ஆண்டாளும் நானும்/ ஆர் வத்ஸலா

எனக்கு எட்டு வயதாகும் போது அம்மா எனக்காக ஒரு மாங்காய் மாலையும் ஒரு வெள்ளி குத்துவிளக்கும் வாங்கி என் திருமணச் சீர்சேர்க்கைக்கான பிள்ளையார் சுழியை போட்டாள். (மாங்காய் மாலை என்றால் ஒரு சில மாங்காய்களை எப்படியோ துளையிட்டு சணல் கயிற்றால் ஹனுமார் வடை மாலை போல கோர்த்தது என்று நினைத்துவிடாதீர்கள். அந்த காலத்தில் தங்கத்தில் அப்படி ஒரு நகை உண்டு.) நான் பிறந்தவுடன் எனக்கு ஒரு நல்ல வரன் (அதாவது ஒரு பொறியாளர் அல்லது மருத்துவர் அல்லது மத்திய அரசில் குரூப் 1 அதிகாரி – யார் கண்ணுக்கும் மற்றவர் மனிதர்களாக படுவதில்லை என்று அவள் அறிந்திருந்ததனால்) வேண்டுமானால் அம்மா என் திருமணத்திற்காக _ சவரன் நகைகளும் _ கிலோ வெள்ளிப் பாத்திரங்களும் தேவைப் படும் என்று கணக்கு போட்டு வைத்துவிட்டாள். நாங்கள் வைஷ்ணவர்கள் என்பதால் (”நாங்கள்ளாம் வடகலை ஐயங்கார் தெரியமோ”– அதாவது கிரேக்க அழகு விதிகளின் படி நிறத்தில் கொஞ்சம் அதிக மதிப்பெண்கள் வாங்கும் சாத்தியக்கூறுடையவர் – என்று பெருமையடித்துக்கொள்ள வசதியாய்) என்பதனால் இந்த கிலோ கணக்கு வெள்ளிப் பாத்திர சமாசாரம். சைவர்களாக இருந்திருந்தால் அது ஏதோ ஒரு குத்துவிளக்கு, பன்னீர் சொம்பு, சொம்பு, குளபாத்திரம் (குளவாத்திரம் என மறுவியது), உத்தரணியோடு போயிருக்கும். ஆனால் அதற்கு பிராயச்சித்தமாக வங்கியில் பல ஃப்டிக்கள் போட்டு அவை தங்கள் குட்டிகளுடன் சேர்ந்து ஒரு சில ஆயிரங்களாக (அந்த காலத்தில் ஆயிரம் மிகப் பெரிசு) ஆவதற்கு திட்டமிட்டிருப்பாள். அவள் எத்தனை சவரன் நகைகளும் எத்தனை கிலோ வெள்ளிப் பாத்திரங்கள் சேர்க்கத் திட்டமிட்டிருந்தாள் என்பது அவளுக்கும் கடவுளுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம். அதை இரண்டாவது உலகப் போரில் உலகப் புகழ் பெற்ற ஜப்பானிய சித்திரவதையால் கூட வெளிக் கொண்டு வந்திருக்க முடியாது. ’பெண் பார்க்க’ வந்த என் மாமியார் “சீர் செனெத்தி..” என்று இழுத்ததும் அம்மா பதில் சொன்ன போதுதான் அப்பாவுக்குத் தெரியும் தன்னை விட்டு பெண்ணுடன் சேர்ந்து எவ்வளவு லக்ஷ்மி போகப் போகிறது என்று.

இளநிலை பட்டம் பெற்றவுடன் நடந்திருக்க வேண்டிய என் திருமணம் என் அண்ணா பணி நிமித்தம் வெளி நாடு போய் விட்டதில் தள்ளிப் போடப் பட்டது. இதுதான் சாக்கு என்று அம்மாவின் எதிர்ப்பை மீறி அப்பாவின் ஆசீர்வாதத்துடன் முதுநிலை பட்டம் பெற்று விட்டேன். அண்ணா திரும்பியதும் தொடங்கியது வரன் வேட்டை. (வேட்டையாடப் போவதும் நாங்கள், சிக்கப் போவதும் நாங்கள் – வேடிக்கையாக இல்லை?).

அண்ணாவின் பணி வட இந்தியாவில். அப்பா ஓய்வு பெற்று விட்டதால் நானும் என் பெற்றோரும் அவனுடன். அங்கே இருந்து கொண்டு திருமணத்திற்கு வரன் பார்ப்பது சிரமம் எனத் தோன்றியதால் சென்னையிலிருந்த அம்மாவை பெற்ற பாட்டி வீட்டில் வந்து டேரா போட்டு விட்டோம் நானும் என் பெற்றோரும் கார்த்திகை மாசத்திலேயே. ஆனால் பாட்டியின் மொழியில் சொன்னால் சரியான வரன் ”தெகெயெலே”. மார்கழி வந்து விட்டது. ஒரு மாதம் வரன் வேட்டைக்கு இடைவேளை.

