
“பண்ணையாரின் பங்களாவுக்குப் போவதற்காகப் போடப்பட்ட ஸ்பெஷல் ரோடு இது. வேறு வண்டி எதுவும் இந்த வளைவுச் சாலையில் வராது. வங்கியிலிருந்து லட்சக்கணக்கில் பணம் எடுத்துக்கொண்டு பண்ணையார் கால் மணி நேரத்தில் காரில் வருவார் என்று நம்ம ஆளிடமிருந்து சேதி வந்தவுடனே, நாம் ரோட்டுக்குக் குறுக்கே பெரிய பாறாங்கற்களைப் போட்டுவைத்துவிட்டோம். அந்தத் திருப்பத்தைத் தாண்டி இருக்கிற கடையில் டீ குடித்துக்கொண்டு காத்திருப்போம். பாறாங்கற்களைக் கடந்து கார் போக முடியாமல் அங்கேயே நிற்கும். அந்த நேரத்தில் சடாரென்று போய், கத்தியைக் காட்டி மிரட்டி, பணத்தை லபக்கிக்கொண்டு ஓடிவிடலாம்” என்று திட்டம் தீட்டி, கடைக்குள் மறைவாக அமர்ந்தனர் இரண்டு வழிப்பறிக் கொள்ளையர்கள்.
பழைய பேப்பர், குப்பைகளைச் சாக்குப் பைகளில் சேகரித்துக்கொண்டு, நகரத்திலிருந்து தங்கள் குடிசைப் பகுதியை நோக்கி நடந்துவந்த நான்கு சிறுவர்கள், வளைவுச் சாலைக்குக் குறுக்கே பெரிய பாறாங்கற்கள் இருப்பதைக் கண்டனர்.
“இருட்டுகிற நேரம். ஏதாவது வண்டி வந்தால் விபத்து ஏற்பட்டுவிடும். வாங்கடா… பாறாங்கற்களைத் தூக்கி ஓரத்தில் போட்டுவிடுவோம்” என்று முடிவெடுத்து, பாறாங்கற்களை அகற்றிவிட்டு நிம்மதியுடன் நடந்தார்கள்.
அடுத்த சில நிமிடங்களில், பண்ணையாரின் கார் எந்தத் தடையுமின்றிக் கடந்து செல்வதைக் கண்டு, கொள்ளையர்கள் ஏமாந்து முழித்தனர்.
