
முடியை எவ்வளவு பிய்த்துக் கொண்டாலும் கூடுதல் டேலியாகவில்லை. வாக்களித்தவர்களின் எண்ணிக்கையும், பயன்படுத்திய வாக்குச் சீட்டுகளின் எண்ணிக்கையும் டேலியாகவில்லை.
அது என் முதல் தேர்தல். நான் ஓட்டுப் போட்ட முதல் தேர்தல் அல்ல; நான் நடத்திய முதல் தேர்தல்.அதுவும் தலைமைத் தேர்தல் அலுவலராக. தேர்தல் பணி ஆணையைப் பார்த்ததும் மகிழ்ச்சிக்குப் பதில் பயம் வந்தது. வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களித்த அனுபவம் கூட இல்லாத நான்(24) எப்படி ஒரு தேர்தலை நடத்தப் போகிறேன்?
வகுப்பு என்றால் ஒரு அதிகாரம் இருக்கிறது. ஒரு கிராமத்தில் கட்சிக்காரர்கள் மீது ஏது அதிகாரம்?தேர்தலில் வெற்றி பெற உயிரைக் கொடுத்து உழைக்கக் கூடியவர்கள் புழங்கும் களம். அவர்கள் உயிரை எடுக்கவும் தயங்க மாட்டார்களே?
மூன்று முறை தேர்தல் நடத்துவது பற்றிய பயிற்சி வகுப்புகள் நடை பெற்றன. சொல்லப் பட்ட எல்லா விபரங்களையும் மிகவும் கவனத்துடன் கேட்டுக் கொண்டேன். வாக்குப் பெட்டியை எவ்வாறு திறப்பது, மூடுவது என்பதையும் செய்து கற்றேன். வகுப்பு திருவிழா போன்று காணப்பட்டது. பெருங்கூட்டம். எந்நேரமும் இரைச்சல். அமைதிப் படுத்த ரெவின்யூ மக்கள் போராடித் தோற்றனர். ஆசிரியப் பெருமக்கள் டீ சாப்பிட போய்க் கொண்டும், வந்து கொண்டும் இருந்தனர். தேடிக் கையொப்பமிட்டனர்.
அரியலூருக்கு அருகில் ஒரு கிராமத்தில் பெண்கள் வாக்குச் சாவடி.தேர்தல் நடத்த எனக்கு உதவப் போகும் ஆசிரியர்கள் விபரமும் கிடைத்து விட்டது. இரண்டு ஆண்கள். இரண்டு பெண்கள். ஆசிரியைகளின் பெயர்கள் அழகியவை. பெயர்கள் மட்டுமா என்று தெரியவில்லை. தலைமை அதிகாரிக்கு தேர்தலின் போது வேலை எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. வேடிக்கைப் பார்க்கலாம். கிராமத்துப் பெண்களில் கால் வாசிப் பேராவது அழகாக இருக்க மாட்டார்களா என்ன, என்று இளமனம் நினைத்தது.
தேர்தலுக்கு முதல் நாள் பிற்பகல் சாவடியில் இருந்தேன். மூன்று பேர் முன்பே வந்து விட்டார்கள். தேர்தல் தொடர்பான பொருட்கள் வந்ததும் எண்ணிக்கை சரிபார்த்தோம். வாக்குப் பெட்டிகளை இயக்க முடிந்தது. பள்ளியின் இன்னொரு பக்கத்தில் ஆண்கள் ‘பூத்’துக்கான ஆசிரியர்கள் இருந்தனர். அறிமுகத்துக்குப் பின் அவர்களிடமிருந்து சில நடைமுறை உத்திகளைக் கேட்டுத் தெரிந்து கொண்டேன். விதிமுறைகளை அப்படியே பின்பற்றக் கூடாது என்பதே முதல் விதி என்றார்கள். காலையில் பல வேலைகளை செய்ய வேண்டும் என்று ரூல் சொல்லும். ஆனால் இரவிலேயே முடித்து விடுவதே உசிதம் என்றனர்.
இரண்டு ஆசிரியைகளும் ஓய்வாக பேசிக் கொண்டிருந்தனர். கூப்பிட்டு எல்லோரும் சிறிது வேலையைப் பார்த்தோம். தேர்தலின் போது ஒவ்வொருவரின் கடமை என்ன என்பதை வரிசையாக விளக்கினேன்.
ஒருமுறை ரிகர்சல் செய்து பார்த்தோம். ஆசிரியைகள் வீட்டுக்குக் கிளம்புவதாக சொன்னார்கள். விதிப்படி தேர்தல் பணியாளர்கள் தேர்தல் முடிந்து அனைத்தையும் ஒப்படைக்கும் வரை வெளியில் செல்லக் கூடாது. ஆனாலும் பெண்களைப் பொறுத்தவரை பல நடைமுறை சிக்கல்கள் உண்டு. காலையில் சற்று முன்னதாகவே கிளம்பி வருமாறு சொல்லி அனுப்பினேன்.
