
காத்திருக்கிறேன்
இன்னும் வரவில்லை
அவருக்காக நான்
காத்திருப்பது
அவருக்குத் தெரியாது
இடம் தூய்மையாக
அமைதியாக இருக்கிறது
வந்தாலும் பேச ஒன்றும் இல்லை,
காத்திருக்கிறேன்
வீட்டுக்குத் தான் அழைப்பார் ஒவ்வொரு முறை
அலைபேசியில் பேசும் போதும்
இன்று இங்கே சந்திக்க வேண்டியதாயிற்று
இன்னும் வரவில்லை
அத்தனை அன்பு பெய்யும் அவர் குரலில் –
அத்தனை வாஞ்சை என்னிடம், அப்படியானால்
எல்லோரிடமும் தான்
சற்று முந்தி வந்து
காத்திருக்கிறேன்
இன்னும் வரவில்லை
வேடிக்கை என்னவெனில்
ஒரு நாள் அழைத்தார்
திடீர் என்று
‘எத்தனை தடவை வீட்டுக்கு உன்னைக் கூப்பிட்டு இருப்பேன்
இதோ அதோ என்று
சொல்லிக் கொண்டிருந்தாய்
இப்போது பார்
உனக்கே தெரியாமல்
என் வீட்டில்
எங்கள் ஹாலில் பேசிக் கொண்டிருக்கிறாய் தெரியுமா?’
என்று போட்டார் ஒரு குண்டு.
ஜெயா செய்திகளில்
ஒரு தர்ணா போராட்ட களத்தில் இருந்து கொடுத்த ஆவேச
நேர் காணல் ஓடிக் கொண்டிருக்கிறது
அவரது தொலைக்காட்சிப் பெட்டியிலும்
‘என் ஆசீர்வாதங்கள் கண்ணா’ என்று
வியப்பில் ஆழ்த்தியவர்
காத்திருக்கிறேன்
அவருக்கான உதவிகளைச் செய்ய இங்கே
காத்திருப்போரிடம் பேசிக் கொண்டிருக்கிறேன்
அவர்களும் காத்திருக்கின்றனர்
இன்று விட்டால் இனி ஒரு போதும் பார்க்க முடியாத
அன்பு முகம் பார்க்க
அவருக்குத் தெரியாமல் காத்திருக்கிறேன்
போக்குவரத்து நெரிசல்….
வந்து விடும் கொஞ்ச நேரத்தில் என்று
சொல்லிக் கொண்டிருக்கிறார்
அதிகாரி,
காத்திருக்கும்
மயான ஊழியர்களிடம்.
காத்திருக்கிறேன்.
****

என்ன அழகான கவிதை!!!..தான் மிகவும் மதித்த , நேசித்த ஒருவர் காலமான பின் அவரது இறுதிச் சடங்குக்காக காத்திருக்கிற அந்தத் துயரம் மிகுந்த கணங்களை நம் கண் முன்னே நிறுத்துகிறது.
ஆழமான விதையே கவிதையாக மாறிப்போச்சு.
காத்திருக்கலாம் கவிதை கிடைத்ததே.
So spontaneous and very touching words mama.. my inner sense tells , that he would have definitely felt your presence..
let that soul rest in peace.. 🙇♂️🙏
ஒரு வழியாக ஒபன் ஆனது. காத்திருத்தல் என்பது கொடுமை அதிலும் மயானத்தில் என்பது குறிப்பிடத்தக்கது.85 வயது இளைஞர் அவரின் முன்னோரிடம் போய் சேர்ந்து விட்டார்
காத்திருப்பின் வலி நம்மில் பலருக்கு புாிவதில்லை!
இனியாருக்கும் காத்திருக்காமல் அவசரமாக புறப்பட்டுவிட்டாா்
முன் சென்று நமக்காக
காத்திருப்பதாய் சொல்லும்
நம்பிக்கையில் நம்பிக்கையில்லாததால்
சொல்கிறேன்!
இனி யாரையும் காக்க வைக்க வேண்டாம்!
இது வேறு வகை.
உங்களின் புதிய கவிதை வரவுக்காக காத்திருத்தல்.
அருமை. அருமை. உணர்ச்சிமிகு நிகழ்வை கவிதையில் அதன் குணம் குறையாமல் வடிப்பது என்பது எல்லோராலும் முடியாது. வாழ்த்துக்கள்
அருமையான கவிதை. மயானத்தில் காத்திருப்பது ஒரு வகையான உணர்வு அதை கவிதையில் படிப்பது கண்ணீரோடு.
கவிதை உருக்கமாக இருக்கிறது. ஆனால் உலகம் மாறிக்கொண்டே வருகிறது. இப்பொழுதெல்லாம் அதிகம் பேர் மயானம் வரை வருவதே இல்லை!
வித்தியாசமான காத்திருத்தல்.
கட்டமைத்தது அழகு.
காத்திருப்பின் வலி உருக்கம்.எளிய நடையில் பகிர்ந்த வருத்தம் .