வி.கே. லக்ஷ்மிநாராயணன்/நான்கு சிறுவர்கள்

ஒருவன் தோளில் மற்றவன் கை போட்டபடி, கோரஸாகப் பாடிக்கொண்டே சென்ற அந்த நான்கு சிறுவர்களைச் சந்தேகத்தின் பேரில் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த கான்ஸ்டபிள், அவர்களை இன்ஸ்பெக்டர் முன்னால் நிற்க வைத்து விவரங்களைச் சொன்னார்.
சிறுவர்களை ஏற இறங்கப் பார்த்தார் இன்ஸ்பெக்டர். மங்கிப்போன நிறங்களில், தொளதொளவென்ற உடைகள் அணிந்து, பார்ப்பதற்குக் கண்றாவியாக இருந்தார்கள்.
விசாரித்ததில், தாங்கள் ஆதரவற்றவர்கள் என்றும், சோறு தண்ணீர் இல்லாமல் தவிப்பதாகவும், உள்ளூரில் தங்களுக்கு ஆதரவு இல்லாமல் போனதால் பிழைப்பதற்காக இந்த ஊருக்கு வந்ததாகவும் சொன்னார்கள்.
அதைக் கேட்க இன்ஸ்பெக்டருக்குக் கஷ்டமாக இருந்தது. பிறகு நான்கு பேரின் விவரங்களையும் கேட்டறிந்து, அவற்றைக் கடிதமாக எழுதி, கையொப்பமிட்டு, கான்ஸ்டபிளிடம் கொடுத்தார். பின்னர், அந்தச் சிறுவர்களைக் கான்ஸ்டபிளின் துணையுடன் சிறார் ஆதரவு இல்லத்திற்கு அனுப்பி வைத்தார்.
அப்போது சட்டென்று ஒரு நினைவு வர, தன் பர்ஸில் இருந்த புகைப்படத்தைப் பார்த்தார் இன்ஸ்பெக்டர். அவர் கண்களில் நீர் சுரக்க ஆரம்பித்தது.
அந்தப் புகைப்படத்தில் காணாமல் போன அவரது ஒரே மகன் சிரித்துக்கொண்டிருந்தான்.
இப்போது மகனின் நிலைமை எப்படியிருக்குமோ என்று எண்ணியபோது, பொத்துக்கொண்டு வந்தது கண்ணீர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன