கஸ்தூரி குருசாமி/முயற்சி வெற்றி தரும்

ரவி, கோபு, சோமு, பாபு ஆகிய நால்வரும் இணைபிரியாத நண்பர்கள். மாலையில் பள்ளி விட்டு வந்ததும் ஆற்றுக்குக் குளிக்கச் செல்வார்கள். நால்வரும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், போகும்போது தத்தம் வீடுகளில் நிலவும் பணப் பற்றாக்குறை, அதனால் பெற்றோர் சண்டை போட்டுக்கொள்வது எனத் தங்கள் வீட்டுக் கதைகளைக் கூறிக்கொண்டே சென்றனர்.
திடீரென ரவி, “நம் வீட்டுப் பிரச்சினைகளுக்கு நாம் ஏதாவது செய்ய முடியுமா?” என்று கேட்டான்.
“டேய், எட்டாம் வகுப்புதானே படிக்கிறோம். நாம் என்ன செய்ய முடியும்?” என்று பாபு கூறினான்.
“பார்ப்போம். நம்மால் என்ன செய்ய முடியும் என்று யோசிப்போம்” என்றான் கோபு.
அடுத்த தெருவில் ஒருவர் தன் மகனிடம், “டேய் ராஜா, நான் வெளியே போக வேண்டும். காரைத் துடைத்து வை” என்று கூறும் குரல் கேட்டதும், கோபு உள்ளே நுழைந்து, “ஐயா, நான் எட்டாம் வகுப்பு படிக்கிறேன். வீட்டில் ரொம்பக் கஷ்டம். தினமும் காலையில் நானே காரைத் துடைக்கிறேன். ஏதாவது பணம் கொடுங்கள், ஐயா” என்றான்.
“இன்று காரைச் சுத்தம் பண்ணு. உன் வேலையைப் பார்த்துக் கூலி தருகிறேன்” என்றார் அவர்.
அவன் வேலையைப் பார்த்ததும் அவருக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. “மாதம் 600 ரூபாய் தருகிறேன். தினமும் வா” என்றார்.
பாபு வேறொரு வீட்டில் காலையில் வாசல் தெளித்து, தோட்டத்துக்குத் தண்ணீர் பாய்ச்சுகிறான். மற்ற இருவரும் செய்தித்தாள்கள் போடச் செல்கின்றனர்.
காலையில் இந்த வேலைகளை முடித்ததும் பள்ளிக்குச் செல்ல அவர்களுக்கு நேரம் சரியாக இருக்கும். பெற்றோரின் சுமையைக் குறைக்க வேண்டும் என்ற நல்ல மனம் இந்த நண்பர்களிடம் இருந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன