பாலசாண்டில்யன்/சொத்துத் தகராறு

நைரோபியின் புறநகர்ப் பகுதியில் இருந்த அந்தப் பூர்வீக வீட்டின் வாரிசுரிமைப் பத்திரத்தில் கையெழுத்திட, பல ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன், தம்பிகள் நால்வரும் வழக்கறிஞர் முன் கூடியிருந்தனர்.
“வீட்டை விற்றுப் பணத்தைச் சரிசமமாகப் பிரித்துக்கொள்வதில் யாருக்கும் ஆட்சேபணை இல்லையே?” என்று வழக்கறிஞர் கேட்டார்.
மூத்தவர் கமாவின் பார்வை, சுவரில் மாட்டியிருந்த ஓவியத்தின் மீது நிலைத்தது. வெறுங்கால்களுடன், தோளோடு தோள் அணைத்தபடி சிரித்த முகத்துடன் நடந்து செல்லும் நான்கு ஆப்பிரிக்கச் சிறுவர்களின் வண்ண ஓவியம் அது.
“பாருங்களேன்… நம்ம ஊர்ச் சிறுவர்கள் மாதிரியே இருக்கிறார்கள். அப்பா நம் நால்வரின் ஒற்றுமையை நினைத்துத்தான் இதை வாங்கி மாட்டியிருக்கிறார்!” கமாவின் குரல் நெகிழ்ச்சியில் தழுதழுத்தது.
மற்ற மூவரும் அந்த ஓவியத்தைப் பார்த்தனர். சிறுவயதின் பசுமையான நினைவுகள் கண்முன் விரிய, பணத்தாசையால் பிரிந்திருந்த மனங்கள் இளகின.
“வழக்கறிஞர் சார், பத்திரத்தைக் கிழித்துவிடுங்கள். நம் அப்பா வாழ்ந்த வீட்டை விற்க வேண்டாம்!” என்றான் இளையவன் கிப்ரோப்.
மகிழ்ச்சியுடன் நால்வரும் வெளியே வர, ஓவியத்தைத் துடைத்துக்கொண்டிருந்த வேலைக்காரர் முணுமுணுத்தார்:
“போன வாரம் பழைய கடையில் நானூறு ஷில்லிங்கிற்கு நான் தானே இதை வாங்கி மாட்டினேன்!”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன