இனிக்கும் தமிழ் – 65/-டி வி ராதாகிருஷ்ணன்

கல்வியறிவு இல்லாதவர்களுக்கு அவர்கள் வாயிலிருந்து வரும் சொற்கள் யமன்
ஆகின்றன. வாழை மரம் தான் ஈனுகின்ற காயினாலேயே அழிந்துபோகிறது. செய்யத்
தகாதவற்றைச் செய்பவர்களுக்கு அறமே யமன். ஒரு குடும்பத்துக்குத் தீய
ஒழுக்கம் கொண்ட பெண்ணே யமனாவாள் என்ற பொருள்கொண்ட, நான்மணிக்கடிகைப்
பாடல்

இப்பாடல் டி.எஸ் பாலசுந்தரம் பிள்ளை பதிப்பித்துள்ள நான்மணிக்கடிகை
நூலில் 85-ஆவது பாடல்

கல்லா ஒருவர்க்குத் தம்வாயிற் சொற்கூற்றம்
மெல்லிலைவாழைக்குத் தானீன்ற காய்கூற்றம்
அல்லவை செய்வார்க்கு அறங்கூற்றம் கூற்றமே
இல்லத்துத் தீங்கொழுகு வாள்

இவ்வெண்பாபில் முதல் மூன்று கருத்துகளும் கூற்றம் என்ற சொல்லில்
முடியும் போது நான்காவது கருத்துக் கூற்றம் என்ற சொல்லுடன் தொடங்குகிறது.
முதல் மூன்று கருத்துகளும் ஒரு படிவத்தைக் கொண்டுள்ளபோது நான்காவது
கருத்துப் படிவமாற்றம் ஒன்றைப் பயன்பாட்டில் கொண்டுவருவதற்கான நோக்கம்
என்னவாக இருக்கக்கூடும்? கூர்ந்து மேற்கண்ட செய்யுள் அமைப்பைப்
பார்ப்போமானால் ஒரே படிவத்தையே பயன் படுத்தியிருந்தால் செய்யுளுக்கு
இப்பொழுது கிடைக்கும் இனிமை கிடைத்திருக்காது. மற்றும் கடைசிக்
கருத்துக்குப் படிவமாற்றம் இன்றி அளிக்கப்பட்டிருந்தால் இப்பொழுது அதற்கு
கிடைத்திருக்கும் அழுத்தம் படிவ மாற்றம் இல்லாதபோது கிடைத்திருக்காது.