
மாரியம்மாள் ஒரு கிராமத்தில் வசிக்கிறாள். அவளுடைய ஒரே மகள் செல்வி, திருமணமாகிக் கணவனுடன் சென்னையில் வசிக்கிறாள்.
போன மாதம் சென்னைக்குச் சென்றிருந்தபோது, அவளுடைய மகளுக்கு இரத்தச் சோகை இருப்பதாகவும், அதற்கு இரும்புச்சத்துக் மாத்திரைகளையும் முருங்கைக் கீரையையும் அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர் அறிவுறுத்தியிருந்தார்.
கிராமத்திற்குத் திரும்பிய மாரியம்மாள், தன்னுடைய வீட்டில் இருந்த முருங்கை மரத்தின் இலைகள் அனைத்தையும் பறித்து இரண்டு பைகளில் போட்டுக்கொண்டாள். நகரத்தில் உள்ள தன்னுடைய மகளின் வீட்டிற்கு நடையைக் கட்டினாள்.
இனி அடுத்த ஒரு வாரம் செல்வி வீட்டில் முருங்கைக்கீரை மயம்தான்! முருங்கைக்கீரைச் சாம்பார், முருங்கைக்கீரைக் கூட்டு, முருங்கைக்கீரை ரசம் என எல்லாமே முருங்கைக்கீரைதான். ‘முருங்கை இருக்கக் கவலை என்ன? முருகன் இருக்கக் கவலை என்ன?’ என்பது போல் செல்வியின் நிலை ஆகிவிட்டது!
மாமியார் கீரைக்காரியாக ஆனது பற்றி செல்வியின் வீட்டுக்காரருக்கு மட்டற்ற மகிழ்ச்சிதான். ஒரு வாரத்தில் இரத்தச் சோகையிலிருந்து அவள் வெளியே வந்துவிடுவாள். நம்பிக்கைதானே வாழ்க்கை? செல்வி நலம் பெற நாமும் வாழ்த்துவோம்!
