
அந்த மரங்கள் கம்பீரமாக நிற்கின்றன. மனிதன் போட்ட தார் ரோடுகளாலும் மற்றும் அருகில் நிகழ்ந்துக் கொண்டிருக்கும் போக்குவரத்து நெரிசல்களாலும் தாக்கம் ஏதும் அடையாமல், அவை கம்பீரமாக நிற்கும் விசித்திரக் காட்சி. அவற்றின் வேர்கள், ஆழமாக பூமியில் வேரூன்றியுள்ளன. அவற்றின் உச்சியோ, வானத்தை நோக்கி விரிந்துள்ளன. நாமும் பூமியில் வேரூன்றியவர்கள் தாம் – ஆனால், பூமியையே பிடித்துக் கொண்டு, தரையிலேயே ஊர்ந்துக் கொண்டிருக்கிறோம்.
மிகச்சிலரே, வானத்தை நோக்கி எம்பித் தொடுகிறார்கள். அவர்கள் மட்டுமே, படைப்பாற்றல் கொண்ட, மகிழ்ச்சியான மாந்தர்கள், மீதியுள்ளவர்கள் . தங்களின் வம்புப் பேச்சுகளாலும் செயல்களாலும் ஒருவரையொருவர் நோகடித்து, அழித்து, இந்த அழகானபூமியைப் பாழடிக்கிறார்கள்.
திறந்த மனதுடன் இரு. கடந்த கால நினைவளில் வாழ வேண்டியிருந்தால், அவ்வாறே இரு, ஆனால், அதற்கு எதிராக போராடாதே. கடந்த கால நினைவுகள் வரும்போது அதை ஒதுக்கித் தள்ளியோ அல்லது அதைக் கொண்டாடியோ செய்யாமல், அதைப் பார்.
இத்தனை ஆண்டுகளின் அனுபவம், வேதனைகள் மற்றும் மகிழ்ச்சிகள், வெறுப்பூட்டும் ஏமாற்றங்கள், பிரிவுகள், தன்னை மறந்த நிலை போன்றவற்றைப் பார். இவ்வாறு பார்ப்பதில் அக் காட்சிக்கு வளமையும் அழகும் கூடுகிறது. உன் இதயத்தில் எதைக் கொண்டுள்ளாய் என்பதுதான் முக்கியம்; அது நிரம்பி வழிந்துக் கொண்டிருப்பதால், அனைத்தையும் நீ அடைந்துள்ளாய், நீயே அனைத்தும்.
உன் அனைத்து எண்ணங்களுக்கும் உணர்ச்சிகளுக்கும் விழிப்புடன் இரு. ஒரு எண்ணமோ உணர்ச்சியோ கூட, உன் விழிப்பான கவனத்திலிருந்தும், அவற்றின் பொருளை நீ கிரகிப்பதிலிருந்தும் நழுவிவிட அனுமதிக்காதே . கிரகித்தல் என்பது பொருத்தமான சொல் அல்ல – எண்ணம் மற்றும் உணர்ச்சியின் முழுப் பொருளையும் பார்த்தல் என்பதே சரியான விளக்கமாகும்.
ஒரு அறைக்குள் நுழைந்து, அங்கிருக்கும் அனைத்துப் பொருட்களையும், நிலவும் சூழலையும், இடப்பரபபையும் உடனடியாகப் பார்ப்பதைப் போன்றதே, எண்ணம் மற்றும் உணர்ச்சிகளைப் பார்ப்பது. எண்ணங்களைக் கவனித்து, அவற்றைப் பற்றிய விழிப்புணர்வுடனிருப்பது, ஒருவரை, அதீத மென்மையுணர்வு கொண்டவராகவும் இணக்க மானவராகவும் விழிப்புணர்வு கொண்டவராகவும் ஆக்குகிறது.
எதையும் கண்டனம் செய்யாதே. எதைப்பற்றியும் தீர்ப்பு வழங்காதே. ஆனால், மிகுந்த விழிப்புணர்வோடு இரு. கனிமத்திலிருந்து கழிவைப் பிரிப்பதால், அப் பிரிவிலிருந்து பிறக்கிறது சொக்கத் தங்கம்.
உள்ளது – ஐ பார்ப்பது என்பது உண்மையிலேயே மிகவும் சிரமமானக் காரியம்தான். தெளிவுடன் கவனிப்பது எவ்வாறு? தன் ஓட்டத்தின் போது தடையைச் சந்திக்கும் நதியானது ஓடாமல் நின்று விடுவதில்லை ; அது, தன் கனத்தால் தடையை உடைக்கிறது; இல்லையென்றால், தடையின் மீதேறியோ, அதன் கீழிறங்கியோ அல்லது தடையைச் சுற்றிக்கொண்டோ , ஓடுகிறது , நதியால் செயல்படாமல், வாளாவிருக்க முடியாது. அது புத்திசாலித் தனமாக கிளர்ச்சி செய்கிறது என்றே சொல்லலாம். புத்திசாலித்தனமாக எதிர்க்க வேண்டும்.
உள்ளது’ -ஐ புத்திசாலித்தனமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். ‘உள்ளது’-ஐ பார்த்தறிய புத்திசாலித்தனமாக கிளர்ச்சி செய்யும் இயல்பு இருக்க வேண்டும். முட்டுக் கட்டையை தவறாகப் புரிந்து கொள்ளாமலிருக்க புத்திசாலித் தனம் தேவை; ஆனால், பொதுவாக, விரும்பியதைப் பெறவேண்டும் என்ற மிகுதியான ஆர்வத்தில் ஒருவர் தலைதெறிக்க ஓடி தடைகளின் மீது முட்டி மோதிக்கொள்கிறார். ஒன்று, தன்னையே அழித்துக்கொள்கிறார் அல்லது களைத்துப் போகிறார் கயிற்றை, கயிறாகப் பார்ப்பதற்கு துணிவு ஏதும் தேவையில்லை. ஆனால், கயிற்றை தவறுதலாக பாம்பென்று எண்ணிய பின் அதை உற்று கவனிப்பதற்கு துணிவு அவசியம் தேவை.
எதையும் புரிந்துகொள்ள, அதைப் பற்றிய ஐயப்பாடு தோன்ற வேண்டும், நீடித்த தேடல் வேண்டும் பொய்மையை பொய் எனக் காணல் வேண்டும். கவனத்தின் தீவிரத்தன்மையின் மூலம், தெளிவாக காண்பதற்கான திறனை ஒருவர் பெறுகிறார். அத்தகைய கவனத்துடன் இருக்கும் போது, தெளிவாக நோக்கும் திறன் உண்டாவதை ஒருவரால் பார்க்க முடியும். அவர் செயல்பட்டாக வேண்டும்; செயல்படாமல் நதி இருப்பதேயில்லை . அது ஓயாமல் செயல்படுகிறது.
செயல்பட, ஒருவர் நிராகரித்தல் நிலையில் இருக்க வேண்டும்; பொய்மையை நிராகரிக்கும் அச்செயலே, ஆக்கபூர்வமான செயலை வெளிக்கொணரும். தெளிவாகப் பார்த்தறிதல் என்பதுதான் நமக்குப் பிரச்சினையாகவுள்ளது என்று நினைக்கிறேன். இந்தப் புரிதலே, அதற்கான செயலைக் கொணர்கிறது. நெகிழ்வுத்திறன் (elasticity) இருக்குங்கால், சரியானது / தவறானது என்ற கேள்விக்கே இடமில்லை .
தனக்குள் மிகுந்த தெளிவுடன் இருக்க வேண்டும். அவ்வாறிருந்தால், அனைத்தும் சரியாக நடக்கும் என்று நான்உறுதி கூறுகிறேன். தெளிவாக இரு. அந்நிலையில் நீ எதையும் செய்யாமலே, காரியங்கள் சரியாக தானே உருப்பெறுவதைக் காண்பாய். சரியானது என்பது நீ விரும்பியது என்றாகாது. நீ விரும்பியதாக அது இருக்க வேண்டுமென்பதில்லை.
பெரிய விஷயங்களில்தான், பரிபூரண புரட்சி என்பதல்ல – சிறிய சிறிய தினசரி விஷயங்களிலும் பரிபூரண புரட்சி நிகழவேண்டும். உன்னிடம் அத்தகு புரட்சி ஏற்பட்டுள்ளது, தொடர்ந்து அதை உயிர்ப்புடன் வைத்துக் கொள். ஓய்ந்து விடாதே. உள்முகமாக ஆன்மிகத் தகிப்புடனிரு.
10

பிரமிக்க வைக்கும் ஜெகே (JK) அதுவும் தமிழில்.