முலைத்தடம் சேதகம் பொறிப்ப மற்றவர் குலைத்துடன் பதித்தலின் குதித்த வாட்கயல் புலத்திடைஇக் கவரிகன்று ஊட்டப் போந்தபால் நிலத்திடைப் பாய்ந்தவை பிறழு நீரவே

சேதகம் என்ற சொல்லுக்கு சேறு என்ற பொருள் கிடைக்கிறது.
வண்ணக் கொழுஞ் சந்தனச் சேதகம் மார்பு அணிந்த (கம்பராமாயணம்)-
அதே சொல் செம்மை, சிவப்பு என்று பொருளுடையதாகிறது இங்கே.
கவரி – மான் – குலைத்து – பிரித்து. என்று பொருள்.
தங்கள் மார்பிலே சேறு தெறிக்க நாற்றுக்களை நட்டுக் கொண்டிருக்கும் உழத்தியர்கள். தங்களுக்குள் பாடிக் கொண்டே அயர்ச்சியின்றி மகிழ்ச்சியோடு அப்பணியைச் செய்து கொண்டிருக்கையில், அந்தக் கழனியிலே துள்ளி விளையாடும், குதித்து ஓடும் மீன்கள் பக்கத்து நிலத்துச் சேற்றிலே தாவிக் குதிக்கிற காட்சியானது எப்படியிருக்கிறது எனில் பசு தன் கன்றுக்குக் கொடுத்தது போக மீந்து இருக்கும் பாலானது அவ்வயல் முழுதும் வழிந்து ஓடிப் பரவியிருக்க, அந்தப் பால் கலந்த சேற்று நீரிலே கயல் மீன்கள் தாவிக் குதியாட்டம் போட்டன என்கிற வளமையானபொருளைத் தருகிறது இப்பாடல்.
ஆடிப்பாடி வேலை செஞ்சா அலுப்பிருக்காது- அதில்
ஆணும் பெண்ணும் சேராவிட்டால் அழகிருக்காது. – பாடல் நினைவுக்கு
வருகிறதுதானே?
