
வெளியில் பேய் மாதிரி மழை கொட்டிக்கொண்டிருந்தது. எதிரில் சுடச்சுடப் பொன்னிறமான வெங்காயப் பக்கோடாவையும் சூடான டீயையும் அன்னம்மா வைத்துவிட்டுப் போனாள். எதுவும் பிரியாவுக்கு ருசிக்கவே இல்லை.
அவள் எதிர்பார்த்த காதல் வாழ்க்கைதான் என்ன? கல்யாணமான புதிதில் தெரிந்த உல்லாச உலகம் மிகவும் இனிப்பாகத்தான் இருந்தது. பிறகு, அவள் கணவன் வினித் பார்ட்டி, மீட்டிங், பிசினஸ் என்று எப்பொழுதும் பிஸியாகவே இருக்கிறான். இவளுக்குத் தனிமைதான் துணை.
உடனேயே காரை எடுத்துக்கொண்டு தன் அம்மா வீட்டிற்குச் சென்றாள்.
அம்மாவும் அப்பாவும் எப்பொழுதும் ஒரு கடமையைப் போல வாழ்க்கை நடத்தியவர்கள். ஒரு கனிவான பார்வையோ, வார்த்தைகளோ இருவரிடமும் கிடையாது. அதனால், தன்னுடைய வாழ்க்கை எப்பொழுதும் உல்லாசமும் காதலும் வசதியும் நிறைந்ததாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தாள்.
ஆனால், இப்பொழுதோ தனிமை பல நாட்களாகத் தொடர்கிறது.
பால்கனியில் இருந்து வெளியே எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தாள். ஒரே குடையில் அவளது பெற்றோர்!
வெளியில் சென்ற அம்மாவை அழைத்து வரச் சென்ற அப்பா, மழையில் அம்மா நனையாமல் பார்த்துக்கொள்ளும் பாங்கில் தெரிந்த காதல் பிரியாவுக்குப் புரிந்தது.
வயதானாலும் இந்தக் காதல் இளமையானது. அவளுக்கு அது இப்பொழுது நன்றாகப் புரிந்தது.