இரண்டு ஆசிரியர்களும் கூட இருந்தார்களே தவிர உதவியாக இருக்கவில்லை. வைத்துக் கொண்டு வஞ்சனை செய்தார்கள் என்றும் சொல்ல முடியாது. அனுபவம் அறிவாக மாறும்போதே பயன் தரும். பக்கத்து பூத்காரர்கள் ஓட்டுப் போடுவதைத் தவிர எல்லாவற்றையும் முடித்து விட்டார்கள். எனக்கு அடுத்த தேர்தலில் அந்த துணிவு வரலாம். பாதியளவு முடித்தேன். விதி மீறலுக்கு இன்னும் பழகவில்லை.
புது இடம். ஃபேன் இல்லை. தூக்கம் வரவில்லை. மனதுக்குள் ஒரு டஜன் முறையாவது தேர்தலை நடத்தினேன். பிறகு என்னை மறந்து தூங்கினேன்.
நல்லவேளை, அம்மணிகள் நேரத்தில் வந்து விட்டனர். பூத் ஏஜண்டுகளும் வந்தனர். சில தடுமாற்றங்களோடு சரியான நேரத்தில் வாக்குப் பதிவு தொடங்கியது.
நான் நினைத்தது போல் இல்லை. மாநிறம் என்றால் கூட இங்கிலீஷ்காரியோ என்று ஐயுறும் அளவுக்கு ஒரே இருள் மயம். சரிதா சிவப்பென்று தோன்றியது. மருந்துக்கு வேண்டும் என்றால் கூட அவசரத்துக்கு ஒரு பவள வதனம் கிடைக்காது போலிருந்தது. கரடு முரடான அரை ஆண்முகங்கள். கண்கள் பூத்துப் போனதில் ஆண்கள் ‘பூத்’தே கிடைத்திருக்கலாம் என்று தோன்றியது.
எல்லாம் அமைதியாக சுமுகமாக நடந்தது. கடைசி நேரத்தில் கழுத்தை நோக்கிப் பாய வந்தது கத்தி.
கணக்கு டேலி ஆகவில்லை. எந்த வழியில் போனாலும் உதைத்தது. தப்பு நடக்க நிறைய வாய்ப்புகள் உண்டு. வாக்களித்தவரின் பெயருக்கு அடிக்கோடிடுபவர் தவறுதலாக கோடிட மறக்கலாம். தவறாகப் போட்ட கோட்டை ரத்து செய்யாமல் விடலாம். வாக்காளப் பெருமக்களில் ஒருவர் வாக்குச் சீட்டை நினைவுச் சின்னமாக அல்லது வாக்குப் போட்டதற்கு ஆதாரமாகக் காட்ட வெளியில் எடுத்துச் செல்லலாம். பிறருக்கு நேரும் வரைதான் ஜோக்.
பக்கத்து பூத்காரர் எல்லா வேலையையும் வெற்றிகரமாக முடித்து விட்டு இங்கு வந்த போது நான் பிய்த்துக் கொண்டிருந்தேன். பிரச்னையைக் கேட்டதும், ”இவ்வளவுதானே,சார்? டீ வந்துடுச்சு. நீங்க ஏஜன்டுகளோட டீ சாப்டுட்டு பேசிக்கிட்டு இருங்க. நான் கணக்கைப் பாக்குறேன்” என்றார்.
நாங்கள் டீ அருந்தி முடிக்கும்போது, ”சார், கணக்கு டேலியாயிடுச்சு” என்று கூப்பிட்டார். வேலை முடித்து சீல் வைத்து நிம்மதியாக மூச்சு விட்டேன். ஏஜன்டுகள் அகன்ற பின் நண்பருக்கு நன்றி சொல்லி,”எப்படி டேலி பண்ணீங்க?” என்று கேட்டேன்.
“அதெல்லாம் ஒன்னும் இல்லை, சார். கணக்குல ஒவ்வொரு ஸ்டெப்பா விடைக்குப் போவோம். நான் விடையிலேருந்து பின்னால போனேன்.” எனக்குப் புரியவில்லை.“பிரச்னை ஒன்னும் வராதுல்ல?” என்றேன்.
“அதிர்ஷ்டம் இருக்கும் போது தப்பு பண்ணா கூட பிரச்னை வராது. அதிர்ஷ்டம் இல்லாதப்ப தப்பு பண்ணலன்னா கூட பிரச்னை வரும். பயப்படாதீங்க. ஒரு பிரச்னையும் வராது.”
மனதுக்குள் உதைத்துக் கொண்டே இருந்தது. சில நாட்களுக்குப் பின் தேர்தல் முடிவு வெளியானதும், வென்றவரைப் போலவே எனக்கும் ஒரு நிம்மதிப் பெருமூச்சு வந்தது.
@@@@@@@@@
