
வேலு, ராமு, பரமு, பாலு ஆகிய நால்வரும் நண்பர்கள். இவர்கள் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள்.
ஒரு நாள் பள்ளிக்கூடத்தில் வகுப்பாசிரியர், “பசங்களா, நீங்க ஆங்கில வீட்டுப்பாடம் எழுதிய நோட்டை எடுத்துக்கொண்டு வந்து இங்கே மேசைமேல் வையுங்க” என்று சொன்னார்.
ராமுவைத் தவிர மற்ற எல்லோரும் தங்கள் நோட்டுகளைக் கொண்டு வந்து வைத்தார்கள்.
“ராமு, நீ ஏன் வீட்டுப்பாடம் எழுதிட்டு வரலை?”
“இல்லே ஸார், எங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லை. அதனால அவங்களுக்கு உதவி செய்ய வேண்டியதாப் போச்சு. எழுத நேரமில்லை.”
அதற்குத் தண்டனையாக அவனை வகுப்பறைக்கு வெளியே நிற்க வைத்தார். அவனை எல்லோரும் பார்த்துக்கொண்டே சென்றார்கள். அவனுக்கு ஒரே அவமானமாகிவிட்டது.
மாலையில் பள்ளி விட்டதும் வீட்டுக்கு வந்தவன் யாரிடமும் பேசவில்லை; சாப்பிடவும் இல்லை.
அப்போது மற்ற மூன்று பேரும் அவனைப் பார்க்க வீட்டுக்கு வந்தார்கள். அவன் வருத்தமாக இருப்பதைப் பார்த்ததும், “ராமு, வாடா! நாம இப்படியே நடந்து ஆறு வரைக்கும் போயிட்டு வரலாம்” என்று அவனைக் கூட்டிக்கொண்டு போனார்கள்.
அங்கே கொஞ்ச நேரம் ஆற்று நீரில் விளையாடிவிட்டு, ஒருவர் தோள்மீது மற்றொருவர் கை போட்டுப் பேசிச் சிரித்தபடி வீடு திரும்பினர்.
