றாலி/ ஊமைச்சி காதல்

சுப்பலக்ஷ்மி அம்மாள் நல்ல மனுஷி. வேதராமய்யர் தங்கக் கம்பி. இருவரும் அடக்கத்தின் அவதாரங்கள். கிராம வாழ்க்கைதான் அவர்களுக்கு ஒத்து இருந்தது. அவர்களுக்குச் சாப்பாட்டுக்கு ஒரு குறைவும் கடவுள் வைக்கவில்லை. வேண்டிய அளவுக்கு மேலேயே இருந்தது. அவர்கள் ஊருக்கு அவர்களே பெரிய மனிதர்கள்.
சுப்பலக்ஷ்மி அம்மாளுக்கு வேறு ஒரு குறைவும் கிடையாது. ஆனால் களங்கமில்லாதது எது? கவலை இல்லாதவர் யார்? அவர்களுக்குப் பகவான் அருளியது ஒரே பெண் சிசு. பெண் பிறந்ததனால் சுப்பலக்ஷ்மி அம்மாளுக்குக் குறை ஒன்றுமில்லை. பெண்ணுக்குத்தானென்ன? தங்கப் பதுமை போலிருந்தாள். சுப்பலக்ஷ்மி அம்மாளின் கவலையும் வேதராமய்யரின் வருத்தமும் அவள் பெண்ணாய்ப் பிறந்ததனால் இல்லை. அவள் பேசாத பெண்ணாய்ப் பிறந்ததுதான் அவர்களுடைய குறை; அவர்களுடைய மனத்தாங்கல்.
எத்தனையோ குழந்தைகள் இரண்டு மூன்று வயது வரையில் மழலைச் சொல் கூட இல்லாமலிருந்து, பிறகு முடிவும் முற்றுப்புள்ளியுமில்லாமல் பேசுவதில்லையா? இந்தக் குழந்தைக்கு வயது ஐந்தாகியும் பேசவில்லை. அத்துடன் அவள் இருந்த விதத்திலும், ஜாடையிலும், உளறலிலும் தெரியவில்லையா? ஊமைதான்.
நிச்சிந்தையாக இருந்தவர்களுக்கு இது ஒரு பெரிய விசாரமாக வந்து குடிகொண்டது. “ஊமைக் குழந்தைக்குப் புருஷன் அகப்பட வேண்டுமே? (பெண் பிறந்தாலே கல்யாணக் கவலை. என்ன வெட்கக்கேடு!) ஆனால் ஊமையாய்ப் பிறந்த பெண்கள் என்ன, கன்னியாஸ்திரீகளாகவே இருந்து விடுகிறார்களா? அது ஒன்றும் கிடையாது. பணத்தைப் பற்றிக் கவலையில்லாதபொழுது நல்ல இடமாகவே பெண்ணுக்குக் கிடைக்கலாம். ஆனால் கல்யாணமாகிப் பெண் வாழும்பொழுது அவள் கணவனோ மற்றவர்களோ அவள் கண் கசங்காமல், அவள் குறையைப் பொருட்படுத்தாமல் வைத்துக்கொள்ள வேண்டுமே?” சுப்பலக்ஷ்மி அம்மாள் இந்தியாவில், அதிலும் தமிழ்நாட்டில் பிறந்துவிட்டு இந்தக் கவலை இல்லாமலிருக்க முடியுமா?

2

அப்பொழுது ஊமைச்சிக்கு வயது ஏழு. ராஜுவும் சின்னப் பையன்தான். பன்னிரண்டு வயது இருக்கும். கோடைகால விடுமுறை நாட்களைக் கழிக்கக் கிராமத்திற்கு மாமா வீட்டிற்கு வந்திருந்தான்.
சுப்பலக்ஷ்மி அம்மாளும் வேதராமய்யரும் அவனை அன்புடன் அழைத்து உபசரித்தார்கள். ராஜு புதிதாகத் தாய் தந்தையரை விட்டுப் பிறர் வீட்டிற்கு வந்ததால் சங்கோசப்பட்டுக்கொண்டு நின்றான்.
ஒரு சிறு பெண் குழந்தை கூடத்தில் ஆனந்தமாய்க் குதித்து விளையாடுவதை அவன் பார்த்தான். இவனைக் கண்டதும் அவள் விளையாட்டை நிறுத்தி இவனை நோக்கினாள். அவன் சங்கோசம் அதிகரித்தது.
இதெல்லாம் வந்த தினத்தோடு முடிந்தது.
மறுநாள் ராஜு ஊமைச்சியுடன் தோட்டத்தில் சந்தோஷமாய் விளையாடியதைப் பார்த்தால், அவர்கள் பிறந்தது முதல் ஒன்றாயிருப்பவர்கள் என்று தோன்றும்.
அம்மா சொன்னதுபோல் வேத மாமாவின் பெண் ஊமைதான் என்று ராஜுவுக்குத் தெரிந்தது. அவளுடைய நுண்ணறிவு அவனுக்கு ஆச்சரியத்தை விளைவித்தது. பேசாமல், கேட்காமல் அவன் எண்ணங்களை அவள் எவ்வாறு அறிந்துகொள்கிறாள் என்றே அவனுக்கு விளங்கவில்லை. ஊமைச்சிக்குத் தனக்கு ஒரு தோழன் கிடைத்ததில் உண்டான சந்தோஷத்தைச் சொல்ல முடியாது.
தினம் தினம் நாட்கள் எவ்வாறு போகின்றன என்று தெரியாமலேயே ராஜு சந்தோஷமாய்க் கழித்தான். விடுமுறை நாட்கள் வெகு வேகமாய் ஓடிப்போயின. ஊருக்குப் போவதற்கு முதல் நாள் ராஜு ஊமைச்சியோடு சுப்பலக்ஷ்மி அம்மாள் முன்னால் வந்து நின்றுகொண்டான். ஊமைச்சியின் இடுப்பில் ஒரு கையைப் போட்டுக்கொண்டான்.
“ஊமைச்சியைத்தான் அம்மாமி, நான் கல்யாணம் செய்துகொள்ளப் போகிறேன். இப்பொழுதே சொல்லிவிட்டேன்” என்றான்.
ஊமைச்சிக்குத் தெரியவில்லையா? அவன் சொல்வதைக் கேட்டு வெட்கப்பட்டுக்கொண்டு தலை குனிந்தாள். அடடா! ராஜுவின் தைரியத்தைப் பாருங்கள். கூசாமல் அவள் நெற்றியில் ஒரு முத்தமிட்டான்.
உள்ளம் குளிர்ந்தாள் சுப்பலக்ஷ்மி அம்மாள். இளமையில் ஜனித்த இவ்வன்பு மாறாமல் ஆயுள் முழுவதும் இருக்க வேண்டுமென்று பகவானை வேண்டிக்கொண்டாள்.

3

ஊமைச்சிக்கு வயதாகிவிட்டது. அவள் கல்யாண விஷயமாய் வேதராமய்யர் ராஜுவின் தந்தை நடேசய்யரிடம் பேசினார்.
ஊமைச்சியை ராஜுவுக்குக் கல்யாணம் செய்துகொள்வதில் காமாக்ஷி அம்மாளுக்கு இஷ்டமில்லை. நடேசய்யரிடம் அவள் பிரமாதமாகச் சண்டையை ஆரம்பித்தாள்.
“வேதம் என்னமோ விளையாட்டாய்ப் பேசுகிறான். கல்யாணம் என்றால் என்ன, இன்றைக்குச் செய்துவிட்டு நாளைக்கு மாற்றக்கூடிய விஷயமா? எனக்கிருப்பது ஒரு குழந்தை. அவனுக்குப் போயும் போயும் ஊமைப் பெண்ணைக் கல்யாணம் பண்ணத் துளிகூடச் சம்மதிக்க மாட்டேன்” என்றாள்.
“ஊமையோ, இல்லையோ, கல்யாணம் பண்ணிக்கொள்ளப் போகிறவன் சம்மதிக்கும்பொழுது உனக்கென்ன? அவன் அல்லவா ஆட்சேபனை சொல்ல வேண்டும்?” என்றார் நடேசய்யர்.
“அவனுக்கு என்ன தெரியும், சின்னப் பையன்? தெரியாமல் உளறுகிறான். நாளைக்கு நாலு பேர் உன் மருமகளுக்கு என்ன பாடத் தெரியுமென்றால் நான் என்ன சொல்வது? ஊமையோடு அவனுக்குத்தான் எத்தனை நாள் காலம் தள்ள முடியும்?” என்று கேட்டாள் காமாக்ஷி அம்மாள்.
“உன்னைப்போல் வாயாடியாயிருப்பதற்கு ஊமையாயிருப்பது மிகவும் நலம். உன் ஆட்சேபனைகளுக்குப் பதில் சொல்ல என்னால் முடியாது” என்று அந்தப் பேச்சை முடித்துவிட்டார் நடேசய்யர்.
ஆனால் அடிமேல் அடிவைத்து அம்மியும் நகர்ந்தது.

4

வேதராமய்யர் வீட்டிற்கு நடேசய்யரும் காமாக்ஷி அம்மாளும் வந்திருந்தார்கள். ராஜு சுவரில் ஒரு காலை மடக்கி வைத்துக்கொண்டு, மற்றொரு காலால் நின்றுகொண்டிருந்தான்.
வேதராமய்யரும் நின்றுகொண்டிருந்தார்.
“ராஜுவுக்குச் சம்மதம்தான். எனக்கும் ஒரு ஆட்சேபனையுமில்லை. ஆனாலும் தெய்வ சம்மதம் எப்படியிருக்கிறதென்று பார்த்துவிடுவோம். இரண்டு சீட்டு எழுதி வேங்கடாசலபதி படத்துக்கு முன்னால் போடுவோம். ‘கல்யாணம் பண்ணலாம்’, ‘கல்யாணம் வேண்டாம்’ என்று இரண்டு எழுதிப் போடுவோம். எப்படி வருகிறதோ பார்ப்போம்” என்றார் நடேசய்யர்.
“சரி, உங்கள் இஷ்டம் போலவே செய்வோம்” என்றார் வேதராமய்யர்.
“அடே ராஜு! நீதான் இரண்டு சீட்டு எழுதடா” என்றார் நடேசய்யர்.
ராஜு சற்றுத் தயங்கினான். பிறகு காகிதம், பேனாவுடன் கீழே உட்கார்ந்தான்.
ஊமைச்சியின் உருவம் அவன் முன்னால் வந்து நின்றது. புன்னகை பூத்தது. காதல் ததும்பும் கண்களைக் காட்டிற்று. உள்ளம் கலந்து ஒன்றாகிய பிறகு வேறு என்ன பரீட்சை வேண்டும்? காதலே கடவுள் சித்தம்தானே? பிறகு கடவுள் உத்தரவு ஏன்? என்று கையில் பிடித்த பேனாவுடன் ராஜு எண்ணமிட்டான்.
“ஏண்டா? எழுதேண்டா” என்று நடேசய்யரின் ஈனக் குரல் அவன் கனவைக் கலைத்தது.
பேசாமல் இரண்டு சீட்டுகளை எழுதினான். மடித்துக் குலுக்கிப் பூஜைப் படத்தின் முன் போட்டான்.
நடேசய்யர் கொஞ்சம் விநோதப் பிரியர்.
“நீதான் அம்மா வந்து, இந்த இரண்டு சீட்டில் ஒன்றை எடு” என்று ஊமைச்சியை அழைத்துச் சொன்னார்.
ஊமைச்சி வெட்கத்துடனும் நாணத்துடனும் வந்தாள். சீட்டில் ஒன்றை எடுத்து வேதராமய்யரிடம் கொடுத்துவிட்டு வேகமாக உள்ளே சென்றாள்.
ராஜு மற்றொரு சீட்டை எடுத்தான். பிரித்துப் பார்த்தான். ‘கல்யாணம் பண்ணலாம்’ என்று இருந்தது. அவ்வளவுடன் அவனுக்கு உலகமே அஸ்தமித்ததுபோலாகிவிட்டது. ஏக்கம் பிடித்து, ஒன்றும் தோன்றாமல் உட்கார்ந்துவிட்டான்.
வேதராமய்யர் ஊமைச்சி கொடுத்த சீட்டைப் பிரித்துப் படித்தார்.
“மனம் போல மாங்கல்யம்! ‘கல்யாணம் பண்ணலாம்’ என்று வந்திருக்கிறது” என்று சொல்லிச் சீட்டை நடேசய்யரிடம் கொடுத்தார்.
ராஜுவுக்குத் தூக்கி வாரிப் போட்டது. அவன் தன்னையே நம்பவில்லை. நடேசய்யரும் சீட்டை மற்றொரு முறை உரக்கப் படித்துவிட்டுப் புன்னகை செய்தபோதுதான் அவனுக்கு நம்பிக்கை வந்தது. இரண்டு சீட்டிலேயும் தான் ஒரே விதமாய் எழுதியிருக்க வேண்டுமென்று அவன் அறிந்துகொண்டான். தன் கையிலிருந்த சீட்டை வாயில் வைத்துக் கடித்து நசுக்கினான்.
“என்னடா? கல்யாணம் என்றவுடன் கழுதையாய் விட்டாயா?” என்றார் நடேசய்யர்.
ஊமைச்சிக்கும் ராஜுவுக்கும் வெகு சம்பிரதாயமாக விவாகம் நடந்தேறியது.

5

மூன்று வருஷங்கள் கழித்து ஊமைச்சிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு ஒரு வயதாகும் வரையில் வெகு கவலையாயிருந்தான் ராஜு. ஒரு வருஷம் முடிந்தவுடன் குழந்தை தன் தாயை எல்லோரும் கூப்பிடுவதுபோலவே “ஊமைச்சி” என்று மழலைச் சொற்களால் கூப்பிட்டபொழுது அவன் அடைந்த ஆனந்தத்திற்கு அளவு கிடையாது.
ஊமைச்சிக்கு இதில் ஒன்றும் அதிசயமாய்த் தெரியவில்லை. ஆனால் அவனுக்குத் தெரியும் அதன் அருமை.
ஊமைச்சியின் பெயர் உங்களுக்குத் தெரியுமா? அவள் பெயர் மதுரபாஷிணி. என்ன அபூர்வமான பெயராயிருக்கிறதே என்று நினைக்கிறீர்களா? அவளே அபூர்வமான பெண்தான். வேண்டுமானால் ராஜுவைக் கேட்டுப் பாருங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன