முக்காடிட்டு வரும்

முக்காடிட்டு வரும்
உன்னைக் கண்டு
“ஐயோ! பூத”மென
பயப்படுவேன் போலியாய்.
கடைவாயில் பொரி ஒட்டி
“பூதமல்ல..ரத்தக்காட்டேரி”
எனச் சிரிப்பாய்
மலர்ச்சியாய்..!
உப்பு, காரம், வெறுப்புப் பண்டம்
அன்புச் சூட்டில் அன்னத்தட்டிலிருப்பினும்
விசிறியடிப்பேன்
ஆத்திரத்தில்..
“எனக்காக
இன்னிக்கு ஒருநாளிது.
நாளைக்கு உன் அவியல். சரியா?”
என உண்ண வைப்பாய்.
அப்பாவின் திட்டுகள்
உன்னால்தானென விரல் நீட்டுவேன்.
“என்னால்தானே?! போறதுபோ”என
நகர்வாய் பெருமனதாய்.
காலைத் தூக்கம்
நீ கலைப்பதாய் கத்துவேன்
கரடியாய்..
ஆயினும் காதருகிலுன்
“எழுந்துக்கோ தங்கமெ”னுமுன்
குரலின்றி விடிந்ததில்லையென்
காலைகள்.
உன் மடியின் மென்மையும்
உன் புடவையின் கதகதப்பும்
எனக்கு
இதுவரை தந்ததில்லை-
எந்தத் தலையணையும் போர்வையும்…
திமிறுமென்
கை காலடக்கிப் புகட்டுவாய்–
பாலாடை மருந்ததனை.
கிடந்துருண்டவனுக்கு
கவிழ்ந்து தவழ்ந்தவனுக்கு
நடை பழக்கி ஓட்டம்
சொல்லித் தந்தாய்.
பள்ளிசெல் காலமுன்பே
நீ சொல்லித்தந்ததே
என் ஆதாரக் கல்வி.
சமர்த்தென
யாரேனுமெனைச்
சொல்லிப்போனால்
நபர் நகர
காலடி மண்ணெடுத்து
ஞாபகமாய் திருஷ்டி கழிப்பாய்.
என் மகிழ்வைக் கொண்டாடி
கோபம் பொறுத்து
அன்பையே பொழிந்து நிற்பாய்.
சிதறுமென் கண்ணீர்த்துளி
மனம் பதறி துடைத்திருப்பாய்.
களைந்தெறிந்த உடை
காலுதறிய காலணி
கலைத்துப் போட்ட புத்தகப்பை
விட்டெறிந்த சிறு பொருட்கள்
அனைத்தும் கணக்கெடுத்து
நாளைக்கென ஒழுங்கமைப்பாய்.
கருவுருவைத் தந்தவுனை
காலுதைத்து அவமதிப்பேன்.
அடிவயிறு வருடி
அன்பு செய்வாய் வலிபொறுத்து.
உன்-
பார்வையில் பிறந்து
பாசத்தில் வளர்ந்து
பரிவதனாலுயர்ந்தாலும்
பயணித்த பாதையெலாம்
நானுதிர்த்த
மனமெய் அசுத்தமெல்லாம்
அசூயை ஏதுமின்றி
அகற்றித் துலக்கி வைப்பாய்.
அம்மா என்றாலே
எனக்கு உயிர்.
ஏனெனில்…
அம்மா
தந்ததே எனக்கு
இவ்வுலகில் உயிர்…!
உலகஞானமேதுமின்றி
வீட்டினுள்ளே முடங்கினாலும்
எத்தனை செய்துள்ளாய்–
எனக்காக உன்தாய்மைப்பணி.
அங்கிங்கெனாதபடி
எங்கெங்கோ சுற்றினாலும்–
அம்மா…!
உனக்காக என்னசெய்திருக்கிறேன்
நான்…???
——-அன்புடன் ஆர்க்கே….!

அம்மா அம்மாதான்.
கைமாறு கருதாமல் நம்மை வளர்த்த ஜீவன்.
இன்னும் கொஞ்சம் உருக்கமாக எழுதினால் போதும், பட்டினத்தாரை எட்டிவிடுவீர்கள்!