தமிழ்ச்செல்வன் ரத்னபாண்டியன்/அன்புக் கீரை

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்குப் போகும் பாதையில் ‘அன்பு’ பார்த்திருக்கிறீர்களா? பார்த்ததில்லையென்றால் அடுத்த முறை மறக்காமல் பாருங்கள். ஏழை மக்கள் பயன்பாட்டுக்காகப் பயன்படுத்திய துணிகள், செருப்புகள், வீட்டு உபயோகப் பொருட்கள், புத்தகங்கள் ஆகியவற்றை ஓர் பழைய அலமாரியில் வைத்திருப்பார்கள். யார் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.
நம்ம செல்விப்பாட்டி தினமும் தன் வீட்டுப் பின்னால் காடாக மண்டியிருக்கும் கீரைகளில் சிலவற்றைப் பறித்து, ஒரு கிலோமீட்டர் தூரம் ரயில் தண்டவாளத்தை ஒட்டியே நடந்து வந்து, ‘அன்பு’ அலமாரியில் வைத்துவிட்டுச் செல்வார். வேண்டியவர்கள் எடுத்துக்கொள்ளலாம்.
“ஏம்மா, கஷ்டப்படுறீங்க?” என்று கேட்டால், “நம்மளால முடிஞ்சதைச் செய்யுறேன். கஷ்டப்படுற மக்களுக்கு சத்துள்ள கீரை கிடைக்குதுல்லியா, வேறென்ன வேணும் எனக்கு?” என்று புன்னகைப்பார்.
திரும்பி நடக்கையில், கோயில் பக்கம் தேங்காய்க் கடை வைத்திருக்கும், தனிக்குடித்தனம் போன மகனின் முகத்தையும் பார்த்துவிட்டு, மனநிறைவுடன் தனது குடிசைக்குத் திரும்புவார். “நல்லாருக்கியா, ராஜா?” என்று விசாரிக்கவும் தவறுவதில்லை.
குடிசைக்குள் நுழையும்போது அவர் மனம் நிறைந்திருக்கும். “அப்பனே முருகா!” என்று கோயில் திசையைப் பார்த்து முணுமுணுத்துவிட்டு, தரையில் உட்காருவார்.

(111 வார்த்தைகள்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன