ஜெ. பாஸ்கரன்/உருமாறும் மேகங்கள்

48-ஆவது மாடியில் உள்ள தன் அடுக்குமாடிக் குடியிருப்பின் சோபாவில் அமர்ந்து, தூரத்தில் கலைந்து ஓடும் மேகங்களைப் பார்த்துக்கொண்டிருந்தார் கல்யாணம்.
பழைய புத்தகத்திலிருந்து கீழே விழுந்த பழுப்பேறிய புகைப்படம் ஒன்று — கிராமத்து மண் பாதங்களில் படிய, தோள்மேல் கைபோட்டு, வயலோரம் நடந்து செல்லும் நான்கு சிறுவர்கள். சிங்கப்பூர் மாமா எடுத்த கருப்பு வெள்ளைப் படம். பின்னிருந்து எடுத்ததால், முகங்கள் தெரியவில்லை. மாமரத் தோப்பில் படுத்து, தொங்கும் மாங்காய்களைப் பார்த்தபடி பேசிக் களித்த நாட்கள்.
உயரமாக இருக்கும் கந்து, தும்பிகளின் இறக்கைகளைப் பிடித்து, சிறு கற்களைத் தூக்கவைத்து விளையாடுவான். “பாவம்டா, விட்டுட்றா” என்று சொன்னாலும் கேட்க மாட்டான்!
மாது கிட்டிப்புள் அடிப்பதில் புலி. டபுள்ஸ், டிரிபிள்ஸ் என வித்தை காட்டி, தூர அடித்து நிறைய ஸ்கோர் அள்ளுவான்.
கடைசியில் நிற்கும் சீனு, மாங்காய் அடிப்பதில் கில்லாடி. அவன் வைக்கும் குறி தப்பவே தப்பாது! உப்பு, மிளகாய்ப்பொடியைத் தொட்டு, கண்களைச் சுருக்கி, வாயைக் கூசச் செய்யும் புளிப்புடன் தின்ற மாங்காய்கள்!
மூன்றாவதாக நிற்கும் கல்யாணம், நன்றாக நொண்டியடிப்பான். இவர்கள் செய்யும் குறும்புகளை ரசிப்பான்.
செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் வண்ணத்தில் மாற்றிய புகைப்படத்தில், அவர்கள் ஆப்பிரிக்கச் சிறுவர்களைப் போலிருந்தார்கள். உருவமும் நிறமும் மாறியிருந்தாலும், மனதில் நிழலாடும் இளமைக்காலம் அதே அழகுடன் இருந்தது!
எழுபது வருடங்கள் கடந்துவிட்டன — இப்போது எங்கே, எப்படி இருப்பார்கள்?
இருக்கிறார்களா?
கல்யாணம் குனிந்து, ஒருமுறை தன் செயலிழந்த கால்களைப் பார்த்துக்கொண்டார்.
வானில் மேகங்கள் உருமாறி ஓடிக்கொண்டிருந்தன.

One Comment on “ஜெ. பாஸ்கரன்/உருமாறும் மேகங்கள்”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன