ஷைலஜா/மர்ம ஏரி

அந்தக் கிராமத்தில் ஒரு பெரிய ஏரி இருந்தது. அங்கு ஒரு மண் சாலை வழியாகச் செல்ல வேண்டும். ஆனால் அந்தச் சாலையில் மாலை ஆறு மணிக்கு மேல், சில வருடங்களாக யாரும் நடப்பதில்லை.
ஏனென்றால், அங்கே யாரோ சிலர் பின்தொடர்ந்து வருவது போன்ற காலடிச் சத்தம் கேட்கும். திரும்பிப் பார்த்தால் யாருமே இருக்க மாட்டார்கள்!
ஒரு நாள் வேலு, மணி, கண்ணன், சுரேஷ் ஆகிய நான்கு பேரும் பள்ளி முடிந்து அந்தச் சாலை வழியாக ஏரிக்குத் தனித்தனியாகச் சென்றபோது, இந்த அமானுஷ்ய அனுபவத்தைப் பெற்றார்கள்.
“வீட்டில் சொல்ல வேண்டாம். இன்னிக்கு ஏரிக்கு நம்ம நாலு பேரும் ஆறு மணிக்கு மேல குளிக்கப் போகலாம். அங்கே என்ன மர்மம் இருக்கிறது என்று பார்க்கலாம்” என்று சொல்லி, துண்டுகளைத் தோளில் போட்டபடி கிளம்பினார்கள்.
சுரேஷ் மெதுவாகச் சொன்னான்:
“டேய்… நம்ம பின்னாடி யாரோ நடந்து வர்ற மாதிரி இருக்குடா…”
நான்கு பேரும் திரும்பிப் பார்த்தார்கள். யாரும் இல்லை!
ஆனால் தரையில்… எட்டு காலடித் தடங்கள் இருந்தன. அவர்கள் நான்கு பேர்தானே? மீதி நான்கு தடங்கள் யாருடையவை?
கண்ணன் பயத்தில் சொன்னான்:
“டேய், ஓடிடலாம்!”
“பயப்படாதே… சேர்ந்து நடப்போம்” என்றான் மணி.
நான்கு பேரும் ஒருவர் தோளில் ஒருவர் கைபோட்டு, தைரியமாக நடக்க ஆரம்பித்தார்கள்.
அவர்கள் நடக்க நடக்க, பின்னால் கேட்ட காலடிச் சத்தம் மெதுவாக மறைந்துபோனது.
திகைத்துப்போன அந்த நான்கு பேரும், ஊர்க் கோயிலுக்குப் புதிதாக வந்திருந்த அந்தச் சித்தரிடம் விவரம் கேட்டார்கள்.
“சில வருடங்களுக்கு முன்னால் நான்கு சிறுவர்கள் ஏரியில் குளிக்கச் சென்றார்கள். அவர்களில் ஒருவன் குளிக்கும்போது காணாமல் போனான். அவனைத் தேடிக்கொண்டு மற்ற மூவரும் ஏரிக்குள் இறங்கினார்கள். நால்வருமே ஏரியில் மூழ்கி இறந்துவிட்டார்கள். அவர்களும் நண்பர்கள்தான்.
அதனால் தனியாக நடப்பவர்களை எச்சரிப்பதற்காகப் பயமுறுத்துவார்களாம். ஆனால், நண்பர்களுடன் சேர்ந்து நடப்பவர்களை ஒன்றும் செய்ய மாட்டார்களாம்” என்றார் சித்தர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன