லலிதா சங்கர்/அக்கறை

வத்சலாவும் மோகனும் அந்த மண்டபத்தை விட்டு வெளியே வந்தனர்.
“வச்சு! சாப்பாடு அருமையா இருந்ததுல்ல?”
“ஆமாம், நல்லாத்தான் இருந்தது. இருந்தாலும், நீங்க அந்த ரசமலாயை ஒண்ணுக்கு ரெண்டா வாங்கி மொசுக்கியிருக்க வேண்டாம்.”
“சாப்பிடக்கூடாதுன்னுதான் நினைச்சேன். ஆனால், நாக்கு கேட்டது. தட்ட முடியல.”
“ஓ! நாக்கு உங்க காதுல வந்து சொல்லிச்சோ?”
“அச்சச்சோ! மழை வருது. வச்சு! நல்லவேளை குடை எடுத்துட்டு வந்தேன். குடைக்குள்ள வா, வச்சு!”
“என்ன, வச்சு! உள்ள வா! மழையில நனையற பாரு!”
“அய்யய்யோ! அப்புறம் ஜலதோஷம் பிடிக்கும்; ஜுரம் வரும். உடம்பைப் பத்திரமாப் பார்த்துக்கணும், வச்சு!”
வீட்டிற்குள் வந்ததும்,
“வச்சு, முதல்ல புடவையை மாத்து. தலை வேற நனைஞ்சுடுச்சு. நான் வேணா துவட்டிவிடவா?”
துண்டுடன் வரும் மோகனைப் பார்த்து,
“இங்க குடுங்க. நானே துடைச்சுக்கறேன்.”
“வச்சு! இங்க ஒரே ஈரமா இருக்கு. நடக்கும்போது பார்த்து நட. விழுந்துடப்போற!”
மோகன் வத்சலாவை வாத்சல்யத்துடன் பார்த்தான்.
வத்சலா மோகனைப் பார்த்து, “இங்க பாருங்க, எனக்குச் சளி பிடிச்சாலும், ஜுரம் வந்தாலும் உங்களுக்குச் சமைச்சுப் போட்டுடறேன். போதுமா? அதுக்குத்தானே என் மேல இவ்வளவு அக்கறைப்படறீங்க? போதும் உங்க அக்கறை. தள்ளுங்க, டீ போடணும்!” என்று வெடுக்கெனச் சமையலறை நோக்கி நகர்ந்தாள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன