜி.ஓ. காம்ப்ளக்ஸ், லோதி ரோடு, புது தில்லி 110 003)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன