
சுமதி சன்னலுக்கு வெளியே பார்த்துக்கொண்டிருந்தாள். சவலைக் குழந்தையின் சிணுங்கலைப் போல மழை பெய்துகொண்டிருந்தது.
வெளியே ஒரு வயதான தம்பதியர் கையில் குடையுடன் மெதுவாக வந்துகொண்டிருந்தனர். இந்த வயதிலும் அவர்களது முதிர்ந்த காதலின் பூரிப்பு அவர்கள் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.
மழை வலுக்கவே, அவர்கள் சுமதியின் வீட்டு தாழ்வாரத்தில் ஒதுங்கினார்கள்.
சுமதி, அவர்களை உள்ளே அமரச் சொல்லி, “அவசரமான வேலையாகப் போகிறீர்களா?” என்று விசாரித்தாள்.
“அதெல்லாம் ஒன்றும் இல்லை. சாரல் நேரத்தில் திடீரென முக்குக் கடையில் தேநீர் அருந்த வேண்டுமென்ற ஆசை அவருக்கு. ஆஸ்துமா பாதிப்பு வேறு! ‘வேண்டாம்’ என்றால் கேட்டால்தானே! பிடிவாதக்காரர்! அவர் நினைத்ததும் நெருப்பிலே மழை பெய்யணும். எப்பவுமே அவர்தான் ஜெயிக்கணும். அவருக்கு! எனக்கும் அவரை ஜெயிக்க விடுவதில்தான் சந்தோஷம்.
ஒரு சாரல் நாளில்தான் அவர் என்னைப் பெண் பார்க்க வந்தார். கிணற்றடியில் கையில் டீ கோப்பையுடன், ‘என்னைத் திருமணம் செய்துகொள்ளச் சம்மதமா?’ என்று கேட்டார்.
அந்த நினைவில், மழை நாளும் தேநீர் அருந்துதலும் மனோகரமான விஷயங்களாகிவிட்டன எங்களுக்குள்.
சரிம்மா! இருட்டுவதற்குள் வீடு போய்ச் சேரணும்” என்றபடி எழுந்தாள் முதியவள். இருக்கையிலேயே உறங்கிவிட்ட தன் கணவரை எழுப்பியபடி.
