
கோவில் சென்று வழிபாடு செய்வதில் அறிவியல் உள்ளதா?
எல்லா இடங்களிலும் இறைவன் நிறைந்திருக்கிறான். எங்கிருந்தாலும் அவனை வழிபடலாம் என்ற கருத்து இருந்தாலும், கோவிலுக்குச் சென்று வழிபடும்போது பலன் இரட்டிப்பாகிறது. ஏனெனில், கோவிலில் பிரதிஷ்டை செய்யும்போதே பல மகான்கள் அதற்கான சக்தியை உருவாக்கியுள்ளதால், அங்கு சக்தி அதிகமாக இருக்கிறது.
மேலும், மின்சாரக் கம்பி முழுவதும் மின்சாரம் பாய்ந்தாலும், பல்பில்தான் வெளிச்சம் கிடைக்கிறது. அதுபோல், கடவுளை அவருக்குரிய இடத்தில் நாம் வணங்கும்போது புண்ணியம் பல கோடியாகப் பெருகுகிறது; அருள் பல மடங்கு அதிகரிக்கிறது. மனதில் உள்ள அனைத்தையும் கடவுளின் சந்நிதியில் கூறும்போது கிடைக்கும் நிம்மதி அலாதியானது.
உள்ளே செல்லும்போது, திரிந்துபோகும் பாலைப் போல நம் மனம் கலக்கமடைந்திருந்தாலும், வழிபட்டு வெளியே திரும்பும்போது பாலிலிருந்து கிடைக்கும் நெய்யைப் போல நம் மனம் பக்குவம் பெற்று, நிம்மதி அடைகிறது. இதற்குக் காரணம் இறைவன் மீதுள்ள நம்பிக்கையே.
முக்கியமான மற்றொரு காரணம், கருவறை மூன்று பக்கங்களிலும் மூடப்பட்டு, ஒரு வாசல் மட்டுமே திறந்திருக்கும் அமைப்பில் இருப்பதாகும். இது உள்ளே உருவாகும் ஒலி மற்றும் வெப்ப அலைகளைச் சிதறவிடாமல் ஒருமுகப்படுத்தி, தரிசனம் செய்பவர்களின் மனதை ஒருநிலைப்படுத்த உதவுகிறது.
உண்மையில், வழிபாட்டை முடித்துவிட்டு நாம் கோவில்களில் பிரதட்சிணம் செய்யும்போது, அது ஆன்மிகத்துடன் இணைந்த நடைப்பயிற்சியாகவும் அமைந்து உடலுக்கு நன்மை அளிக்கிறது. மனமும் உடலும் புத்துணர்வு பெறுகின்றன. கோவில்களில் செருப்பு அணியாமல் வெறும் கால்களால் நடப்பதால், பாதங்களில் உள்ள அக்குபிரஷர் புள்ளிகள் தூண்டப்பட்டு ரத்த ஓட்டம் சீராகிறது.
கோவில்களில் அடிக்கும் மணி ஓசை நம் காதுகளில் ஒலித்து, மூளையின் இடது, வலது பகுதிகளைச் சமநிலைப்படுத்துவதன் மூலம், நம் சிந்தனை எதிர்மறை எண்ணங்களிலிருந்து விலகுகிறது. நம்பிக்கை அதிகரித்து, மனம் ஒருமுகப்படுகிறது. நமக்குள் தெளிவு பிறக்கிறது.
அங்கு நடைபெறும் தீபாராதனை நம் கண்களில் படும்போது, கண் பார்வை கூர்மை பெற்று மன அமைதி கிடைக்கிறது. அந்த நேரத்தில் அங்குள்ள பூக்களின் நறுமணம், ஊதுபத்தி, மந்திரங்கள் ஆகியவை நம்முள் ஏற்படுத்தும் அதிர்வலைகள் நம் மனதை அமைதிப்படுத்தி, நேர்மறை எண்ணங்களை அதிகரிக்கச் செய்கின்றன. அது நமது செயல்களுக்கு உரிய சரியான பாதையை நம் மனமே நமக்கு அளிக்கிறது என்றால் மிகையாகாது.
கோவில்களில் தரும் திருநீறு, சந்தனம், குங்குமம் ஆகியவற்றை நம் நெற்றியில், புருவங்களுக்கு இடையில் உள்ள பகுதியில் வைப்பதன் மூலம் அந்தப் பகுதி குளிர்ச்சியடைந்து மன அழுத்தம் குறைகிறது.
எனவே, முக்கிய நிகழ்வுகளுக்கு முன்னர் கோவிலுக்குச் சென்று, இறைவனின் அனுமதியுடன் தொடங்கும் எந்தக் காரியமும் தடையின்றி முழுமையடையும்.
