அழகியசிங்கர்/நான்கு பேர் அணி

நான்கு பேரும் உற்ற நண்பர்கள். அம்பேத்கர் குப்பத்தில் வசித்து வந்த நால்வரும் ஒன்றாகப் போவார்கள்; ஒன்றாக வருவார்கள்.
அந்தக் குழுவில் சின்னான்தான் சிறிய பையன். கோபால் பெரிய பையன்.
அநீதி நடக்கிற இடத்தில் அதைத் தட்டிக் கேட்பதுதான் அவர்களுடைய கடமை. பள்ளிக்கூடத்தில் இந்த நால்வர் அணிக்கு எப்போதும் வரவேற்பு உண்டு.
படிப்பதிலும் கெட்டிக்காரர்கள். ஒவ்வொருவரும் போட்டி போட்டுக்கொண்டு படிப்பார்கள். விளையாட்டிலும் சேர்ந்தே விளையாடுவார்கள். மற்ற மாணவர்கள் இவர்களை நால்வர் அணி என்று கிண்டல் செய்வார்கள்.
அவர்கள் ஏழை மாணவர்கள். பள்ளியில் காலையில் சிற்றுண்டியும், மதியம் சத்துணவும் கிடைக்கும்.
சின்னானின் அப்பா உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். அப்பா இறந்த பிறகு சின்னான் பள்ளிக்கூடம் செல்வதையே நிறுத்திவிட்டான்.
மற்ற மூவரும் சின்னானின் வீட்டுக்குச் சென்று, ஏன் பள்ளிக்கு வரவில்லை என்று விசாரித்தார்கள்.
அவனுடைய அப்பா இறந்துவிட்டதால், படிக்க வசதி இல்லை என்று அவனுடைய அம்மா பதில் சொன்னார்.
அதைக் கேட்ட அவர்கள், “நாங்கள் சின்னானைப் படிக்க வைக்கிறோம்” என்றார்கள்.
திரும்பவும் நால்வர் அணி உருவாகிவிட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன