
“தென்னையைப்பெத்தா இளநீரு பிள்ளையைப்பெத்தா கண்ணீருன்னு பெரியவங்க சும்மாவா சொன்னாங்க. இந்தக்காலத்துல பிள்ளைகளைப்பெத்து வளர்த்தா கண்ணீர் மட்டும்தான் மிச்சம்” ரேவதி தொலைக்காட்சியில் அந்தப்பெண்மணி பேசிய பேச்சில் மூழ்கியபடி இருந்தாள்.
“எனக்குப்புரியலை இத்தனை துணி எப்படி விழுகுது? என்னைப்பார்த்தா என்ன வண்ணான் மாதிரி தெரியுதா? எப்பப்பாரு அங்கங்க துணிகளை கழட்டிக்கழட்டிப்போட வேண்டியது நான் பின்னாடியே போய் எடுத்து தோய்க்க வேண்டியது. என்னால முடியல.” சுந்தர் புலம்பியபடி வரவும்,
“ஏங்க! மெஷின் தானே தோய்க்குது? ஏதோ நீங்களே கையால தோய்க்கற மாதிரி ஏன் இப்படி புலம்பறீங்க?”
“சொல்லுவ சொல்லுவ நீ ஏன் சொல்ல மாட்ட? உன் பசங்களுக்கு எப்பவும் வக்காலத்து வாங்கறதே உன்னோட பொழப்பாப்போச்சு. அவங்கள ஒரு வார்த்தை சொன்னா எங்கிருந்துதான் உனக்கு மூக்குல வேர்க்குதோ தெரியல. சரி துணிய அவுத்து அவுத்துபோடறாங்களே..! அதைத்தூக்கி அந்த மெஷின் மேல போட்டாத்தான் என்ன? அதைக்கூட நான்தான் பொறுக்கிட்டு வரணுமா?”
“இது நியாயமான பேச்சு. நான் நம்ம பசங்ககிட்ட சொல்றேன். சொன்னா அவங்க கேப்பாங்க. துணிய துவைக்கற எடத்துல போடறதுதான் நியாயம்.”
“ஆமா! பெரிய நியாயத்தைக்கண்டுட்டா. இந்தப்பசங்களை நம்பி நம்பி இவ என்ன ஆகப்போறாளோ! எப்பதான் இவளுக்கு புத்தி வருமோ..! சுந்தர் தனக்குள் முனகிக்கொண்டான்.”
“என்ன? என்ன முணுமுணுக்கறீங்க?”
“ஒண்ணுமில்ல. நீ டிவியைப்பாரு அந்த அம்மா பேசற பேச்சாவது உன் புத்தியைக்கழுவுதான்னு பாக்கலாம்.”
“ஆமாமா! யாரோ எதுவோ உளறுவாங்க அதைப்பாக்கறதுனால அதையெல்லாம் நாம நமக்குன்னு நினைச்சுக்கணுமாக்கும்?”
“உன்னையெல்லாம் திருத்தவே முடியாது.” சுந்தர் அங்கிருந்து நகர்ந்தான்.
அடுத்தவாரத்தில் ஒருநாள்,
“ஏங்க நம்ம பையனை கும்பகோணம் காலேஜில் சேக்கறதுக்கு முன்னாடி அந்த ஊருல இருக்கற எங்க பெரிய அத்தையைப் பார்த்துட்டு போலாங்க.”
“மூட்டை முடிச்செல்லாம் தூக்கிட்டு அங்க வேற எதுக்கு அலையணும் ரேவதி? தேவையா இதெல்லாம்?”
“இல்லைங்க. நம்ம ரெண்டுபேரோட அம்மா, அப்பாவும் இல்லாத இந்த நேரத்துல வீட்டுக்கு மூத்தவங்க அவங்க. அவங்களைப்பார்த்து வணக்கம் வெச்சா நமக்குத்தாங்க நல்லது!”
“சரி போகலாம். அவங்ககிட்ட பேசி அவங்க முகவரியை வாங்கிக்கோ.”
“சரிங்க.”
அந்த ரயிலடி மக்கள் கூட்டத்தால் நிரம்பியிருந்தது.
கும்பகோணம் புறப்படவேண்டிய அந்த ரயிலும் அப்படியே அவரவர் இருக்கையிலிருந்து அசையமுடியாதபடியொரு நெருக்கம் அதில் குட்டிக்குழந்தையைதூக்கியபடி ஒரு குடும்பம் ரேவதி, சுந்தர், இரு மகன்கள் கூடவே ஒத்தைக்கிளியாக ஒரேயொரு முதியவர்.
வெய்யில் கொளுத்தியெடுத்த அந்த நெருக்கடியான பயணத்தில் வியாபாரிகளும் ரேவதியின் சின்ன மகனும் மட்டும் குதூகலமாக இருந்ததுபோல அவளுக்குள் ஒரு எண்ணம்.
சின்னவன் வரும், போகும் ஒரு தீனியையும் விடுவதாக இல்லை. பயணங்களில் சந்தோஷமாக கேட்பதைமட்டுமல்லாமல் கேட்காததையும் வாங்கித்தரும் சுந்தரே ஒருகட்டத்தில் சோர்ந்து போனான். வழக்கம்போல ரேவதியிடம் முனகினான்.
“இந்தப்பசங்கள்லாம் பெத்தவங்களோட கஷ்டத்தை எப்போ புரிஞ்சுக்குவாங்களோ தெரியல. சளைக்காம ஒண்ணொண்ணா கேக்கறான் பாரு. நானும் பொறுமையா சொல்றேன் அவன்காதுல ஒண்ணுகூட விழமாட்டேங்குது.”
“சரி விடுங்க. குழந்தைதானே! கொஞ்சநாளானா சரியாப்போயிடும்.”
“நீ முட்டுக்கொடுக்கறத எப்போ விடுவியோ.”
“குழந்தைகளை கரிக்காதீங்க.”
இவன் படுத்தறது போதாதுன்னு அந்தப்பெரியவரப்பாரு. கொஞ்சமாவது அசையறாரா? சின்னஞ்சிறு குழந்தையை வெச்சுக்கிட்டு எதுத்தாப்புல அவங்க வேற அவஸ்தைப்பட்டுக்கிட்டு இருக்காங்க. இந்த மாதிரி எடத்துல அப்படி, இப்படி கொஞ்சம் வளைஞ்சு குடுத்தாதானே பிரயாணம் கொஞ்சம் சுளுவா போகும்? இறுக்கமா அப்படியே உட்கார்ந்து எனக்கென்னமோ சரியா படல.
“சரி விடுங்க இன்னும் ஒரு நாலுமணிநேரம். பொறுத்துக்கோங்க.”
குழந்தை திடீரென கதறி அழ ஆரம்பித்தது. தாய்ப்பால் கொடுக்கவேண்டும். ரேவதியும் சுந்தரும் இடத்தை மாற்றி அந்தப்பெண்மணியை ஜன்னலோரம் அமரவைத்து ஒருவழியாக அந்தக்குழந்தை பசியாற வசதி செய்து குடுத்தபோதும் அந்தப்பெரியவர் அதே இடத்தில் அதே இறுக்கத்துடன் அமர்ந்திருந்தார்.
சூடான சமோசா சின்னவன் மூக்கை முதலில் துளைத்து பின் அது குரலாக வரவும்.
“அப்பா! சமோசா!”
“கொதிக்க கொதிக்க அந்த சமோசாவை அனைவரும் உண்டனர்.”
“அது ரயில் இப்படி அப்படி ஆடிக்கிட்டே போகுதுல்லேங்க! அப்போ நம்ப உடம்பும் ஒரு லயத்தோட ஆடும் கவனிச்சிருக்கீங்களா? அதனால நமக்கு சட்டுன்னு ஜீரணம் ஆகிடும். சாதாரணமா நாலு இட்லி சாப்பிடற நாம ரயில் பயணத்துல கொஞ்சம் கூடுதலா சாப்பிடுவோம். நான் சொல்றது சரிதானே?”
சுந்தர் சிரித்தபடி எதிரிலிருந்த மனிதனிடம், “தன்னோட பசங்களுக்காக என் மனைவி இப்படித்தான் விதவிதமா முட்டுக்கொடுப்பா. நானும் அதைக்கேட்டு அமைதியாகிடுவேன். இதுதான் எங்க வீட்டுல எப்பவும் வழக்கம்.”
“அச்சச்சோ! நான் முட்டுக்கொடுக்கலீங்க. உள்ளதைத்தான் சொன்னேன்.”
நீ சொன்னாலும் சொல்லாட்டியும் நான் சொல்றதுதான் நிஜம். உன் பசங்க ரெண்டும் வீட்டுல ஒட்ட ஒட்ட கிடப்பானுங்க. வீட்டு வாசப்படி தாண்டினா போதும் இல்லாத பசியெல்லாம் வந்துடும்.
“சூ! பசங்க சாப்பிடறதைப்பாத்து கண்ணு போடாதீங்க.”
“பார்த்தீங்களா? இவ இப்படித்தான். இதுமட்டுமல்ல தன்னோட குழந்தைங்க ஏதோ தனக்காக கோட்டை கட்டப்போறாங்கன்னு நினச்சுக்கிட்டிருக்கா. இந்த நினைப்புதான் அவ பொழப்பை கெடுக்கப்போகுதுன்னு அவளுக்குப்புரியல.”
எதிரிலிருந்த மனிதன் சுந்தரிடம், “இவங்க மட்டும் இல்லேங்க. என் மனைவியும் அப்படிதான். நான் நினைக்கறேன் எல்லா அம்மாக்களும் ஒரே மாதிரிதான் இருப்பாங்க போல.” தன் பங்குக்கு அவனும் சுந்தருக்கு ஒத்து ஊதினான்.
பால்குடித்த குழந்தை தூங்கிவிட்டது. அந்தப்பெண் வசதியாக அமர வழி செய்தபடி ரேவதி தன் இருப்பை குறுக்கிக்கொண்டாள். அப்பொழுதும் அந்தப்பெரிய மனிதர் தன் இருக்கையிலிருந்து துளியும் அசையாமல் ஆஜானுபாகுவாக அமர்ந்திருந்ததைப்பார்க்க ரேவதிக்கும் கொஞ்சம் வித்தியாசமாகத்தான் தெரிந்தது.
அடுத்தபடியாக தக்காளி சூப் வரவும்,
சின்னவனுடன் அடுத்த வாக்குவாதம் தொடர்ந்தது.
“அந்த சூப் பச்சைத்தண்ணியா இருக்குடா. நாம வீட்டுல பண்ணற சூப் எப்படி இருக்கும்? இது வேண்டாண்டா கண்ணா!”
“ம்ஹும். எனக்குப்பிடிக்கும்.”
“சொன்னா கேளு. காசுக்குப்பிடிச்ச கேடு.”
சுந்தர் கொஞ்ச நேரம் போராடி விட்டு வாங்கிக்கொடுத்தான்.
சின்னவன் அடம்பிடித்து வாங்கிய ஒவ்வொன்றும் பெரியவனுக்கும் கேட்காமலே கிடைத்தது. “டேய்! எப்பப்பாரு நான்தான் அடம்பிடிச்சு வாங்கணுமா? நீயும் ஒண்ணு ரெண்டு கேட்கலாம்ல?”
“உன்னோட சாமர்த்தியம் எனக்கு வராதுடா. எனக்கு கத்தி அழுது வாங்கித்தான் பழக்கம். நீ பேசிப்பேசியே காரியத்தை சாதிச்சுக்கற. நான் காலேஜ் சேரப்போற இந்த வயசுல அழுது அமர்க்களம் பண்ணினா நல்லாவா இருக்கும்?”
இவர்கள் பேசுவதைக்கேட்டபடி வந்த ரேவதி, “அதைத்தான் நெல்லுக்குப்பாயறது புல்லுக்கும் பாயும்னு சொல்லுவாங்க. அவன் கேட்டா உனக்கும் கிடைக்குது.”
“ஆமா இதுல பழமொழி ஒண்ணுதான் குறைச்சல்.” சுந்தர் அலுத்துக்கொண்டான்.
ரயில் ஒருவழியாக கும்பகோணத்தை நெருங்கியது.
ஏழு மணிநேரப்பயணத்தை அமர்ந்தபடியே கழித்ததில் எழுந்த சோர்வை சுந்தர் எழுந்து நின்று உடம்பை வளைத்து சற்றே போக்கிக்கொண்டான். பெட்டி படுக்கைகளை எடுத்துக்கொண்டு ஒருவரையொருவர் கைகுலுக்கியபடி விடைபெற்றுக்கொண்டனர். அப்பொழுதும் அந்தப்பெரியவர் ஒருவார்த்தை பேசவில்லை. வண்டி நின்றவுடன் எழுந்து சென்றுவிட்டார்.
சுந்தர் குடும்பத்துடன் ரேவதியின் பெரிய அத்தை வீட்டிற்குச் சென்றனர் அன்று அந்த இரவை அங்கு கழிக்கத்திட்டம்.
அது ஒரு பெரிய அடுக்குமாடிக்குடியிருப்பு.
நான்கு மாடிகள் கொண்ட அந்தக்குடியிருப்பில் மூன்றாவது மாடியில் பெரிய அத்தை இவர்களை வாய் நிறைய வரவேற்றாள்.
மத்திய அரசு அலுவலகத்தில் வேலை பார்த்து பணி ஓய்வு பெற்ற அவள், தன் கணவர் இறந்தபிறகு இந்தக்குடியிருப்புக்கு வந்து ஒருவருடமாகிறது. அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. அவ்வப்போது ரேவதியின் இல்லத்திற்கு வந்து ஒருவாரம் தங்கிவிட்டுப்போவது அவள் வழக்கம்.
அறுபது வயது கடந்த முதியவர்களுக்கான அந்தக்குடியிருப்பு அவர்களுக்காகவே வடிவமைக்கப்பட்ட ஒரு அமைப்பு. வரவேற்பறை, குளியலறை, படுக்கையறை, சமையலறை, பால்கனி கொண்ட அழகான அந்தச்சின்ன வீடு அவள் ஒருத்திக்கு தாராளம்.
அன்று இரவு உணவை அங்குள்ள காண்டீனிலிருந்து அத்தை வரவழைத்திருந்தாள். சப்பாத்தி, ஊத்தப்பம், இடியாப்பம். மூன்றும் அதற்கான துணை உணவுகளுடன் எண்ணெய், உப்பு, காரம் அளவாக சேர்க்கப்பட்டு வயிற்றுக்கு இதமாக இருந்தது.
குளிரூட்டப்பட்ட அந்த அறையில் குழந்தைகள் அத்தையுடன் கட்டிலிலும், சுந்தரும் ரேவதியும் தரையில் படுக்கையை விரித்து அன்று இரவு பயணக்களைப்பு தீர நிம்மதியான உறக்கத்தில் கழிந்தது.
மறுநாள் ரேவதியும் அத்தையும் காலையில் அந்த வளாகத்திற்குள் காலாற நடந்தனர்.
நூலகம், உடற்பயிற்சிக்கூடம், முதலுதவிக்கு மருத்துவர், செவிலியர், உணவுக்கூடம், பூங்கா, சின்னதாக ஒரு கோவில், தியான மண்டபம், என்ன இல்லை அங்கு?
காலை உணவாக பூரி, பொங்கல், வடை அவர்கள் இருப்பிடம் தேடி வந்தது. ரேவதிக்கு ஆச்சரியம். ‘தினம்தினம் சட்டியைச் சுரண்டும் வாழ்க்கையிலிருந்து இந்த வாழ்க்கைக்கு மாறினால் நல்லாத்தான் இருக்கும்போலயே. அப்பப்போ தேவைப்பட்டா சமைச்சுக்க சமையல் அறையுடன் ஒரு வீடு. சந்தேகமே இல்லாமல் இது சொர்க்கம்தான்.’
ரேவதி மனதிற்குள் நினைத்துக்கொண்டாள் அதை அத்தையிடம் பகிரவும் செய்தாள். அத்தைக்கு அவளின் வார்த்தை சந்தோசம் தந்தது. “ரேவதி! சொல்ல மறந்துட்டேனே! இங்க அழகுநிலையம் கூட இருக்கு. அங்க மசாஜ் சேர் இருக்கும். அப்பப்போ அங்க வந்து மாஸாஜ் பண்ணிப்பேன். இங்க சர்க்கரை வியாதி உள்ள வயசானவங்க அவங்க கால்களை பெடிக்யூர் பண்ணிப்பாங்க. மதியம் சாப்பிடப்போகும்போது அந்த இடத்தைக்காமிக்கறேன்.” அத்தை குதூகலமாக விவரித்தபடி இருந்தாள்.
மதியம் சாப்பாட்டுக்கூடம் வயதானவர்களால் நிரம்பியிருந்தது. சின்னவனைப்பார்த்ததும் அந்தப்பெரியவர்களுக்கு சொல்ல முடியாத சந்தோசம். போவோர் வருவோர் அவனைக்கொஞ்சியபடி இருந்தனர். “குழந்தைக்கு வேணுங்கறதை கேட்டுப்போடுப்பா.” அவனுக்கு ஏக கவனிப்பு.
சாப்பிட்டு முடித்து அத்தையை நமஸ்கரித்தபின் கல்லூரிக்கு கிளம்பினார்கள்.
செல்லும் வழியில் ரேவதி தன் கணவனிடம்,
“பேசாம நாமளும் நம்ம கடைசி காலத்துல இங்க வந்துட லாங்க. எவ்வளவு வசதியா இருக்கு பாருங்க! நிம்மதியா நம்ம கடைசி காலத்தைக்கழிக்கலாமே! இந்த இடம், வீடு, எல்லாம் அருமையா இருக்கு. இல்லடா பசங்களா?”
அதைக்கேட்டு இருவரும் ஒருசேர, “எப்படிம்மா அந்த இடத்தை நல்லா இருக்குன்னு சொல்ற? எங்களுக்குப்பிடிக்கவே இல்லை. அங்க எல்லா தாத்தா பாட்டிகளையும் பார்த்தா பாவமா இருக்கு. வயசான காலத்துல இவங்க ஏன் தனியா இருக்கணும்? நீங்க இங்க வரணும்னு ஆசைப்படறதைப்பார்த்தா ஆச்சரியமா இருக்கு. என்னைப்பார்த்தோன்ன எல்லாரும் எப்படி நடந்துக்கிட்டாங்க. அவங்கவங்க பேரப்பசங்க நியாபகம் வந்தமாதிரி எல்லாருக்கும் கண்ணெல்லாம் கலங்கிப்போச்சு. ஆமாம்மா! தம்பி சொல்றது சரிதான் அவங்க கண்ணெல்லாம் கலங்கித்தான் போச்சு.”
குழந்தைகள் இருவரின் ஒருமித்த குரல் ரேவதி, சுந்தரை ஆச்சரியப்படுத்தியது.
ரேவதிக்குள் ஒரு குறுகுறுப்பு,
சின்னவனைப்பார்த்து, “நாம வரும்போது நம்மகூட ஒரு வயசானவர் வந்தாருல்ல? அவரைப்பத்தி என்ன நினைக்கற?”
“அச்சோ! பாவம்மா அவரு. வழி பூராம் நாம என்னல்லாம் வாங்கி சாப்பிட்டோம்? நீங்க அவரை அப்போ கவனிச்சீங்களா? ஒரு சாமானைக்கூட வாங்கி சாப்பிடல. பச்சைத்தண்ணி கூட அவர் குடிக்கல. முழுசா ஏழுமணிநேரம் அப்படியே உட்கார்ந்தவர் உட்கார்ந்த இடத்துல அசையாம இருக்கறது எவ்வளவு கஷ்டம்? அவருக்கு குழந்தைகள் இல்லையா? இவரை இப்படித் தனியா அனுப்பறது தப்புன்னு அவங்களுக்கு ஏன் தோணவே இல்லை? சாப்பிடக்கூடாது, சாப்பிட்டா பாத்ரூம் வரும், தண்ணி குடிச்சா அவசர அழைப்பு வந்துடும்னு அவர் பல்லைக்கடிச்சிக்கிட்டு உட்கார்ந்திருந்தமாதிரிதான் எனக்குத் தோணிச்சு. சே! ரொம்பப் பாவம்.”
ரேவதியும் சுந்தரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். ‘நாம நம்ம தாய்தகப்பனை பார்த்துக்கொண்டோம் நம்மளையும் கடவுள் கைவிடமாட்டார்னு நாம நம்பினோம்தான் ஆனால் நம்ம குழந்தைகள் நம்மளைத்தாண்டி இப்படிக்கூட யோசிப்பாங்கன்னு நமக்கு இவ்வளவு நாள் தெரியாமப்போச்சே! விதை ஒண்ணு போட்டா சுரை ஒண்ணா முளைக்கும்? அது சரியாதான் முளைச்சிருக்கு நாமதான் இத்தனைநாள் தப்பாப்புரிஞ்சுக்கிட்டோம்.’ சுந்தரின் கைகள் தன்னையறியாமல் சின்னவனின் தோள்களை அணைத்துக்கொண்டன.
