சுபாஷிணி ரமணன்/சொந்தங்கள்

“டேய் கிருஷ்ணா, உனக்கு யாருடா பேரு வச்சாங்க?”
“யாருக்குத் தெரியும்? உனக்கு?” என்று சதாசிவத்தை கிருஷ்ணன் திருப்பிக் கேட்டதற்கு, அவன் உதடுகளைப் பிதுக்கினான்.
“தெரியாதுடா” என்றவன், “உனக்கு? உனக்கு?” என்று ஜேம்ஸையும் கரீமையும் கேட்க, அவர்களும் உதட்டைப் பிதுக்கி, தெரியாது என்பதாகத் தலையாட்டினார்கள்.
அவர்கள் நால்வருமே தனியார் நடத்தும் அநாதை விடுதியிலிருந்து, அந்த வருடம்தான் அரசுப் பள்ளியில் சேர்ந்திருந்தார்கள். அதுவரையில் அவர்கள் வேற்று முகங்களைப் பார்த்ததில்லை. எனவே, பள்ளியில் யாருடனும் சேராமல் தனித்தே இருப்பார்கள்.
முதல் நாள் என்பதால் எல்லோரிடமும் பெயரைக் கேட்டார்கள். தாய் பெயர், தந்தை பெயர் கேட்டார்கள். ஆங்கில வகுப்பு என்பதால், ‘ஃபாதர்ஸ் நேம்’ என்று கேட்டபோது, அவர்களுக்குத் தங்களை வளர்த்த ஃபாதர்தான் ஞாபகத்துக்கு வந்தார். சிஸ்டர் அவர்களைக் கவனித்துக்கொள்பவர். சோறு போடும் அன்னபூரணியை ‘அம்மா’ என்று அழைப்பார்கள்.
குடும்ப உறவுகள் அவர்களுக்குப் புதிராகவும், புதுமையாகவும் இருந்தன.
“யாருமே இல்லாட்டா அநாதைன்னு சொல்லுவாங்களாம். நாமெல்லாம் அநாதையா?” கரீமின் சந்தேகத்தில் ஜேம்ஸ் அழ ஆரம்பித்தான்.
“அப்படிச் சொல்லாதடா. நாம நாலு பேரும் சொந்தம்தானே!” என்று எல்லோரையும் அணைத்துக்கொண்டான் சற்றே பெரியவனான கிருஷ்ணன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன