
“நாம இங்கேயே சேர்ந்து இருக்க முடியாதா?” என்றான் முதல்வன். அவன் குரலில் இருந்த ஏக்கம் மற்றவர்களையும் தாக்கியது.
“எப்படி முடியும்? நமக்குன்னு யார் இருக்கா? அதுதான் நம்மை வளர்க்கிறதுக்கு வாங்கிட்டுப் போறாங்க” என்றான் அடுத்தவன்.
“நான்கு பேரும் ஒரே இடத்தில் போக முடியாதா?”
“முடியாததால்தானே நாம் தனித்தனியாகப் போகிறோம்.”
“இனி நாம் பார்த்துக்கொள்ளவே மாட்டோமா?”
“ஏன் மாட்டோம்? வருடத்துக்கு ஒருமுறை ஒரு இடத்தைச் சொல்லி, அங்கே சந்திப்போம்” என்றான் ஒருவன்.
“நம்மிடமோ காசு இல்லை. நாம் சிறுவர்கள். எப்படி ஒரு இடத்துக்கு வர முடியும்?”
“வர முடிகிற நிலை வந்தவுடன், வருடாவருடம் இதே தேதியில் இதே இடத்துக்கு வந்து ஒரு நாள் தங்கிச் செல்ல வேண்டும். அப்போது நாம் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளலாம்” என்றான் நான்காமவன்.
நாளை பிரிய இருக்கிறோம் என்பதால், ரொம்ப நேரம் ஒருவரையொருவர் அணைத்துப் பிடித்தபடி அங்கேயே நின்றிருந்தார்கள்.
“எந்த ஊரில், எந்த நாட்டில் என்று காண்போமோ” என்ற கவிஞரின் வரி அவர்களுக்குத் தெரிந்திருக்க நியாயம் இல்லை.
