
கடந்த ஐந்து மாதங்களாகச் சிட்டுவாசல் கிராமத்தில் கீரை விற்று வந்தாள் யசோதா. விதவிதமான கீரைகள் நிறைந்த பைகளுடன், சோகமான முகமும் ஏதோ ஒரு தேடலும் கொண்டவளாகத் தெருத்தெருவாக அலைவாள். இரவில் கோயிலுக்குப் பின்புறம் இருந்த ஓலைக்குடிசையில் தங்குவாள். சத்துணவுக் கூடத்தில் பணிபுரியும் மணிமேகலைதான் அவளை அங்கு அழைத்து வந்திருந்தாள்.
ஒருநாள் மணியக்காரர் ராஜு வீட்டில் கூச்சல் கேட்டது.
“என்னம்மா, ஏதாச்சும் சண்டையா?”
“ராஜுவின் பேத்தி ஜெயந்தி பள்ளியிலிருந்து இன்னும் வரவில்லை!” என்றாள் மணிமேகலை.
“ஐயோ! ஏற்கெனவே ஒரு சிறுமி காணாமல் போய் ஆற்றங்கரையில் சடலமாகக் கிடந்தாளே!” என்றாள் மங்களம்.
“பண்ணைக்காரர் பேரன் பாஸ்கரின் அட்டூழியத்தைத் தாங்க முடியவில்லை. பெரியவர் இருந்தவரை அடங்கியிருந்தான்!” என்று மக்கள் முணுமுணுத்தனர்.
அதிலும் ஏனோ, கீரைக்காரி யசோதா இரண்டு மூன்று நாட்களாகக் கைகளில் கீரைப் பைகளுடன் அந்த ரயில் நிலையத்திற்கு அருகில் சென்று, எதையோ தேடும் பார்வையுடன் நின்றுகொண்டிருந்தாள்.
அன்று மாலை கோயிலருகே மணிமேகலையும் யசோதாவும் பேசுவதைக் கேட்ட குருக்கள் குழப்பமடைந்தார்.
“நீங்கள் முடிவெடுத்தபடி நாளை விழாவுக்கு ஏற்பாடு செய்யலாம், மேடம்!” என்றாள் மணிமேகலை.
மறுநாள் பண்ணை வீட்டின் முன் போலீஸ் ஜீப் நின்றது. கீரைக்காரி யசோதா, பாஸ்கரை கைவிலங்கிட்டு அழைத்து வந்தாள். காணாமல் போன சிறுமிகளையும் மணிமேகலை மீட்டாள்.
சாதாரணக் கீரைக்காரியாக வந்த யசோதா, சிறுமிகளைக் காப்பாற்ற வந்த துணிச்சலான காவல் அதிகாரி என்பது அப்போதுதான் ஊருக்குத் தெரிந்தது. மறைந்திருந்த உண்மையை வெளிக்கொண்டு வந்து, அச்சத்தில் வாழ்ந்த கிராம மக்களுக்கு நிம்மதியையும் நம்பிக்கையையும் அளித்தனர் அந்த இருவரும். அவர்களுடைய முயற்சி இறுதியில் வெற்றிகரமாக முடிந்தது.