மார்கழி என்றால் முதலில் நினைவுக்கு வருவது பொங்கலும் கோலமும்தான். பாட்டியின் பொங்கல் அவள் மொழியில் சொல்லப் போனால் “வாயிலெ வெக்க வழங்காது”. ஆனால் என் மாமி போடும் கோலம் மிக அழகாக இருக்கும். அம்மா கடனுக்காக (”வாசல்லெ கோலம் போடாட்டா பூதம் வருமாம்”) போடும் கோலம் கோணல் மாணலாக இருக்கும். அதைப் பார்த்து வளர்ந்ததனால் எனக்கு அதில் அதிக நாட்டம் இல்லை. பாட்டி கோள் சொல்லிக் கொடுத்து மாமாவிடம் அடிக்கடி அடிபட்டுக் கொண்டிருந்த என் மாமி அழகழகாய் கோலம் போடுவாள்.

மார்கழி பிறப்பதற்கு முன்பே கண்ணனைப் போல் கணவன் பெற அவள் சொன்ன முறையை மிகுந்த துன்பத்துடன் பின்பற்றினேன். பல் தேய்த்த மறு நிமிடம் காபி குடித்துப் பழகியவள், காபிக்காக ஏங்கிக்கொண்டே குளிரில் நடுங்கியபடி அதிகாலையில் குளித்து தெய்வப் படங்கள் உடைய ”பெருமாள் உள்ளில்” அவசரமாய் திருப்பாவை படித்துவிட்டு சமையலறைக்கு ஓடி பாட்டி கொடுக்கும் கண்றாவி காபியை குடிப்பேன். ”உன் பாடு என் பாடு” (பா.மொ.) என்று ஒரு வழியாக மார்கழி முடிந்து என்னுடைய பல் தேயத்தவுடன் காபி எனும் நார்மல் சொர்க்க வாழ்க்கைக்குத் திரும்பிய சில நாட்களிலேயே ஆண்டான் கிருபையில் வரன் “தெகெஞ்சுது”.

மாப்பிள்ளையின் பெயர் கண்ணனின் பல பெயர்களில் ஒன்றாக அமைந்தது ஆண்டாளின் கிருபையெனத் தோன்றியது எங்கள் எல்லோருக்கும். பெயரில் மட்டுமே ஆயர்குல கண்ணனோடு அவனுக்கு ஒற்றுமை என அப்பொழுது தெரியாததால் காபி ஆசையையும் மீறி என்னை திருப்பாவை சொல்ல வைத்த படிப்பு வாசனையற்ற மாமிக்கு முதுநிலை பட்டம் பெற்ற நான் நன்றி சொல்லிக்கொண்டு கழுத்தை நீட்டி முடிச்சை ஏற்றுக்கொண்டேன்.

மூன்றாண்டுகளுக்கு மேல் கண்ணன் பெயரை கொண்டவனின் லீலைகளை பொறுக்க முடியாமல் முடிச்சை அவிழ்த்துக் கொண்டு நான் தாய் வீடு திரும்புகையில் என் கையில் அவன் அன்பை பெற முடியாத என் பூமகள் கைக்குழந்தையாய் ( திருமணமான புதிதில் ஒரு சில மாதங்களுக்கு அவனை புரிந்து கொள்ளாத அசடாய் நான் இருந்ததற்கு சான்றாய்.) அப்போதுதான் ஞாபகம் வந்தது, அடிக்கடி என் மாமாவிடம் அடி வாங்கும் மாமி சொன்ன ஒரு விஷயம். “நான் ஒரே ஒரு மார்கழி மாசந்தான் இப்பிடி திருப்பாவை சொன்னேன். எனக்கு ஒடனே கல்யாணம் நிச்சயமாடுத்து.”

ஆனால் ஒன்று. ஆண்டாள் கருணையில் அவனுடன் வாழ்ந்த அந்த மூன்றாண்டுகளில் மாமி போல் உடல் ரீதி வன்முறைக்கு ஆளாகவில்லை நான், வழக்கமான மனைவிகளுக்குரிய பாலியல் வகையை தவிர்த்து.

3 Comments on “ஆண்டாளும் நானும்/ ஆர் வத்ஸலா”

  1. மனம் போல் மாங்கல்யம் எல்லோருக்கும் அமைவதில்லை என்று தெரிகிறது.

  2. கனமான ஒருவிஷயத்தை அனாயாசமாக எழுதி இருக்கிறீர்கள்.. சமூகத்திற்கு அஞ்சி வாழ்வோர் பெரும்பான்மையோர்.. தைரியமாக வாழ்வை எதிர்கொண்டு மகிழ்ச்சியுடன் இருப்பதே உண்மையான அறிவு.. கற்ற கல்விக்கும் படித்த புத்தகங்களுக்கும் நாம் செய்யும் மரியாதை இந்த ஞானம்தான்..

  3. எளியநடை எள்ளலோடு…வாழ்ந்த மோசமான அனுபவத்தையும் பகிர்ந்துகொள்ள வயது காரணமாயிருக்கவேண்டும்.
    இன்று எளிதாய்த் தெரியலாம்
    அன்று பெண்மையின் மென்மை எங்ஙனம் ரணமாயிருக்கும் என்பதை அரங்கனே அறிவார்.

Comments are closed.