
சாரல்! நூலகத்திலிருந்து வெளிவந்த எழுத்தாளர் அம்புஜம், பஸ் ஸ்டாப் வரை போக வேண்டும். பின்னால் வந்த வாசகர் ஒருவர் தன்னுடைய குடையை நீட்டினார்.
“நீங்களும் வாங்க” என்றார் அம்புஜம்.
இருவரும் நடக்க ஆரம்பித்தனர்.
“மேம், தப்பா நினைக்காதீங்க. உங்க கதைகளில் அடிக்கடி குடிகாரன், மனைவியைக் கொடுமைப்படுத்தும் ஆண் பாத்திரங்கள் வருதே! அந்த அளவுக்கு உண்மையில் இல்லையே?”
“அந்த அளவுக்குக் கிடையாது. கதைகளில், டிவி டிஆர்பி ரேட்டிங்குக்காக வசனம் எழுதுவதுபோல மிகைப்படுத்தித்தான் எழுதுகிறேன். அதற்குத்தான் வரவேற்பு அதிகம். உண்மையில் நான் பார்த்த நிறைய ஆண்கள் ரத்தினங்கள். இப்போது நீங்கள் குடை தருகிறீர்கள். பஸ்ஸில் என் வெள்ளை முடியைப் பார்த்து ஆண்கள்தான் சீட் தருவார்கள். பெண்கள் தந்ததே இல்லை. கஷ்ட காலங்களில் ஆண் நண்பர்கள்தான் உதவி செய்தார்கள். பெண்கள் அபூர்வம். எங்க அப்பாவுக்கு நான் என்றால் உயிர். ‘என்ன வேண்டுமானாலும் படி; கடன் வாங்கியாவது படிக்க வைக்கிறேன்’ என்றார். ஐ லவ் ஜென்ட்ஸ்!”
பஸ் வந்தது. நன்றி சொல்லி விடைபெற்றார் அம்புஜம்.
ஏதோ தவறு செய்கிறோம் என்பது அவருக்குப் புரிந்தது. ‘இத்தனை பேர் குடிக்கிறார்கள்; நாமும் குடித்தால் என்ன?’ என்று தன் வாசகர்களில் சிலர் மாறிவிடுவார்களோ என்று இப்போதுதான் அந்தக் கதாசிரியைக்குப் புரிந்தது!
