சாந்தி சந்திரசேகரன்/தேடல்

ஆப்பிரிக்காவின் வறுமை மிகுந்த மசாய் கிராமம் அது.

“அமீனா… குவாமே… ஜபாரி… நாலா…” முடிந்தவரை சத்தமாக அமாரா அழைத்தார். நீரின்றித் தவித்த அவரது வறண்ட தொண்டை வலித்தது.

‘இனியும் இங்கே இந்தப் பிள்ளைகள் தவிக்க வேண்டாம். தொண்டு நிறுவனத்திலிருந்து வரும் லிண்டாவை நாடினால், ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்தனிக் குடும்பங்களில் அடைக்கலம் கிடைக்கும். உணவு, கல்வி, மருத்துவம் என அவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையும்.’

இதை மனதில் எண்ணும்போதே, பிள்ளைகளைப் பிரியும் துக்கம் கண்ணீராக உருவெடுத்தது. ஆனால் அவை கன்னத்தில் வழியுமுன்னரே வெயிலின் தாக்கத்தில் வறண்டு போயின.

அப்போது பிள்ளைகள் நால்வரும் தோள்மீது கை போட்டபடி, சிரித்துப் பேசியவாறு நடந்து வருவதைக் கண்டார். கொதிக்கும் மணலில் செருப்பில்லாமல், சரியான உடையில்லாமல், வறண்ட சருமத்தை மணல் மூடியிருந்தாலும், பிள்ளைகள் நால்வரும் ஒருவரையொருவர் அரவணைத்துக்கொள்வது அந்தப் பிடிப்பில் தெரிந்தது.

இத்தனை வறுமையிலும் அன்பாக இருக்கும் அவர்களைப் பிரிக்க மனமில்லை அந்தத் தாய்க்கு.

‘பிள்ளைகளுக்கு உணவு, கல்வி, மருத்துவம்… இவற்றுடன் அன்பும் சேர்ந்து கிடைக்க, எனக்கு ஒரு வேலை தர முடியுமா?’ என்று கேட்க, லிண்டாவைத் தேடிப் புறப்பட்டார் அமாரா.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன